சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.


அதிகாலை முதலே மழை:


வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக,   சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்து இருந்தது. இந்நிலையில், அதிகாலை முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.


பரவலாக மழை:


குறிப்பாக கோயம்பேடு, வடபழனி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் மற்றும் ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மிதமான மழை பெய்து வருகிறது. தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை, நந்தனம், தியாகராய நகர், கோட்டூர்புரம், கிண்டி, சைதாப்பேட்டை, அசோக்நகர், மத்திய கைலாஷ், அடையாறு மற்றும் திருவான்மியூர் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.


புறநகர் பகுதிகளிலும் மழை:


புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், மதுராந்தகம், சோழிங்கநல்லூர், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் சுமார் 4 மணியளவில் இருந்து மிதமான மழை கொட்டி வருகிறது.


பொதுமக்கள் மகிழ்ச்சி:


பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பொழியும் மழையால் சென்னை குளிர்ச்சியடைந்து காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் ஒரு சில தாழ்வான சாலைகளில் மழைநீர் தேங்கி இருப்பதால், காலை வேலையில் வேலை மற்றும் நடைபயிற்சிக்கு செல்வோருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.


வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை:


13.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


14.07.2023 முதல் 18.07.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும். 


மீனவர்களுக்கான எச்சரிக்கை:  


வங்கக்கடல் பகுதிகள்: 


வரும் 16ம் தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


வட தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 40  முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 


14.07.2023: இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40  முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  


15.07.2023, 16.07.2023: இலங்கைய ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள்,  தென்கிழக்கு, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40  முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 


அரபிக்கடல் பகுதிகள்:


13.07.2023, 14.07.2023: கேரள- கர்நாடக கடலோரப்பகுதிகள், இலட்சத்தீவு பகுதிகள், மாலதீவு  பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில்  சூறாவளிக்காற்று மணிக்கு 40  முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


15.07.2023: வடக்கு கேரள- கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல், இலட்சத்தீவு பகுதிகளில்   சூறாவளிக்காற்று மணிக்கு 40  முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


16.07.2023: வடக்கு கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40  முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.