பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைபடுவார் என இசைஞானி இளையராஜா எழுதியதாக கூறப்படும் வரிகளுக்கு ஆதரவும், தற்போது கடும் எதிர்ப்பும் கிளப்பி வந்தது. மேலும், ஒரு சிலர் இளையராஜா மத்திய அரசு வழங்கும் எம்பி பதவிக்கு ஆசைப்பட்டுதான் அம்பேத்கரையும், மோடியையும் ஒன்றாக இணைத்து பேசினார் என்று கருத்து தெரிவித்து வந்தனர்.
தொடர்ந்து, இதுகுறித்து பேசிய இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன், "அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்கமுடியாது என இளையராஜா கூறினார். தனக்கு எதிரான விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதாகவும் என்னிடம் இளையராஜா கூறினார். மற்றவர்கள் எப்படி கருத்து கூறுகிறார்களோ அதேபோல்தான் கருத்தைக் கூறினேன் என்றார். தான் பதவி வாங்குவதற்காக மோடியை புகழவில்லை. தான் கட்சிக்காரர் இல்லை என்றும் கூறினார். அம்பேத்கரையும் பிடிக்கும், மோடியையும் பிடிக்கும். அதனால் ஒப்பிட்டு பேசினேன் என்று இளையராஜா கூறினார்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், சமூக வலைதள பக்கத்தில் இளையராஜா பற்றிய கருத்துகள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், எழுத்தாளர் முத்துக்குமார், இளையராஜா ஏன் இசைஞானி என்பது பற்றி சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.
அதில், “இளையராஜாவிற்கு எத்தனையோ பட்டங்கள் இருந்தாலும், இசைஞானி என்ற பட்டம்தான் அவருக்கு மிகப்பொருத்தமானது. அந்தப் பட்டத்தை இளையராஜாவுக்கு வழங்கிய கருணாநிதி, ”ஆன்மீகமும் இசையும் இளையராஜாவிடம் கலந்திருக்கிறது. ஆகவேதான் அவருக்கு நான் இசைஞானி” என்ற பட்டத்தை வழங்கினேன்" என்றார்.
இந்நிலையில், இளையராஜாவின் மகனும், இசையமைப்பளாருமான யுவன்சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அதில், “கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன்” என கேப்ஷனோடு புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். இந்த புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.
தொடர்ந்து, தமிழ், திராவிடம் என்பது சம்பந்தமான கருத்துகளை நேராகவும், மறைமுகமாகவும் பேசி வருகிறார் யுவன். சமீபத்தில் ‘இந்தி தெரியாது போடா’ என்ற டி-சர்ட் அணிந்து அந்த பதிவு வைரலானது. இந்நிலையில், சினிமாவில் 25 ஆண்டுகள் நிறைவு விழாவில் யுவன் பேசும்போது ”எனக்கு உண்மையில் இந்தி தெரியாது. யாரையும் புண்படுத்தும் நோக்கில் அந்த டி-சர்ட்டை அணியவில்லை” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்