தன்னிடம் ஆட்சியைக் கொடுத்தால் ஒரே இரவில் ஜேசிபி இயந்திரம் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கசாவடிகளையும் அகற்றி விடுவேன் என்று நாம் தமிழர் ஒருங்கினைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சமூகநீதிப் போராளி இரட்டைமலை சீனிவாசனின் 76-ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இரட்டைமலை சீனிவாசன் நினைவைப் போற்றும் நிகழ்வில் சீமான் கலந்து கொண்டார். 


 



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"என் மாநில சாலையை நான் பராமரித்து கொள்கிறேன் என்று சொல்வதற்கு இங்கு ஆள் இல்லை. என்னிடம் ஆட்சியைக் கொடுத்து பாருங்கள். ஜேசிபி இயந்திரம் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்றி விடுவேன் " என்று தெரிவித்தார். 






சுங்கச்சாவடி கட்டண உயர்வு:   


தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் சுங்கச்சாவடிகளைக் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். தமிழகத்திலுள்ள 48 சுங்கச் சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 24 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. அவை தவிர்த்து மீதமுள்ள விக்கிரவாண்டி, ஓமலூர், தருமபுரி,  சமயபுரம் உள்ளிட்ட 24 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்தது.


சுங்கக் கட்டண உயர்வு ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்தப்படுவது வழக்கமான ஒன்று தான்; இதில் புதிதாக எதுவும் இல்லை என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்தது. முன்னதாக, தமிழ்நாட்டில் உள்ள 32 சுங்கச்சாவடிகளை மூட மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று மாநில அமைச்சர் எ.வ.வேலு சட்டமன்றத்தில் தெரிவித்தார். 


கடந்த 2ம் தேதி, சட்டசபையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகிய துறைகளின் மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.


அப்போது, இன்று கவன ஈர்ப்பு தீர்மானத்தின்போது மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ-வுமான ஜவாஹிருல்லா சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானத்தை கொண்டு வந்து அவர் பேசும்போது, தமிழ்நாட்டில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 21 சுங்கச்சாவடிகளில் நேற்று கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகள் கந்துவட்டிக்காரர்கள் போல வசூல் செய்கிறார்கள். தமிழக மக்கள் மீது பொருளாதார தாக்குதல் நடத்தி வருகின்றனர். எனவே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் பொதுமக்கள் கட்டணமின்றி பயணம் செய்வதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்


இதையடுத்து, அவருக்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, “ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலே ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. சென்னையை சுற்றியுள்ள பரனூர், நெமிலி, சென்ன சமுத்திரம், சூரப்பட்டு உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளை அகற்ற விரைவில் ஒன்றிய அமைச்சரை சந்திக்க உள்ளார்.


தமிழ்நாட்டில் உள்ள சாலைகளின் அடிப்படையில் 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், 48 சுங்கச்சாவடிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள 32 சுங்கச்சாவடிகளை மூடுவது தொடர்பாக, ஒன்றிய அமைச்சரை சந்திக்கும்போது வலியுறுத்தப்படும்.” இவ்வாறு அவர் கூறினார்.


தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் பலவும் காலாவதியான பிறகும் தொடர்ந்து இயங்கி வருவதாகவும், சில சுங்கச்சாவடிகளில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்களை காட்டிலும் அதிகளவில் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதுமட்டுமின்றி, தீபாவளி, பொங்கல் போன்ற விழா காலங்களில் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும்போது சுங்கச்சாவடிகள் காரணமாகவே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.


இதன் காரணமாகவே, சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று தொடர்ந்து பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளை மூடுவது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும் என்று கூறப்பட்டதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.