கரூர் மாவட்டம் என்றாலே தண்ணீர் பஞ்சம் உள்ள மாவட்டம்தான். இதனை போக்கும் விதமாக முந்தைய காலகட்டத்தில் அமராவதி ஆற்றில் இருந்து உபரிநீர்கலை ஏரிகள் மூலம் நிரப்பி நிலத்தடி நீர் மற்றும் விவசாய பயன்பாட்டிற்காக கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஏரிகள் அமைக்கப்பட்டுள்ளன.


கரூர் மாவட்டத்தில் இரண்டாவது மிகப்பெரிய ஏரியான பெரியதாதம் பாளையம் ஏரி சுமார் 420 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டுள்ள ஏரி. இந்நிலையில் தற்போது ஏரிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலையில் அந்த ஏரியின் அளவு 360 ஏக்கர் பரப்பளவு சுருங்கி உள்ளது. இந்த ஏரியை காக்க பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் ஏரியில் பணிகளை முதலில் செய்வதாக வாக்குறுதி அளித்து அதைத் தொடர்ந்து, அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டு வருகிறது. கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக போராடிவரும் பொதுமக்களுக்கு இதுவரை நிரந்தர தீர்வு எதுவும் எட்டப்படவில்லை.


இந்நிலையில் அந்தப் பகுதி விவசாய சங்கங்களும் பல்வேறு கட்சிகளும் இதற்காக பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், போராட்டம் மனு வழங்கியும் எந்த பயனும் இல்லாத நிலையிலேயே பெரியதாதம் பாளையம் ஏரி தற்போது காட்சி அளிக்கிறது.




பெரியதாதம் பாளையம் பழைய ஏரியின் வரலாறு


அமராவதி ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் வரும் காலத்தில் நீரை சேமித்து வைக்கவேண்டி அணைப்பாளையம் என்ற இடத்தில் தடுப்பணை கட்டப்பட்டது. இதன் மூலம் 3,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது. இந்த நிலையில் மழைக்காலங்களில் ராஜா வாய்க்காலில் அதிகப்படியான தண்ணீர் வாய்க்காலை உடைத்துக்கொண்டு விவசாய நிலங்களில் புகுந்து பயிர்கள் சேதம் அடைந்தன. இதனால் மாற்று ஏற்பாடாக 1881ல் கரூர் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள பெரியதாதம் பாளத்தில் 420 ஏக்கர் பரப்பளவில் ஏரியை உருவாக்கி அதனில் அமராவதி ஆற்று உபரிநீரைச் சேமித்து வைத்தனர்.


இந்த நீர், வறட்சி காலங்களில் வடகிழக்குப் பகுதிகளில் உள்ள நீர் போக்கி மூலம் வெளியேற்றப்பட்டு, கரூர் நகர உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் , குடிநீருக்காக பயன்படுத்தப்பட்டது. நாளடைவில் ஏரிக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. அதை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டதில் ஏரியில் நீர் வரத்து பகுதிகளில் ஆக்கிரமிப்பு பகுதிகளாக மாற்றப்பட்டது. இதனால் ஏரிக்கு வரும் தண்ணீர் குறைந்து தற்போது ஏறி முழுவதும் வற்றிப்போய் உள்ளது. இதனால் கரூர் மற்றும் க.பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் மற்றும் குடிநீருக்கு போதிய தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.


ஒரு காலகட்டத்தில் கடல் போல் காட்சி அளித்த பெரியதாதம் பாளையம் ஏரி தற்போது சீமைக்கருவேல மரங்கள் முளைத்து காடு போல காட்சி அளிக்கிறது. இந்நிலையில் பெரியதாதம் பாளையம் ஏரிக்கு அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டுவரும் திட்டங்கள் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.




இது குறித்து விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், பெரியதாதம் பாளையம் ஏரிக்கு 1950ம் ஆண்டு அணைப்பாளையத்திலிருந்து  தொட்டிவாடி ,எருமைப்பட்டி புதூர், வழியாகத் தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அந்தத் திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. பிறகு பெரியதாதம் பாளையம் ஏரி 1970ல் பொதுப்பணித்துறை துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. 


இறுதியாக கடந்த 2002ஆம் ஆண்டு 16 கோடி ரூபாய் மதிப்பில் அமராவதி ஆற்று நஞ்சைத் தலையூர், முட்டணையிலிருந்து பெரியதாதம் பாளையம் ஏரிக்கு தண்ணீர் கொண்டுவர போடப்பட்ட திட்டமும், கிடப்பில் உள்ளது. அமராவதி வெள்ள உபரி நீர் திட்டத்தை செயல்படுத்தினால் சின்னமுத்தம்பாளையம் குளம், ஆரியூர் குளம், நல்லி செல்லிபாளையம் குளங்களில் தண்ணீர் தேங்கும் இதனால் 75க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மற்றும் கிணறுகளில் நீர் மட்டம் உயரும். மேலும் 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் எனக் கூறினார். 




கரூர் மாவட்டத்தில் இரண்டாவது மிகப்பெரிய ஏரியான பெரியதாதம் பாளையம் ஏரியைக் காப்பாற்ற யாராவது முன்வருவார்களா என்று அப்பகுதி விவசாய பெருமக்கள் ஏங்கித்தவித்து வருகின்றனர்.