தமிழகத்தில் ஈரோடு மாவட்டம், காசிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஸ்வேகா சாமிநாதன், அமெரிக்காவின் புகழ்பெற்ற சிகாகோ பல்கலைக்கழகத்தில் படிக்க ரூ.3 கோடி மதிப்பிலான உதவித்தொகையை முழுமையாகப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே, வள்ளிபுரத்தான் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சாமிநாதன். இவரின் மகளான ஸ்வேகா சாமிநாதன், ஈரோட்டில் 12-ம் வகுப்புப் படித்து வருகிறார். விளையாட்டிலும் பேரார்வம் கொண்ட ஸ்வேகா, 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பல சாதனைகளை படைத்துள்ளார். தற்போது உலகின் தலைசிறந்த 10 பல்கலைக்கழகங்களில் ஒன்றான சிகாகா பல்கலைக்கழகத்தில், ரூ.3 கோடி மதிப்பிலான முழு கல்வி உதவித்தொகையுடன் படிக்கத் தேர்வாகியுள்ளார்.
இதுகுறித்து ஸ்வேகா சாமிநாதன் ’ஏபிபி’ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, ''ஊத்துக்குளியில் 10-ம் வகுப்புப் படிக்கும்போது எங்கள் பள்ளிக்கு குடியரசு தின சிறப்பு விருந்தினராக ஒருவர் வந்தார். அவர் டெக்ஸ்டெரிட்டி குளோபல் நிறுவனத்தின் சிஇஓ சரத் விவேக் சாகர். எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்து, அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் உதவித்தொகை பெற்றுப் படித்தவர். அவரின் பேச்சால் ஈர்க்கப்பட்டேன். டெக்ஸ்டெரிட்டி நிறுவனத்தில் தலைமைத்துவம், தொழில்முனைவோர்களுக்கான மேம்பாடு மற்றும் தொழில்மேம்பாட்டுப் பயிற்சிகளும் உண்டு. அதற்கு நானும் விண்ணப்பித்து, ஆன்லைன் மூலம் இலவசமாகப் படித்தேன்.
அங்கு படிக்கும்போது வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் குறித்தும் அங்குள்ள படிப்புகள் பற்றியும் தெரியவந்தது. அதற்கான தயாரிப்பில் இறங்கினேன். இதற்காகப் பல்வேறு சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றேன். அமெரிக்கக் கல்லூரிகளில் படிப்பு, கோடைக்காலப் பயிற்சி, ஆய்வுப் பணிகளை மேற்கொண்டேன். அவர்கள் கேட்கும் தலைப்புகளில் கட்டுரைகளை எழுதிப் பரிசு பெற்றுள்ளேன். சர்வதேச அறிவியல் போட்டி ஒன்றில் ரன்னராகத் தேர்வானேன். ஆங்கிலம் பிடிக்குமென்பதால் அதற்கெனத் தனிப் பயிற்சிகள் எடுத்துக்கொண்டேன். தினந்தோறும் உச்சரிப்புக்கென சிறிது நேரம் செலவிடுவேன்'' என்கிறார் ஸ்வேகா.
பள்ளிப் படிப்பில் முதன்மை, விளையாட்டில் தனித்திறமை, தனித்துவக் குரல், சிறப்பான கட்டுரை எழுதியமை ஆகிய காரணங்களுக்காக இந்த உதவித் தொகை ஸ்வேகாவுக்கு வழங்கப்படுகிறது. 4 ஆண்டு இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பை முழுமையான உதவித்தொகையுடன் படிக்கத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து விரிவாகப் பேசியவர், 5-ம் வகுப்பில் இருந்தே 100 மீ. ஓட்டப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றிருக்கிறேன். 9, 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், என்னுடைய பின்னணி ஆகியவற்றையும் பல்கலைக்கழகத்தில் கணக்கில் எடுத்துக்கொண்டு, தேர்வு செய்துள்ளது. இதன்மூலம் தங்குமிடம், விமானக் கட்டணம், படிப்புச் செலவு ஆகிய அனைத்தையும் சேர்த்து 4 வருடங்களுக்கு ரூ.3 கோடி உதவித்தொகை கிடைக்கும். முதற்கட்டமாக இந்த ஆண்டு 95 ஆயிரம் டாலர்கள் கிடைத்துள்ளது. உணவு, உடை ஆகியவற்றையும் பல்கலைக்கழகமே வழங்கிவிடும்.
பள்ளியிலும் என்னுடைய முயற்சிக்கு உறுதுணையாக இருந்தனர். தினந்தோறும் காலை 8 முதல் 3 மணி வரை ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும். அதற்குப் பிறகு ஆன்லைன் பயிற்சிகளில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பங்கேற்பேன். கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. ஆனால் பிடித்து, ரசித்துச் செய்ததால் அழுத்தமாக உணரவில்லை'' என்கிறார் ஸ்வேகா.
பள்ளி வீட்டுப் பாடங்களை எப்படிச் செய்கிறீர்கள்? எப்படி இத்தனைக்கும் நேரம் கிடைக்கிறது என்று கேட்டதற்கு, ''நேரம் கிடைக்கும்போதும் வார இறுதி நாட்களிலும் 12-ம் வகுப்புப் பாடங்களைப் படித்துக்கொள்வேன். தூங்கும் நேரத்தைக் குறைத்துக் கொண்டதால் கூடுதல் நேரம் கிடைத்தது. தினமும் சராசரியாக 5 முதல் 6 மணி நேரம் தூங்குவேன்.
அப்பா, அம்மா இருவருமே பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர்கள். அப்பா ஆட்டுப் பண்ணை வைத்துள்ளார். நிலத்தில் ராகி, சோளம் ஆகியவற்றைப் பயிரிட்டுள்ளோம். தம்பி 7-வது படித்து வருகிறார். அம்மாவும், அப்பாவும் தங்களின் சிரமங்களை விடுத்து, எனக்கும் தம்பிக்கும் சிறப்பான கல்வியைக் கொடுப்பதில்தான் கவனம் செலுத்தினர். நான் பள்ளி மாறிப் படிக்கும்போதெல்லாம் அம்மா எனக்காக வீடு மாறிவந்து, உடன் தங்குவார். படிப்பதைத் தவிர எந்த வேலையையும் செய்ய அவர்கள் விட்டதில்லை. அப்பா வாரமொரு முறை வந்து எங்களைப் பார்த்துவிட்டுச் செல்வார்'' என்று ஸ்வேகா தெரிவித்தார்.
இறுதியாக மாணவர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, ''பெரும்பாலானோருக்கு இந்தத் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு அதிகம் இல்லை. மெட்ரோ நகரங்களில் பெரிய பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கின்றனர். இதுகுறித்த விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும்.
நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பது முக்கியமில்லை. என்ன செய்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். தீர்க்கமான உறுதி, முறையான வழிகாட்டல், கடின உழைப்பு இருந்தால் போதும். எதையும் சாதிக்கலாம்'' என்று விடைகொடுக்கிறார் ஸ்வேகா சாமிநாதன்.
பட்னாவைச் சேர்ந்த சரத் விவேக் சாகர், தன்னுடைய 16-வது வயதில் டெக்ஸ்டரிட்டி குளோபல் நிறுவனத்தைத் தொடங்கினார். அங்கு கிராமப்புற மாணவர்களுக்கு உலகளாவிய கல்வி வாய்ப்புகள் கிடைக்க சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.