தற்போதைய டிஜிபியாக இருக்கும் திரிபாதி, இந்த மாத இறுதியில் ஓய்வு பெற உள்ள நிலையில், தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், டிஜிபி நியமனத்தில் மாநில சுயாட்சி உரிமை மீறப்படுகிறதா என்ற கேள்வியும் அதோடு சேர்ந்தே எழுந்துள்ளது.



தற்போதைய டிஜிபி திரிபாதி ஐபிஎஸ்


சட்டம்  ஒழுங்கு என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளபோது, அதனை கண்காணிக்கும் தலைமை பொறுப்பான சட்டம் ஒழுங்கு காவல்துறை இயக்குநர் பதவியில் மாநில அரசு ஒருவரை தேர்ந்தெடுத்து நியமிக்கமுடியாத சூழல் நிலவுகிறது.  ஒரு மாநிலத்தின் தலைமைச்செயலாளர், உள்துறை செயலாளர் போன்ற முக்கிய பொறுப்புகளில் தகுதி வாய்ந்த அதிகாரிகளை தேர்ந்தெடுத்து நியமிக்கும் மாநில அரசால், காவல்துறை டிஜிபி பதவிக்கு  மட்டும் தகுதியான நபரை தேர்வு செய்து நியமிக்க முடியாதா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.


காவல்துறை டிஜிபி பதவியை பொறுத்தவரை டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளின் பட்டியலை UPSC எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணயத்திற்கும், உள்துறை அமைச்சகத்திற்கும் அனுப்பி வைத்து, அவர்கள் தேர்வு செய்து கொடுக்கும் 3 நபர்களில் ஒருவரைதான் தங்கள் மாநில டிஜிபியாக ஒரு அரசு நியமிக்க முடியும் என்ற நடைமுறை தொடர்கிறது. இந்த நடைமுறை என்பது முற்றிலும் மாநில சுயாட்சி தத்துவத்திற்கும், மாநில உரிமைக்கு எதிரானது என்ற குரல் இப்போது ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.


தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் முதலமைச்சரால், அமைச்சரால் டிஜிபி நியமனம் தொடர்பாக டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க முடியாது. மாறாக, தற்போதைய டிஜிபி மற்றும் தலைமைச்செயலாளர் மட்டுமே அந்த கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் மாநில டிஜிபி குறித்த பரிந்துரைகளை அளிக்க முடியும் என்ற நிலை இருக்கிறது.



தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


 


அதேபோல், டிஜிபியாக தேர்வு செய்யப்படும் நபர், பணி ஓய்வு பெற குறைந்தப்பட்சம் ஆறு மாதங்கள் இருக்க வேண்டும் என்பது எதன் அடிப்படையில் ? தமிழ்நாட்டிற்கு என்று தனியாக சிறப்பு காவல்துறை சட்டம் இருக்கும்போது, அதன்படி 5 பேரை தேர்வு செய்து கொடுக்காமல், 3 பேரை மட்டுமே தேர்வு செய்து கொடுப்பது எதனால் ? என்ற கேள்விகளுக்கான விடைகள் தெரியாமல் இருக்கும்போது, டிஜிபியாக நியமிக்கப்படும் நபர் 2 வருடங்கள் பதவியில் நீடிப்பார். அந்த காலத்தில் அவரை மாற்றவோ, பதவியில் இருந்து நீக்கவோ அவ்வளவு எளிதாக மாநில அரசால் முடியாது. ஆனால், தலைமைச்செயலாளரையோ, உள்துறை செயலாளரையோ உடனடியாக மாற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கிறது.



தமிழ்நாடு காவல்துறை தலைமையகம்


இப்படி மத்திய அரசு அதிகாரிகள் தேர்வு செய்து கொடுக்கும் டிஜிபி, மாநில அரசின் அறிவுறுத்தல்களுக்கு ஒத்துழைத்து எப்படி செயல்படுவார் என்ற கேள்வியும் கூடுதலாக எழாமல் இல்லை. ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவு இருப்பதனால், இது குறித்த விவாதம் என்பது பெரிய அளவில் எழாமல், காவல்துறை வட்டாரத்தில் மட்டுமே விவாத பொருளாகி, அத்தோடு அடங்கிவிடுகிறது. அதேபோல், இதுவரை இந்த நடைமுறையை எதிர்த்து எந்த மாநில அரசும் வழக்கு தொடராத நிலையில்,  மாநில சுயாட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழ்நாடு அரசு இதனை எதிர்க்குமா என்ற ஆவல் பலரிடையே ஏற்பட்டிருக்கிறது.


 


கடந்த காலங்களில் தமிழ்நாட்டின் டிஜிபியாக டிகே.ராஜேந்திரனை நியமிக்கக் கூடாது என்று கடுமையான எதிர்ப்பு இருந்த நிலையில், அவருக்கும் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த ஜார்ஜ்க்கும் இடையே கடுமையான போட்டி ஏற்பட்ட போதும், நள்ளிரவில் டிகே ராஜேந்திரன் தான் தமிழ்நாடு டிஜிபி என அறிவிப்பாணை வெளியானது.



