பிரபல தயாரிப்பு நிறுவனமாக லைக்கா ப்ரொடக்ஷனில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பண மோசடி. ஆன்லைனில் ஆடிசன் நடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்
தனியார் தயாரிப்பு நிறுவனம் ( lyca production )
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் குமார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் நிலையில், நடிப்பதற்கு வாய்ப்பு தேடி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனது செல்போனில் இன்ஸ்டாகிராம் செயலியை பார்த்துக் கொண்டிருந்தபோது, அதில் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா ப்ரொடக்ஷனில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாகவும், ஆர்வம் உள்ளவர்கள் குறிப்பிட்ட எண்ணிற்கு செல்போன் மூலம் தொடர்பு கொள்ளலாம் என பதிவு வந்துள்ளதை பார்த்துள்ளார்.
பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்
இதனால் அஜித் குமார், குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு தனக்கு நடிக்க ஆர்வம் உள்ளதாகவும், வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனை அடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவு போட்டிருந்த இளைஞர்கள் ரிஜிஸ்ட்ரேஷன் கட்டணமாக முதலில் 2000 ரூபாயை கூகுள் பேவில் அனுப்ப வேண்டும் என கூறியுள்ளனர். அதன்படி அஜித் குமார் அவர்கள் கூறிய செல்போன் எண்ணிற்கு 2000 ரூபாயை அனுப்பி உள்ளார். இதை அடுத்து அக்ரீமெண்ட் கட்டணமாக 8000 ரூபாயும், இன்டர்வியூக்காக 7,000- ரூபாய் என மொத்தம் 17,000- ரூபாயை ஏமாற்றி பெற்றுக்கொண்டு செல்போன் எண்ணை ஸ்விட்ச் ஆஃப் செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்ட சைபர் கிரைம்
இதனால் அதிர்ச்சி அடைந்த அஜித்குமார் செங்கல்பட்டு மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்குப் பதிவு செய்து விருத்தாசலத்தை சேர்ந்த சுதாகரன் மற்றும் கேரளாவை சேர்ந்த புகழேந்தி ஆகிய இருவரை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இருவரும் சேர்ந்து தமிழக முழுவதும் 30க்கும் மேற்பட்ட நபர்களிடம் பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு வந்ததும், பல்வேறு நபர்களிடம் வீடியோ காலில் இன்டர்வியூ செய்ததும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆன்லைன் மூலமாக நூதனம் முறையில் நடைபெற்ற மோசடி சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
காவல்துறை எச்சரிக்கை
பொதுமக்கள் இது போன்று சமூக வலைதளங்களில் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் பெயரிலோ அல்லது வேறு ஏதேனும் செயல் மூலமாகவோ முன்பணமாகவோ பணத்தை கேட்டால் யாரும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பை தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைபர் கிரைமில் புகார் அளிப்பது எப்படி ?
அவ்வாறு சைபர் க்ரைம் குற்றங்களினால் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாக தங்களது புகார்களை அளிக்கலாம் என செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.