பரிவுள்ள ஆளுமை என்பது இந்த அரசின் முக்கிய கோட்பாடாகும். ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் 100 நாட்களுக்குள் தீர்வு காண்பதற்காக, முதல்வர் ஏற்கனவே சிறப்பு அலுவலர் ஒருவரை நியமித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களில், பெருந்தொற்று பரவல் காலத்திலும், இதுவரை 63,500 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என பேரவையில் பெருமைப்பொங்க பேசினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.


உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பரப்புரையின் மூலம், பெறப்பட்ட நான்கரை லட்சம் மனுக்களுக்கு எப்படி 100 நாட்களில் தீர்வு காணப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புகளோடு தொடங்கியது ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற தனிப்பிரிவு. திமுக தலைமையிலான அரசு பதவியேற்று 44 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், இதுவரை 6, 500 மனுக்களுக்கு தீர்வு கண்டிருப்பதாக ஆளுநர் உரைமூலம் அறிவித்திருக்கிறது அரசு.


 


உங்கள் தொகுதியில் முதலமைச்சர் பிரிவு எப்படி இயங்குகிறது ?


தமிழ்நாடு மின் ஆளுமை முகமையில்தான் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் குறை தீர்ப்பு அலுவலகம், சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் ஐஏஎஸ் தலைமையில் இயங்குகிறது. மனுக்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெறப்பட்டதால், முதலில் அந்த மனுக்கள் எல்லாம் மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டன. பிரிக்கப்பட்ட மனுக்கள் அனைத்தும் கம்பியூட்டர் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு, மாவட்டங்களில் உள்ள தனி அதிகாரியின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படுகிறது. அதன்பிறகு, மனுக்கள் மீதான உண்மைத் தன்மையை ஆராய்ந்து, கோரிக்கை வைக்கப்பட்ட துறை மூலமாக மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு வருகிறது.



ஷில்பா பிரபாகர் ஐஏஸ்


மாவட்ட மனுக்களுக்கு எப்படி தீர்வு ?


ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட வருவாய் அலுவலர், சீனியர் அதிகாரி ஒருவர் தலைமையில் இதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர், வந்திருக்கும் மனுக்கள் எந்த துறை சார்ந்தது என்பதை கண்டறிந்து, அந்த துறையின் அதிகாரி மூலமாக குறைகளுக்கு தீர்வு கண்டு வருகின்றனர்.


என்ன மாதிரியான மனுக்கள் அதிகம் வந்திருக்கிறது ?


வீட்டு மனை பட்டா, முதியோர் மற்றும் இன்னபிற ஓய்வூதியங்கள் கிடைக்காதது, மின் இணைப்பு கிடைக்காதது, குடி நீர் இணைப்பு இல்லை, சாலை வசதி கேட்பது போன்றவை அதிக அளவிலும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவேண்டும், ஜி.எஸ்.டி வரி வேண்டாம், சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், கிராம பஞ்சாயத்துகளை, ஒன்றியங்களை பிரிக்க வேண்டும் என்பவைகளும் பரிந்துரைகளாக கொடுத்திருக்கின்றனர்.


தங்கள் மனு பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்பதை மக்கள் எப்படி அறிந்துக்கொள்வது ?


கணினியில் அவர்களது மனுக்களை எண்ட்ரி செய்யும்போதே, அந்த மனுவில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு இது தொடர்பான குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு விடுகிறது. அந்த குறுஞ்செய்தியில் ஒரு நம்பர் கொடுக்கப்படும், அதனை வைத்து மனு எந்த நிலையில் இருக்கிறது என்பதை பொதுமக்கள் அறிந்துக்கொள்ள முடியும்.


இப்படி ஒவ்வொரு மனுக்களுக்கும் உரிய முக்கியத்துவம் கொடுத்து அவற்றுக்கு தீர்வு காணும் பணியில் ஷில்பா பிரபாகர் தலைமையிலான அணி மிகத் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. 44 நாட்களில் 63 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வுக் கண்டிருக்கும் நிலையில், 100 நாட்களில் நான்கரை லட்சம் மனுக்களுக்குமான தீர்வை எட்டிவிடமுடியுமா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும், அதிகாரிகளின் நடவடிக்கைகளை வைத்து பார்க்கும்போது அத்தனை மனுக்களுக்கும் விரைவில் தீர்வு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.