கனியாமூர் தனியார் பள்ளி மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நெசலூர் கிராமத்திலிருந்து நடைபயணமாக சென்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக மாணவின் தாயார் தெரிவித்துள்ளார்.
கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளனர். இவ்வழக்கு விசாரனை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருகின்ற நிலையில் மாணவி உடலை இரண்டு முறை உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட அறிக்கையை ஜிப்மர் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து அறிக்கையை நேற்று முன்தினம் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்நிலையில் ஜிப்மர் மருத்துவ குழுவின் ஆய்வறிக்கையின் நகலை வழங்குமாறு மாணவியின் தாயார் தரப்பில் வழக்கறிஞர் காசி விஸ்வநாதன் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்தனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாணவியின் தாயார், விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மகளின் தோழிகள் இருவர் ஆஜராகி ரகசிய வாக்கு மூலம் அளித்துள்ளதால் அவர்கள் உண்மையிலையே தோழிகள் தான் தங்களுக்கு தெரியவேண்டும் என்பதால் அவர்களின் புகைப்படமோ பெயரையோ தெரிவிக்க வேண்டும் எனவும் அப்படி தெரிவிக்கும் மாணவிகளின் பெயர்கள் ரகசியம் காக்கப்படுமென தெரிவித்த அவர் ஜிப்மர் ஆய்வறிக்கை நகலை உடனடியாக தங்களுக்கு வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். மேலும் தனது மகள் எழுதிய கடிதம் என பள்ளி நிர்வாகத்தினரால் வழங்கபட்டுள்ளதால் அது அவர் கையெழுத்தில்லை என்றும் தனது மகளின் மரணத்தில் நீதி வேண்டும் என்பதால் தமிழக முதலமைச்சரை நேரில் சந்திக்க வேண்டும் என்பதால் வருகின்ற 26 ஆம் தேதி நெசலூர் கிராமத்திலிருந்து நடைபயணமாக சென்று தமிழக முதலமைச்சரை சந்தித்து நீதி கேட்டு மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், ஜிப்மர் மருத்துவ குழுவின் ஆய்வறிக்கையின் நகலை வழங்குமாறு மாணவியின் தாயார் தரப்பில் வழக்கறிஞர் காசி விஸ்வநாதன் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவினை விசாரித்த நீதிபதி புஷ்பராணி ஆய்வறிக்கையின் நகலை 24.08.2022 அன்று பெற்று கொள்ளலாம் என மாணவியின் தாயாருக்கு நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் இன்று ஆய்வறிக்கையின் நகல் மற்றும் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட வீடியோ பதிவு பெண்டிரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்