இலக்கிய உலகின் மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுவது சாகித்ய விருதுகள். பாலபுரஸ்கர் மற்றும் யுவபுரஸ்கர் விருதுகள் மத்திய அரசுகளால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்காக சாகித்ய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, 2022ம் ஆண்டிற்கான பால புரஸ்கர் விருது எழுத்தாளர் ஜி.மீனாட்சிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


குழந்தைகளுக்காக ஜி.மீனாட்சி எழுதிய மல்லிகா வீடு எனும் சிறுகதைத் தொகுப்பிற்காக இந்த விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது விருதுக்கு தேர்வாகியுள்ள எழுத்தாளர் ஜி.மீனாட்சி பத்திரிகையாளர் ஆவார். சுமார் 27 ஆண்டுகாலம் பத்திரிகையில் பணிபுரிந்து வருபவர்.


தினமணி, புதிய தலைமுறை, மங்கையர் மலர் என பல பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். தற்போது ராணி இதழில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அதேபோல, யுவபுரஸ்கர் விருது எழுத்தாளர் காளிமுத்துவிற்கு வழங்கப்பட உள்ளது.


பஞ்சாயத்து அமைப்புகளில் பெண் தலைவிகளின் பங்களிப்பு பற்றி எழுதிய தொடர் கட்டுரைகளுக்கான டெல்லியில் உள்ள தி ஹங்கர் புராஜெக்ட் அமைப்பு வழங்கிய சரோஜினி நாயுடு விருதை எழுத்தாளர் ஜி.மீனாட்சி வென்றுள்ளார். இதுமட்டுமின்றி, ஈரோடு அரிமா மு.ஜீவானந்தம் இலக்கிய விருது, கவிதை உறவு இலக்கிய விருது, சாதனைப் பெண்மணி விருது, இலக்கிய அமைப்பின் அன்னம் விருது, மிகச்சிறந்த பத்திரிகையாளர்களுக்கான நாரதர் விருது, மகாத்மா காந்தி நூலக விருது போன்ற விருதுகளை வென்றுள்ளார்.


விருதுக்கு தேர்வாகியுள்ள எழுத்தாளர்களுக்கு நவம்பர் 14-ந் தேதி நடைபெறும் விழாவில் ரூபாய் 50 ஆயிரம் ரொக்கமும், பாராட்டு செப்பு பட்டயமும் குடியரசுத் தலைவரால் வழங்கப்பட உள்ளது.