கொரோனா காலத்தில் ஏற்படும் இறப்புகளை மட்டும் பேசிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில், இறப்பவர்களின் குடும்பங்கள் சந்திக்கும் இழப்புகளுக்கு தீர்வு தர முயற்சிக்கிறார் எழுத்தாளர் ஷான் கருப்பசாமி. உண்மையில் இந்த பதிவு பலருக்கு இன்றைய சூழலில் முக்கியமானது தான்.
பொதுவாக யாரும் பேசத் தயங்கும் ஒரு விஷயத்தை இந்தக் காலகட்டத்தில் பேச வேண்டியிருக்கிறது. நெருங்கிய வட்டங்களில் இறப்பு செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அவர்களெல்லாம் இறப்பார்கள் என்று எதிர்பார்த்திருக்கவே மாட்டோம். ஆரோக்கியமானவர்கள். மகிழ்ச்சியானவர்கள். தடுப்பூசிகள் முதலில் வயதானவர்களுக்குப் போடப்பட்டதால் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 30 முதல் 50 வயது நோயாளிகளிடையே அதிகரித்திருக்கிறது. ஒரு வகையில் தடுப்பூசிகள் தங்கள் வேலையை செய்திருக்கின்றன என்பதற்கான அறிகுறிதான் இது.
அதே நேரத்தில் இந்த வயதில் இருக்கும் பலரும் தங்கள் முதலீடுகள், காப்பீடுகள் ஆகியவை குறித்து ஏதும் எழுதித் தங்கள் நெருங்கியவர்கள் யாரிடமும் கொடுத்து வைத்திருப்பார்களா என்று தெரியவில்லை. உதாரணமாக பிரதம மந்திரியின் காப்பீடு என்று வங்கியிலிருந்து மாதம் ஒரு சொற்பத்தொகை போய்க் கொண்டிருந்தால் அது நமக்கே தெரியாது. இவையெல்லாம் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் பொதுவாக செய்து வைத்திருப்பார்கள். ஆனால் ஐம்பதுக்குக் கீழ் இருப்பவர்கள் மனதில் அப்படி ஒன்று உதிக்காது. நம் வரவு செலவுகள், முதலீடுகள், காப்பீடுகள், காப்பீட்டு விவரங்கள் ஆகியவை நம்முடைய நெருங்கிய உறவுகளுக்குத் தெரிந்திருப்பது அவசியம்.
அதற்குத் தேவை ஏற்படாதிருக்க வேண்டிக்கொள்ளும் அதே நேரத்தில் நாம் செய்து வைத்த முதலீடு ஒன்று நமது குடும்பத்துக்குப் பயன்படாமல் போவது அவர்களுக்கு இரட்டை இழப்பாகிவிடும். இப்போது அத்தனையும் டிஜிட்டல் மயமாகி பான் அல்லது ஆதார் இணைப்பில் இருப்பதால் ஒருவரின் இறப்புச் சான்றிதழ் வாங்கும்போதே அவரது முதலீடுகள், காப்பீடுகள் பட்டியலையும் அரசே அவர்கள் குடும்பத்திடம் வழங்க ஏற்பாடு செய்யலாம். நம்முடைய மொபைல் திரையைத் திறக்கும் கடவுச்சொல், வங்கிகளின் கடவுச்சொல் ஆகியவற்றை நம்பிக்கையான ஒருவரிடம் கொடுத்து வைத்திருப்பது கூட இந்த நேரத்தில் தேவையானது. இந்தக் கட்டத்தில் பீதியைக் கிளப்ப இதைச் சொல்லவில்லை. கொரோனாவைக் கடந்த பிறகும் கூட அனைவருக்கும் இது தேவையான ஒன்றுதான், என்கிறார் ஷான் கருப்பசாமி.