புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பினை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டுமென வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்:


தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பினால், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


அக்கடிதத்தில், ”இத்தகைய கட்டுப்பாடு விதிப்பதன் மூலம், எதிர்காலத்தில் மருத்துவத் துறையில் புதிய மருத்துவமனைகளும், புதிய முதலீடுகளும் தமிழ்நாட்டிற்கு வருவதற்கான வாய்ப்பு முற்றிலுமாக இல்லாமல்
போய்விடும் என்று குறிப்பிட்டு, தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பினை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டுமென்றும், இதுதொடர்பாக மாநில அரசுகளுடன் உரிய ஆலோசனைகளை மேற்கொள்ளத் தேவையான அறிவுரைகளை ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு வழங்கிட வேண்டுமென்றும்”தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


10 லட்சம் பேருக்கு 100 மருத்துவ இடங்கள்:


புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறப்பதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,  2023-2024 கல்வியாண்டுக்குப் பிறகு தொடங்கப்படும் புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 50/100/150 என்ற அளவில் மட்டுமே இருக்க அனுமதி வழங்கப்படும். குற்ப்பிட்ட மாநிலத்தில் உள்ள 10 லட்சம் மக்கள் தொகைக்கு 100 மருத்துவ இடங்கள் என்ற விகிதத்தை கல்லூரிகள் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, மாநிலங்களின் உரிமைகள் மீதான நேரடியான அத்துமீறல்.  பல ஆண்டுகளாக தங்கள் பொது சுகாதார உள்கட்டமைப்பில் அதிக முதலீடு செய்த மாநிலங்களுக்கு விதிக்கப்படும் அபராதம் போன்றது என்ற ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார்.


நாட்டின் மருத்துவ தலைநகரம்:


”தமிழ்நாடு போன்ற முற்போக்கு மாநிலங்கள் பல தசாப்தங்களாக மூன்றாம் நிலை சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்தி வருகின்றன. இது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் இருப்பு, பல்வேறு சுகாதார குறிகாட்டிகளின் அடிப்படையில் அவர்களின் சிறந்த செயல்திறனை மேம்படுத்த வழ்வகுத்துள்ளது. நாட்டின் மருத்துவ தலைநகரமாக சென்னை உருவெடுத்துள்ளது. பொது மற்றும் தனியார் துறைகளில், எங்கள் திறமையான மருத்துவ வல்லுநர்கள் வெற்றிகரமாக சேவை செய்ய முடிகிறது.  தமிழக மக்கள் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் மற்றும் பிற நாட்டிலும் கூட அவர்கள் சேவை செய்கின்றனர். இது தரமான மற்றும் புதிய சுகாதார சேவைகளுக்கான பெரும் தேவையை உருவாக்கியுள்ளது. எதிர்காலத்தில் அதை பூர்த்தி செய்ய புதிய மருத்துவ கல்லூரிகள் முற்றிலும் அவசியம்.


”ஒன்றிய அரசின் முதலீடு அல்ல”


தமிழ்நாடு அதிக மருத்துவர்-மக்கள் தொகை விகிதம் உள்ள மாநிலங்களில் ஒன்றாக இருப்பதை  நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மாநில அரசுகள் மற்றும் தனியார் துறையினரால் செய்யப்பட்ட முதலீடுகளால் இது சாத்தியமாகியுள்ளதே தவிர, மத்திய அரசின் முதலீடுகளால் அல்ல. மதுரை எய்ம்ஸ் போன்ற திட்டங்களுக்கு மத்திய அரசு கூடுதல் பங்களிப்பை வழங்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.  இந்தச் சூழ்நிலையில், புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டுப்பாடு விதித்தால், தமிழகத்தில் புதிய கல்லூரிகளை கொண்டு வருவதற்கான மத்திய அரசின் முதலீடுகள் எதிர்காலத்தில் முற்றிலுமாக நீக்கப்படலாம்” என முதலமைச்சர் ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார்.