செங்கல்பட்டு மாவட்டம் படப்பை அடுத்த வண்டலூர் வெளிவட்ட சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கசாவடி அருகே பழைய பொருட்களை வாங்கும் கடைகள் அமைந்துள்ளது. பழைய பொருட்கள் வாங்கும் கடையில் பணிபுரியும் ஊழியர்கள் வெளிவட்ட சாலையில் நிறுத்தப்படும் லாரிகளில் இருந்து டீசல்களை திருடும் காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.
குறிப்பாக லாரிகளில் இருந்து 25 லிட்டர் தண்ணீர் கேனில் டீசலை திருடி கடைக்கு கொண்டு செல்லும் இந்த கும்பல், உடனடியாக சிறிய வகை வாகனத்திற்கு விற்பனை செய்யும் அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகி உள்ளது. இது சம்பந்தமாக பலமுறை மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அந்த பகுதியைச் சேர்ந்த வாகன ஓட்டிகள் புலம்பி தள்ளுகின்றனர்.
ஒரு நாளைக்கு ஆயிரம் லிட்டர் வரை டீசல் திருடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. லாரி ஓட்டுனரிடம் இந்த டீசலை திருடி மற்ற வாகனங்களுக்கு 90 ரூபாய் வரை விற்பனை செய்வது குறிப்பிடதக்கது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தாறுமாறாக ஏறிக் கொண்டிருக்கும் இந்த சூழலில், டீசலை திருடி குறைந்த விலைக்கு வேறு ஒருவரிடம் விற்கும் இந்த கும்பலின் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து இதுபோன்று சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் டீசல் திருடும் கும்பலின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஓட்டுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர். பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிப்பதே, இது போன்ற குற்றச்செயலுக்கு ஒரு காரணமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்