ஜனவரி 12 -  ஆரோவில் மஞ்சு விரட்டு


புதுச்சேரி-தமிழக எல்லையான விழுப்புரம் மாவட்டம் வானூரில் அமைந்துள்ள சர்வதேச நகரமான ஆரோவில்லில் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் ஏராளமான வெளிநாட்டினர் கலந்துகொண்டனர். 



பிப்ரவரி 10 - தம்பதியை அடைத்து வைத்து நகை, பணம் கொள்ளை 


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சின்னநெற்குணம் கிராமத்தில் அஞ்சலக ஊழியர் வெங்கடேசன் என்பவரின் வீட்டின் பின்புற கதவினை உடைத்து முகமூடி அணிந்த ஆறு பேர் கத்தியை காட்டி மிரட்டி 12.5 சவரன் நகை மற்றும் 65ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றனர்.



மார்ச் 15 - கல்வெட்டுடன் கிடைத்த 10-ஆம் நூற்றாண்டு கல் செக்கு


செல்லங்குப்பம் கிராமத்தில் அரசு கல்லுாரி உதவி பேராசிரியர்கள் ரமேஷ், ரங்கநாதன் தலைமையிலான குழுவினர் கள ஆய்வில் 10-ஆம் நூற்றாண்டை சேர்ந்த எழுத்து பொறிப்புடன் கூடிய கல் செக்கு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.



ஏப்ரல் 23 - பெரும்பாக்கம் ரசாயன தொழிற்சாலை தீ விபத்து 


திண்டிவனம் அருகே உள்ள பெரும்பாக்கம் கமாண்டர் தின்னர் தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலையில் எதிர்பாராதவிதமாக தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதில்  ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் 21 பேர் பாதுகாப்பாக உயிர் தப்பினர் 



மே 04 - விழுப்புரத்தை கோட்டை விட்ட சி.வி.சண்முகம் 


2011, 2016 தேர்தல்களில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வென்று அமைச்சரான சி.வி.சண்முகம், அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த ஆர்.லட்சுமணனிடம் 14,868 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்



           


மே 12 - காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பெரியவர்கள் 


விழுப்புரம் மாவட்டம் திருவேணிநல்லூர் அருகே ஒட்டினந்தல் கிராமத்தில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த மே 12-ஆம் தேதி ஒரு பிரிவினர் கூழ்வார்த்தல் திருவிழா நடத்தியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மற்றொரு பிரிவினர் விழா நடத்திய தரப்பிலிருந்த 3 முதியவர்களை ஊர் கூட்டத்தில் பல்வேறு நபர்கள் முன்னிலையில் காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 



 


ஜுன் 1 - நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது


மரக்காணத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவரான புவனேஷ் சென்னை திருவான்மியூரில் உள்ள அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்ததாக கூறி வதந்தி பரப்பியதால் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.


ஜூலை ௦2  - ஆன்லைன் வகுப்பு தந்த மன உளைச்சலில் தலைமுடியை சாப்பிட்ட மாணவி


விழுப்புரம் நகரில் வசிக்கும் பணிக்கு செல்லும் ஒரு பெற்றோரின் 15 வயது மகள், ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆன்லைன் வகுப்பு மூலம் கல்வி கற்று வந்த நிலையில் திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. அறுவை சிகிச்சை செய்ததில் வயிற்றில் இருந்து சுமார் ஒரு கிலோ முடிகளால் ஆன கட்டி பாதுகாப்பாக அகற்றப்பட்டது. 



ஜூலை 22 - மூடப்பட்ட பள்ளி - மாணவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம் 


விழுப்புரம் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே குடியிருப்புக்கு மத்தியில் ரயில்வே இருபாலர் ஆங்கிலவழி உயர்நிலைப் பள்ளி (ரயில்வே மிக்ஸ்டு ஸ்கூல்) இயங்கி வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்புவரை 800 முதல் 1,000 மாணவ, மாணவிகளுடன் சிறப்பாக இயங்கி வந்த இந்தப் பள்ளி, தரம் குறைந்து மாணவர்களின் எண்ணிக்கையை படிப்படியாக இழந்தது. சென்னைத் தலைமையக ரயில்வே நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இந்தப் பள்ளி, மாவட்டக் கல்வித்துறையின் மூலம் தேர்வுகள் உள்ளிட்ட பணிகளை ஒருங்கிணைத்து வருகிறது. இந்தப் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து படிப்படியாக மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டது.



அகஸ்ட் 22 - அமைச்சரை வரவேற்க வைக்கப்பட்ட கம்பத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு 


விழுப்புரம் - மாம்பழப்பட்டு சாலையில் நடைபெற்ற திருமண விழாவில் அமைச்சர் பொன்முடியை வரவேற்பதற்காக கட்சி கொடிகளை நடும் பணிகள் நடந்தது. இப்பணியில் ஈடுபட்ட  8 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவன் தினேஷ் கொடிகம்பம் நடும்போது மின் கம்பியில் உராசியதால் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். 



 


அகஸ்ட் 26 - ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் மூடல்


 விழுப்புரத்தைத் தலைமையிடமாகக்கொண்டு அதிமுக ஆட்சியில் டாக்டர்.ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக அரசின் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலையுடன் இணைத்தார்.



அகஸ்ட் 3௦ - பெற்ற குழந்தையை சரமாரியாக தாக்கிய தாய்


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே, பெற்ற குழந்தையை கொடுமைப்படுத்திய தாய் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து குழந்தையை தாக்கிய தாய் துளசி மீது செஞ்சி சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் தந்தை வடிவழகன் புகார் அளித்தார். 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், துளசியிடம் விசாரணை நடத்த ஆந்திராவுக்கு சென்றனர். இதனிடையே, தவறான நடத்தையால், துளசி தமது குழந்தையை தாக்கி வீடியோ எடுத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.



அக்டோபர் 27 - மரக்காணத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தொடங்கிய முதல்வர்


கொரோனா தொற்றின் காரணமாக மாணவர்கள் கற்பித்தல் பணிகள் நேரடியாக நடைபெறாமல் இருந்ததால் மாணவர்களிடம் கற்றல் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் இல்லம் தேடி கல்வி என்ற புதிய திட்டத்தை மரக்காணம் முதலியார் குப்பத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.



நவம்பர்  ௦9 - ஓராண்டில் இரண்டு முறை உடைந்த தளவானுர் தடுப்பணை 


விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட எல்லை பகுதியில் அமைந்திருக்கும் தளவானூர் என திரிமங்கலம் இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 25.37 கோடி மதிப்பீட்டிலான தடுப்பணை 2020 ஆம் ஆண்டு அக்டோபரில் கட்டி முடிக்கப்பட்டது. 400 மீட்டர் நீளமும், 3.1 மீட்டர் உயரமும் கொண்டது இந்த தடுப்பணை. மொத்தம் 3 ஷட்டர்களுடன் தடுப்பணை கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட ஓராண்டுக்குள்ளேயே 2 முறை  உடைந்த நிலையில் முழுமையாக அகற்றப்பட்டது.



டிசம்பர் 12 - காதல் திருமணம் செய்த பெண்ணுக்கு மொட்டை அடித்த பெற்றோர்


திண்டிவனத்தில் பூக்கடையில் வேலை பார்த்துவரும் யுவராஜ் என்பவர், அதே பகுதியில் வசித்து வந்த பானுமதி என்ற பெண்ணை ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். கடந்த டிசம்பர் 9ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய யுவராஜ், பானு இருவீட்டார் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துக் கொண்டனர். பானுமதிக்கு திருமணம் நடந்த அன்றே அவரது தந்தை சாமிநாதன், தாய்மாமா அண்ணாமலை மற்றும் உறவினர்கள் பானுமதியைத் தேடி கண்டுபிடித்து, தென்பாலை முனீஸ்வரர் கோயிலுக்கு அழைத்து சென்று கழுத்திலிருந்த தாலியை கழட்டி போட்டுவிட்டு, அவருக்கு மொட்டை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.



 


டிசம்பர் ௦7 -  16-வது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட கழுவெளி சதுப்பு நிலம்


மரக்காணம் பகுதியில் 15 ஆயிரம் ஏக்கரில் 72 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கழுவெளி சதுப்பு நிலப்பகுதிக்கு ஆண்டுதோறும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகள் வந்து செல்வது வழக்கமாக இருந்த நிலையில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று 16-ஆவது பறவைகள் சரணாலயமாக கழுவெளி சதுப்புநிலம் அறிவிக்கப்பட்டுள்ளது.