படிக்கின்ற காலத்தில் பல்வேறு தனித்திறமைகளைப் பெற்றிருக்கும் பெண்கள், திருமணம் ஆனதும் தங்களது பணிகளையும் விருப்பங்களையும் விட்டுவிடுவதாக முதல்வர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். 


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (5.07.2022) சென்னை, மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:


''பெண்கள் கல்வி கற்பது என்பது, வேலைக்குப் போவது என்பதோடு மட்டுமல்ல. அதோடு முடிந்து விடுவது இல்லை. பெண்களுக்குத் தன்னம்பிக்கை அளிப்பதாக. தைரியத்தை வழங்குவதாக கல்வி அமைகிறது. எனவே, பெண் பிள்ளைகள் நிச்சயமாக படிக்க வேண்டும், பட்டங்களைப் பெற வேண்டும். 
பட்டம் பெற்ற பெண்கள், தங்களது தகுதிக்கேற்ற வேலைக்குச் செல்ல வேண்டும். படிக்கின்ற காலத்தில் பல்வேறு தனித்திறமைகளைப் பெற்றிருக்கும் பெண்கள், 100-க்கு 100 மதிப்பெண் வாங்கிய பெண்கள், திருமணம் ஆனதும் தங்களது பணிகளை விட்டு விடுகிறார்கள். கலை, இலக்கியம், நாடகம், நாட்டியம், விளையாட்டு போன்றவற்றில் இருக்கக்கூடிய விருப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறார்கள்.


அப்படி இல்லாமல் தங்களது விருப்பங்களை, அறிவாற்றலை வாழ்நாள் முழுக்கப் பயன்படுத்தக்கூடிய சூழலை தங்களுக்குத் தாங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.


இன்றைக்கு உள்ளாட்சி அமைப்புகளில் ஏராளமான பெண்கள் பல்வேறு பொறுப்புகளில் அமர்ந்திருக்கிறார்கள். 50 விழுக்காடுதான் இடஒதுக்கீடு என்று சொன்னாலும், நான் மகிழ்ச்சியோடு சொல்கிறேன். இன்றைக்கு 56 விழுக்காடு பெண்கள் அந்தப் பொறுப்புகளை அடைந்திருக்கிறார்கள்.


இரண்டு நாட்களுக்கு முன்னால் நாமக்கல் மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு நடந்தது. அதில் பெரும்பாலானோர் பெண்கள் கலந்து கொண்டார்கள். இப்படி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் இதை பார்க்க முடியுமா? முடியாது.


இதுதான் திராவிட மாடல் ஆட்சி என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் கல்வி பெற்றவர்களுடைய விழுக்காடு என்ன? இன்றைய விழுக்காடு என்ன என்பதைப் பார்த்தால்தான், திராவிட மாடல் என்றால் என்ன என்பது புரியும். இதைச் சொல்வதால், நான் அரசியல் பேசுவதாக யாரும் தயவுசெய்து தவறாகக் கருதிவிடக்கூடாது. எத்தகைய அறிவுச்சூழல் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதற்காகத்தான் இதைச் சொன்னேனே தவிர வேறு அல்ல.


கடந்த ஓராண்டு காலத்தில் பள்ளிக் கல்வித்துறை துள்ளி எழுந்திருக்கிறது. உயர் கல்வித்துறை புதிய உத்வேகத்தோடு நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. கடைக்கோடி மனிதரையும் கல்வி பெற வைத்து, உலகச் சமுதாயத்தின் போட்டிக் களத்தில் அவர்களையும் போட்டியாளர்களாக மாற்றும் ஆட்சிதான் இந்த ஆட்சி. அவர்களை வெற்றியாளர்களாக ஆக்கக்கூடிய ஆட்சி தான் இந்த ஆட்சி. அத்தகைய போட்டியாளர்களாக இருக்கக்கூடிய நீங்கள், வெற்றியாளர்களாகவும் திகழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன். உங்கள் கனவுகளையும், உங்களை உருவாக்கிய பெற்றோரின் கனவுகளையும், இந்த நாட்டின் கனவுகளையும் நிறைவேற்றுங்கள். நிறைவேற்றுங்கள், நிறைவேற்றுங்கள் என்று கேட்டு விடைபெறுகிறேன்''.


இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண