கல்வித் தந்தை, கல்வி வள்ளல் எனப் போற்றப்படும் துளசி வாண்டையார் உடல் நலக்குறைவால் காலமானார்


சுதந்திர போராட்ட வீரர், காங்கிரஸ் மூத்த தலைவர், முன்னாள் எம்.பி, தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி புஷ்பம் கல்லூரி தாளாளர் துளசியய்யா வாண்டையார் (95)  உடல் நலக்குறைவால் சென்னை சாலிகிராமத்தில் இன்று அதிகாலை காலமானார். சுமார் 50 ஆண்டுகளாக,  புகழ் பெற்ற பூண்டி புஷ்பம் கல்லூரியின் தாளாளர். டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள குடும்பங்களின் முதல் தலைமுறை பட்டதாரிகளை உருவாக்கியவர் இவர்.




பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவ மாணவிகள் எண்ணற்றோருக்கு இலவசமாக கல்வியை தந்தவர்  ஆவார். ஆண்டிற்கு குறைந்தது ஆயிரம் பேருக்கு இலவசக் கல்வி தந்த காரணத்தினால் இவர் கல்வித் தந்தை, கல்வி வள்ளல் எனப் போற்றப்படுகிறார்.


பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் ராஜாஜி, முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்களோடு நெருங்கிப் பழகியவர் ஆவார்.  துளசியய்யா வாண்டையார் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக டெல்டா பகுதி மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். துளசி வாண்டையாருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பி.ஆர்.பாண்டியன், 


காவிரியின் அடையாளம் சரிந்தது தஞ்சை பூண்டி புஷ்பம் கல்லூரி தாளாளர் கல்வி தந்தை ஐயா பூண்டி கே துளசி அய்யா வாண்டையார் மு. எம்பி காலமானார் என்ற செய்தி ஒட்டுமொத்த காவிரி டெல்டா விற்கும் மிகப்பெரிய பேரிழப்பாகும்.ஜாதி மதங்களை கடந்த மிகப்பெரும் கல்வி மகான். ஒடுக்கப்பட்ட,தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் விடியலாக திகழ்ந்தவர்.




சுதந்திரம் பெற்றாலும் ஒடுக்கப்பட்ட கல்வி எட்டாக்கனியாக இருந்த காலத்தில் அனைவரும் சம கல்வி பயில வேண்டும் என்ற உயரிய லட்சியத்தோடு அன்று முதல் இன்று வரை அனைவருக்கும் இலவச உயர் கல்வி வழங்கி வரும் ஒரே நிறுவனத்தை கண்டிப்புடன் நடத்தி வந்த மாமனிதர். தஞ்சை அருகே பூண்டி புஷ்பம் கல்லுரியில் பயின்ற மாணவர்கள் உலகத்தில் பல நாடுகளில் பல்வேறு அறிஞர்களாக, விஞ்ஞானிகளாக, ஐஏஎஸ், ஐபிஎஸ்  உள்ளிட்ட பல்வேறு அமைச்சர் பெருமக்கள் பொறியாளர்கள், எண்ணற்ற உயர் அலுவலர்களை உருவாக்கித் தந்தை கல்வி மகான் மறைந்தார் என்ற செய்தி ஒட்டுமொத்த காவிரி டெல்டாவின் முகம் சிதைந்து விட்டது. 


நடமாடும் கடவுளாக அனைத்துப் பகுதி மக்களுக்கான கல்வி தந்தையாக திகழ்ந்தவர்.அவருக்கு நிகர் அவரே என்று வாழ்ந்து காட்டிய மகான் அவர் இழப்பை ஈடு செய்வது இனி யாரும் இந்த மண்ணில் பிறக்க முடியாது.கல்வியாளர்,மிகச் சிறந்த பண்பாளர்,மிகச் சிறந்த அரசியல் ஆளுமை,மிகச் சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்,மிகச்சிறந்த அர்ப்பணிப்பு மிகுந்த சேவையாளர் என்கிற பன்முகத் தன்மை மட்டுமல்ல நற்செயலுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்.




ஐயா பூண்டி மகான் அவர்கள். மறைவால் காவிரி டெல்டா விவசாய குடும்பங்கள் பரிதவிக்கிறது. கோடிக்கணக்கான இளைஞர்கள் கண்ணீர் கடலில்,மிதக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். 
காவிரி டெல்டாவில் மட்டுமின்றி தமிழகத்தின் பல மாவட்டங்களை சார்ந்த ஒடுக்கப்பட்ட குடும்பங்களைச் சார்ந்த பிள்ளைகளின் உயர்கல்வி பெறுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பை உருவாக்கித் தந்த பெருமை மிக்கவர். 


ஐயா பூண்டி வாண்டையார் அவருடைய மறைவிற்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறோம்.தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்கள் ஐயா பூண்டி வாண்டையார் அவரது சேவைக்கு மதிப்பளிக்கும் வகையில் அரசு மரியாதை வழங்கி அவருடைய இறுதிச் சடங்கில் தமிழக மக்கள் 100 ஆண்டு காலம் நினைவினைப் போற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். எனத் தெரிவித்துள்ளார்.