சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி 2வது குறுக்குத் தெருவில் வசிப்பவர் மதுவந்தி. பிரபல நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளான் இவர், பாஜகவில் செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை வாங்குவதற்காக கடந்த 2016ல் ‛இந்துஜா லைலண்ட் பைனான்ஸ்’ என்கிற நிதி நிறுவனத்திடம் ரூ.1 கோடி கடனாய் பெற்றார். அதற்கு செலுத்த வேண்டிய மாத தவணையை சில மாதங்கள் மட்டும் செலுத்திய மதுவந்தி, அதன் பின் முறையாக தவணை கட்டவில்லை. 


தவணையை திரும்ப செலுத்தக்கோரி சம்மந்தப்பட்ட பைனான்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் மதுவந்தியிடம் கூறியுள்ளனர். ஆனால், அவர் தவணை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தார். இதைத் தொடர்ந்து அவர் பெற்ற கடனுடன் சேர்த்து வட்டித் தொகை சேர்ந்ததாகவும், ரூ.1.22 கோடியாக அது எட்டியுள்ளதாகவும், அதை உடனே செலுத்த வேண்டும் எனக்கூறி, மதுவந்திக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதன் பின்பாக நோட்டீசுக்கு பதில் அளித்த மதுவந்தி, ‛தான் வங்கி ஒன்றில் கடன் தொகைக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், அது கிடைத்ததும், தொகையை செலுத்தி விடுவதாக’ உறுதியளித்துள்ளார். அதிகாரிகள் அதற்க அவகாசம் அளித்த நிலையில், மதுவந்தி சொன்ன சொல்லை காப்பாற்றவில்லை.






இதைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட நிதி நிறுவனம் சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் கடந்த 2018 ல் மதுவந்தி மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் முடிவில், மதுவந்தியின் வீட்டிற்கு சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த நடவடிக்கைக்கு போலீஸ் தரப்பில் ஒத்துழைப்பு இல்லாததால், சீல் வைக்கும் நடவடிக்கை  தள்ளிப்போனது. அதை நீதிமன்றத்தின் கவனத்திற்கு மீண்டும் கொண்டு வந்த சம்மந்தப்பட்ட நிதி நிறுவனம், நீதிமன்றம் உத்தரவிட்டபடி அந்த வீட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தது. 


நிதி நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், மதுவந்தி வீட்டை பூட்டி சீல் வைக்க அனுமதியளித்தது. இதைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன் மதுவந்தி வீட்டை அதிகாரிகள் சீல்வைத்ததும், அப்போது அவர் அவர்களிடம் கெஞ்சியதும் வீடியோவாக வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் சம்மந்தப்பட்ட மதுவந்தியின் வீட்டை ஏலம் விட்டு விற்பனை செய்து, அதன் மூலம் பணத்தை பெற நிதி நிறுவனம் முடிவு செய்துள்ளது. 




அதற்கான அறிவிப்பையும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஏலத்தில் பங்கு பெற ரூ.15 லட்சம் வைப்புத் தொகை செலுத்த வேண்டும். ஏலத்திற்கு வரும் சொத்தின் அடிப்படையில் அந்த வீட்டின் விலையாக ரூ.1.50 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலவரப்படி சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு மதுவந்தி செலுத்த வேண்டிய பாக்கித் தொகை ரூ.2.02 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண