இரண்டு கைகளிலும் வாட்ச் அணிவது ஏன்? – பிடிஆர் கொடுத்த விளக்கம்


 


ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநில உரிமைகள் குறித்து தமிழகம் சார்பில் கலந்து கொண்ட நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியது பாஜகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது இரண்டு கைகளிலும் வாட்ச் அணிந்திருப்பதை கலாய்க்கும் வகையில் அவரை ‛டபுள் வாட்ச் டக்ளஸ்’ என்று மீம்ஸ் போட்டு விமர்சித்திருந்த நிலையில் ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு நேர்காணல் அளித்திருந்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். தனது இரண்டு கைகளிலும் வாட்ச் அணிந்திருப்பதற்கான ரகசியத்தை கூறியுள்ளார்.



80களின் பிற்பகுதியிலோ அல்லது 90களின் முற்பகுதியிலோ ஒருநாள் வீட்டில் தனது தாயார் இரண்டு ரோலக்ஸ் வாட்ச்களை கண்டுபிடித்திருந்ததாகவும், அந்த அதில் ஒரு வாட்ச் 1940களின் மாடல் எனவும் மற்றொரு வாட்ச் 1960களின் மாடலாகவும் இருந்ததாக கூறிய பிடிஆர். இரண்டு வாட்ச்களும் பழுதான நிலையில் இருந்ததாக குறிப்பிட்டார். இந்த வாட்ச்களில் ஒன்று தனது தாத்தா உடையது என்றும் மற்றொன்று தனது தந்தை உடையது என்றும் கூறிய அவர், அந்த இரண்டு வாட்ச்களையும் அமெரிக்காவில் பழுது நீக்கம் செய்த நிலையில் தனது தாத்தா நினைவாக பழுதுநீக்கம் செய்த ரோலக்ஸ் வாட்சை அணிய தொடங்கியதாக கூறினார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.



பின்னர் அமெரிக்காவில் FitBit வகை வாட்ச்கள் அறிமுகமாகத் தொடங்கிய காலத்தில் உடல் நலனை அறிவதற்காக ஆப்பிள் வகை FitBit வாட்ச்களை தனது மற்றொரு கைகளில் அணியத் தொடங்கியதாக குறிப்பிட்ட அவர். FitBit வகை வாட்ச்களை மட்டும் ஆண்டுதோறும் வரும் நவீன மாடல்களுக்கு ஏற்றபடி வாங்கி ஒரு கையில் அணிந்து வந்ததாக கூறினார்.


மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்னால் அந்த ரோலக்ஸ் வாட்ச் பழுந்தடைந்துவிட்டதாக கூறிய அவர், ஊரடங்கு காலத்தில் அதனை பழுது நீக்க முடியவில்லை எனவும் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வந்துள்ள நிலையில் தனது முன்னோர்களின் ஆசி தனக்கு இருப்பதாக நம்புவதாகவும், எனவே அதற்காக வாட்ச் அணிய தேவையில்லை எனவும் குறிப்பிட்ட பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், இருந்தாலும் அந்த ரோலக்ஸ் வாட்ச்சை இன்னும் சரிசெய்ய முடியவில்லை எனவும், அதனை எப்போது சரிசெய்தாலும் அதனை அணிவது குறித்து அப்போதுதான் முடிவெடுப்பேன் எனவும் கூறினார்.


இந்திய நேரத்தையும் அமெரிக்க நேரத்தையும் ஒரே நேரத்தில் அறிந்து கொள்வதற்காகத்தான் பிடிஆர் இரண்டு கைகளிலும் வாட்ச் அணிவதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்,


அமெரிக்காவில் லேமென் பிரதர் நிறுவனத்தில் பணியாற்றிய காலத்தில் உலக சந்தை நிலவரத்தை தெரிந்து இருக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால் உலக நாடுகளின் நேரங்கள் குறித்து அறிந்து வைத்திருந்ததாகவும், ஆனால் தற்போது அதற்கு அவசியமில்லை என்றும் சென்னை மற்றும் மதுரையின் நேரத்தை மட்டும் தெரிந்து வைத்திருந்தாலே போதுமானது என நினைப்பதாகவும் கூறினார்.