தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலு, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக அந்த மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார். கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. கன்னியாகுமரியில் குருந்தன்கோடு பகுதியில் நேற்று 13 செ.மீ அளவு மழை பதிவானது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது காலை 6 மணி நிலவரப்படி 90 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் இன்றும் கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக அக்டோபர் மாதம் தொடங்கியது முதல் கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. செப்டம்பர் மாதம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை இருந்த நிலையில் தற்போது குமரி மாவட்டத்தில் தொடர் மழை பதிவானது. மேலும் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக வரும் 9 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அக்டோபர் மாதம் முதல் மழையில் அளவு படிப்படியாக குறையும் என தனியார் வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
04.10.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
06.10.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்:
04.10.2023: தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.
School Leave: கனமழை எதிரொலி - கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு