தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி மொத்தம் 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் 34 பதவிகளுக்கு மட்டும் கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நகர்புற உள்ளாட்சி தேர்தல் காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் 50 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்தது. அப்போது, காஞ்சிபுரம் மாநகராட்சி 36வது வார்டில் அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் தற்கொலை செய்து கொண்டார்.
இதனால், இந்த வார்டில் தேர்தல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. மீண்டும் இந்த வார்டில் தேர்தல் நடத்த தேர்தல் அதிகாரிகள் தேதியை அறிவித்ததை தொடர்ந்து 36வது வார்டில் போட்டியிட பல்வேறு கட்சியினர் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராக, சுதா (எ) சுப்புராயன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் உயிரிழந்த ஜானகிராமனின் தந்தை வேணுகோபால் போட்டியிடுகிறார். தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், நகை, சேலை உள்ளிட்ட பரிசு பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதில், வாலாஜாபாத் வட்டார உதவி அலுவலர் கோபால் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை குழுவினர், வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
36வது வார்டுக்கான தேர்தல் நடத்துவதற்காக அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம், கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி தேர்தல் தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் வேட்பு மனுவானது 20ஆம் தேதி முதல் பெறப்பட்டு 27ஆம் தேதி முடிவடைந்தது. இதன் அடுத்து வருகின்ற ஒன்பதாம் தேதி தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே, தேர்தல் நடக்கும் வார்டுக்கு உட்பட்ட மண்டலங்களில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டது. நடத்தை விதிகள் அமலுக்கு வந்து, இரு வாரங்களுக்கு மேலாகியும், 36வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், அரசியல் கட்சியினரின் கொடி கம்பங்கள் அகற்றப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அரசியல் கட்சி தலைவர்களின் படம், கட்சியினரின் கல்வெட்டு மறைக்கப்படவில்லை, வழக்கம்போல, அரசியல் கட்சியினரின் கொடிகள் பறப்பதால், 36வது வார்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. உடனடியாக தேர்தல் நடத்தி விதிகளை பின்பற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்