கொரோனா தொற்று ஓய்ந்ததை அடுத்து ஒமிக்ரான் தொற்று பரவ ஆரம்பித்துள்ளது. 72 நாடுகளில் இதுவரை பரவியுள்ள ஒமிக்ரான் தொற்றானது இந்தியாவில் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட13 மாநிலங்களில் மொத்தம் 202 பேருக்கு ஒமிக்ரான் உறுதியாகியுள்ளது. 


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இதுவரை 34 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியானது. அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் தற்போது 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 31 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர். ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சமீபத்தில் கடிதமும் எழுதியிருந்தது.




அந்தக் கடிதத்தில், நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளை கண்காணித்தலை தீவிரப்படுத்த வேண்டும். தேவையானால் இரவு நேர ஊரடங்கைத் அமல்படுத்தலாம். அதேபோல் அதிகளவு மக்கள் கூடும் கூட்டங்களுக்கும் கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.


அவசர நிதியைப் பயன்படுத்தி மருத்துவ கட்டுமானங்களை மேம்படுத்த வேண்டும்.  தேவையான அளவு படுக்கைகள், ஆம்புலன்ஸ், ஆக்ஸிஜன் உபகரணங்கள் உள்ளனவா என்பதை சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும். 


கொரோனா தொற்றால் பாதித்தோர் உள்ள பகுதியில் பரிசோதனை, கண்காணிப்பின் ஒரு பகுதியாக வீடு வீடாக சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு ஒமிக்ரான் தொற்று இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்” என குறிப்பிட்டிருந்தது.




இந்நிலையில் கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களை சந்தித்த பிறகு சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனும், செயலாளர் ராதாகிருஷ்ணனும் இன்று செய்தியாளர்களிடம் பேசினர்.


அப்போது பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், “மத்திய அரசு வலியுறுத்தியுள்ள கட்டுப்பாடுகளை அமல்படுத்திவருகிறோம். தடுப்பூசி செலுத்தும் பணி முழுவீச்சில் நடந்துவருகிறது. இதுவரை86 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கும், அவரது குடும்பத்தினர் இரண்டு பேருக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதியானது. தற்போது அவர்கள் குணமடைந்துள்ளனர். மூன்று பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 31 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்” என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண