இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் கோரத்தாண்டவம் ஆடுகிறது. தமிழகத்திலும் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக உள்ளது. கொரோனாவால் வயது வித்தியாசம் இன்றி இறப்புகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் நடிகரும், திரைப்பட இயக்குநருமான அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்து, கொரோனா தொற்றால் நேற்று இரவு காலமானார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் கிசிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தொற்று அதிகமாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் நேற்று மட்டும் 33,181 பேருக்கு கொரோனா உறுதியானது. அதில், 9 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள், 33,172 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,98,216 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 2,51,17,215 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. நேற்று கொரோனா உறுதியானவர்களில் 19,008பேர் ஆண்கள், 14,173 பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 9,56,543 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 6,41,635 ஆகவும் அதிகரித்து உள்ளது.
21,317 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13,61,204 ஆக உயர்ந்தது. 311 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். அதில், 148 பேர் தனியார் மருத்துவமனையிலும், 163 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17,670 ஆக அதிகரித்து உள்ளது.
தினமும் விடிந்ததும் கொரோனா இன்று எந்த பிரபலம் உயிரிழந்தார் என்று கேட்கும் அளவிற்கு, உயிரிழப்புகள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருவது திரையுலகை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக பிரபல துணை மற்றும் குணசித்திர நடிகர்களின் அடுத்தடுத்த மறைவு அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.