டிகே ராஜேந்திரன் மற்றும் ஜார்ஜ் ஐபிஎஸ்


அதேபோல, தற்போதைய டிஜிபியாக இருக்கும் திரிபாதி நியமனத்தில் கூட அப்போதைய எடப்பாடி பழனிசாமி அரசு விரும்பியது ஜாபர் சேட்டைதான். ஆனால், அன்றைய தலைமைச் செயலாளராக, டெல்லி சென்ற கிரிஜா வைத்தியநாதன், தமிழ்நாடு அரசு  விரும்பும் நபர் குறித்து சரியான வாதங்களை எடுத்து வைக்கவில்லை என கூறப்படுகிறது. அதனால்தான் திரிபாதி டிஜிபியாக நியமிக்கப்பட்டார் என்றும் அப்போது காக்கிகள் வட்டாரத்தில் கிசிகிசுக்கப்பட்டது.



ஜாபர் சேட்


புதிய கல்விக் கொள்கை தொடர்பான கூட்டத்தில் அமைச்சர் இல்லாமல் அதிகாரிகளை வைத்து ஆலோசனை செய்வதை ஏற்க முடியாது என்று சொன்ன பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அந்த கூட்டத்தையே புறக்கணித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் மக்கள் பிரதிநிதியும் இருக்கும்போது, பள்ளிக் கல்வித்துறைக்கு என தனியாக அமைச்சரும் இருக்கும்போது, அதிகாரிகளை மட்டுமே வைத்து கூட்டம் நடத்துவது என்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணானது, மாநில சுயாட்சிக்கு எதிரானது என பேட்டிக் கொடுத்தார். இப்போது இந்த டிஜிபி நியமனத்தில் தமிழ்நாடு அரசு என்ன நிலைபாடு எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.



முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் அன்பில் மகேஷ்


மாநில சுயாட்சி, ஒன்றிய அரசு, மாநிலங்களின் துணையோடு மட்டுமே வலிமையான ஒன்றிய அரசை உருவாக்க முடியும் என்றெல்லாம், தொடர்ந்து முழங்கியும், பல்வேறு மாநில முதல்வர்களுக்கு கடிதங்கள் எழுதியும் வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த டிஜிபி நியமனத்தில் என்ன மாதிரியான முடிவை எடுக்கப்போகிறார் என்பதும், மாநில அரசின் உரிமைகளுக்கு ஆபத்து வந்தால், அரசியலமைப்பு சட்டத்தின் துணையோடு அதனை எதிர்த்து போராடுவோம் என்று சட்டப்பேரவையிலேயே அறிவித்த அவர், மத்திய அரசின் டிஜிபி நியமன நடைமுறையை எதிர்த்தும், உச்சநீதிமன்ற உத்தரவை மறுசீராய்வு செய்ய வேண்டும் என்றும் சட்டப்போராட்டத்தை முன்னெடுப்பாரா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


இது குறித்து தமிழ்நாடு முன்னாள் சட்டம் ஒழுங்கு டிஜிபி நட்ராஜ் ஐபிஎஸ்-சிடம் கேட்டபோது :-


டிஜிபி நியமனம் என்பது உச்சநீதிமன்ற வழிகாட்டலின் அடிப்படையில், தீர்ப்பின்படி நடைபெறுகிறது. உச்சநீதிமன்றம் சொன்னால் அது கட்டளை. இதில் மாநில உரிமை மீறப்படுவதாக சொல்வதில் எல்லாம் உண்மை இல்லை. மத்திய அரசுதான் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளை தேர்வு செய்து மாநிலங்களுக்கு அனுப்புகின்றனர். இந்த பணிகள் என்பது அகில இந்திய அளவில் வேலை செய்வது. முதலில் இதனை புரிந்துக்கொள்ள வேண்டும். இப்படி பேசுவதெல்லாம் குறுகிய மனபான்மையே தவிர வேறொன்றும் இல்லை. டிஜிபியை தேர்வு செய்யும் இந்த நடைமுறை நூற்றுக்கு நூறு சதவீதம் சரியே. மத்திய அரசின் நியமனங்களான CRPF, BSF போன்ற துறைகளின் தலைமை இயக்குநர் பொறுப்புகளில் கூட இந்த நடைமுறையைதான் கடைபிடிக்கின்றனர் என்றார்.


அதேபோல், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான பாலசந்தரிடம் கேட்டபோது :




டிஜிபி நியமனத்தில் மாநில சுயாட்சி மீறப்படுவதாக கூறப்படுவது ஓரளவிற்கு உண்மைதான். இன்னும் சரியாக சொல்வதென்றால், ஆட்சியில் உள்ளவர்களின் உரிமையை மீறும் செயலாக இதை எடுத்துக்கொள்ளலாம். சிபிஐ-யை பொறுத்தவரைக்கும் இதில் மாற்றம் செஞ்சாங்க, சிபிஐ இயக்குநர் நியமனத்தின்போது பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கூடி தேர்வு செய்ய வேண்டும் என்ற நடைமுறை இருக்கிறது.  காவல்துறையில் டிஜிபி நியமனத்தில் இந்த முறை பின்பற்றப்பட காரணம், யாரை பயன்படுத்தினால் மிகப்பெரிய கேடு மக்களுக்கு விளையும் என்று பார்த்தால், அது காவல்துறையைதான். அதனால், அந்த காவல்துறையின் தலைமை இயக்குநரை தேர்வு செய்வது செய்வதில் மிகுந்த கவனம் தேவை என்பதால் இதுபோன்ற நடைமுறை இருக்கிறது. அதேபோல், இந்த மாதிரியான பதவிகளுக்கான தேர்வில் இன்னும் கொஞ்சம் வெளிப்படையாக இருந்தால்தான் அது சரியாக இருக்கும் என்றார்.