தமிழகத்தில் இந்தாண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு பல மாவட்டங்கள் வெப்பமானது பதிவாகி வந்தது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வந்தனர். கோடை காலம் முடிந்து தற்போது பருவமழை காலம் துவங்கி உள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழையானது பெய்து வருகிறது. குறிப்பாக ஜூன் ஜூலை மாவட்டங்களில் எப்போதும் இல்லாத அளவில் அவ்வப்போது மழையானது பெய்து வருகிறது. இதனால் இதமான சூழல் நிலவி வருவதால் மக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.  மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.  இந்த நிலையில் தற்போதைய வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 7 நாட்களுக்கு வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


வானிலை ஆய்வு மையம் சொன்னது என்ன ?


குறிப்பாக இன்று தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும்  காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வலுவான  தரைக்காற்று 30-40 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோயமுத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதே போல நாளையும்  தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்  காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வலுவான  தரைக்காற்று 30-40 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாளை மறுநாளான 24 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும்  காரைக்கால் பகுதிகளில்  லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


அடுத்த 24 மணி நேரத்தில் என்ன ஆகும் ?


மேலும் அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதோடு அதிகபட்ச வெப்ப நிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மைய செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.