பால் பொருட்களை நெகிழி பைகளுக்கு பதிலாக கண்ணாடி பாட்டில்களில் விற்பனை செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசுக்கு யோசனை வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது, 14 வகையான நெகிழி பொருட்கள் பயன்படுத்த தடை நடைமுறையில் இருக்கிறது. இந்த தடையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யவேண்டும் என கோரிக்கை வைத்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின்போது, உற்பத்தியாளர்கள் தரப்பில் உணவு பொருட்கள், திண்பண்டம், விளையாட்டு பொம்மைகள், துணிமணிகள் ஆகியவை பிளாஸ்டிக் பைகளில்தான் விற்கப்படுவதாகவும், மஞ்சள் பை திட்டம் கொண்டு வந்தாலும், அதற்குள் வைத்து கொடுக்கப்படும் 15 பொருட்களும் நெகிழி பைகளாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்களை எடுத்துச் வருவதை தடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளாத வகையில் எந்த பயனும் இல்லை. மேலும், அவைகளை பறிமுதல் செய்வதால் பெரிய அளவில் பலன் ஏற்படாது என்று நீதிபதிகள் கூறினர்.
மேலும், நீதிபதிகள் ’தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் சில்லரை வியாபார கடைகளை தமிழக அரசு மூடுகிறது. ஆனால், அரசே நெகிழி பைகளில் விற்பனை செய்யலாமா? நியாயவிலை கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் நெகிழி பைகளில்தான் வழங்கப்படுகிறது. நெகிழ் பைகளில் அடைக்கப்பட்ட பொருட்களை மஞ்சள் பையில் வழங்குவதால் எந்த பயனும் இல்லை. அரசு நடத்தும் கடையில் நெகிழி பயன்படுத்தினால் எப்படி பொதுமக்கள் மத்தியில் மாற்றத்தை காண முடியும்?’ என்று கேள்வி எழுப்பினர்
குறிப்பாக, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பால் மற்றும் பால் பொருட்களை ஏற்கனவே நடைமுறையில் இருந்ததைப்போல, ஏன் கண்ணாடி பாட்டில்களில் விற்பனை செய்ய கூடாது? என தமிழக அரசை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், பால் பொருட்களுக்கு தான் பெருமளவிற்கு நெகிழி பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனால், நெகிழி பயன்படுத்துவதை தடுக்க அரசு கண்ணாடி பாட்டில்களில் பால் பொருட்களை விற்பனை செய்ய முன்வரவேண்டும் என்றும் யோசனை கூறினர்.
இந்த விஷயத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 13க்கு தள்ளவைத்தனர்.