பொறியியல் சிறப்புக் கலந்தாய்வில் யார், யாருக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற விவரத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. 


இந்த ஆண்டு 1,58,157 மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியானது. 1.48 லட்சம் பொறியியல் இடங்களுக்கு 1.58 லட்சம் விண்ணப்பங்கள் தகுதி பெற்றன. இதனால் விண்ணப்பிப்பவரில் பெரும்பாலும் அனைவருக்குமே இடம் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகத் தகவல் வெளியானது. 


குறிப்பாக OC- 7615, BC- 74,605, BCM - 7,203, MBC- 42,716, SC- 21,723, SCA- 3 ஆகிய பிரிவில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.


எனினும் இந்த ஆண்டு மாணவர்களுக்கான கட் -ஆஃப் மதிப்பெண்கள் அதிகரித்துள்ளன. 200க்கு 200 கட் -ஆஃப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 10 ஆக மட்டுமே இருந்த நிலையில், இந்த முறை 133 பேர் 200க்கு 200 கட் -ஆஃப் பெற்றுள்ளனர். 


அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10,900 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், 22,587 பேரின் விண்ணப்பங்கள் தகுதி பெற்றுள்ளனர்.


மாணவர்கள் https://cutoff.tneaonline.org/ என்ற இணைய முகவரி மூலம் தங்களின் கட் -ஆஃப் மதிப்பெண்களைத் தெரிந்துகொள்ளலாம்.


யார், யாருக்கு எந்த வரிசையில் கலந்தாய்வு?


முதலில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கு சிறப்புக் கலந்தாய்வு ஆகஸ்ட் 20ஆம் தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடைபெற்றது. 




பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைப்பு


இதற்கிடையே நாளை (ஆகஸ்ட் 25ஆம் தேதி) முதல் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில் பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாததால், கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி 2 நாட்களுக்குப் பிறகு கலந்தாய்வு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலியிடங்களைத் தடுக்கவும் மாணவர்களுக்கு ஏற்படும் வீண் சிரமத்தைத் தடுக்கவும் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் பொறியியல் சிறப்புக் கலந்தாய்வில் யார், யாருக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற விவரத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. 


இதன்படி, மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 151 பேருக்கும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவில் 138 மாணவர்களுக்கும் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில், 321 பேருக்குப் பொறியியல் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 


7.5% ஒதுக்கீட்டில் சிறப்புப் பிரிவுக் கலந்தாய்வு


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் சிறப்புப் பிரிவினருக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 21 பேருக்கும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவில் 2 மாணவர்களுக்கும் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில், 35 பேருக்குப் பொறியியல் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.