விழுப்புரம் அருகே கோலியனூர் வள்ளலார்நகர் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாணவர் ஒருவர், கோலியனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்துள்ளார். அங்கு வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாக அம்மாணவர், பள்ளி வளாகத்தில் அமர்ந்து, தான் வைத்திருந்த பேப்பரை பிரித்து ஏதோ சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இதை பார்த்த சக மாணவர்கள், அந்த மாணவரிடம் சென்று என்ன சாப்பிடுகிறாய் என்று கேட்டுள்ளனர். அதற்கு விஷத்தை சாப்பிட்டு விட்டதாக கூறிய அம்மாணவர், அந்த பேப்பரை கசக்கி அங்கிருந்து தூக்கி வீசிவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள், இதுபற்றி பள்ளி ஆசிரியரிடம் கூறிவிட்டு அங்கிருந்து அவசர, அவசரமாக அம்மாணவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் பள்ளியில் உள்ள மற்ற மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் மத்தியில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் அப்பள்ளியில் பெரும் பதற்றமான நிலை நீடித்தது. இதனிடையே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவருக்கு டாக்டர்கள் உடனடியாக முதலுதவி அளித்தனர்.




பின்னர் அம்மாணவருக்கு ஊசி போடவும், இனிமா கொடுக்கவும் ஏற்பாடு செய்தனர். இதையறிந்த அந்த மாணவர், சிகிச்சைக்கு பயந்து அங்கிருந்த டாக்டரிடம், தான் விஷம் எதுவும் சாப்பிடவில்லை என்றும் வீட்டில் இருந்து பள்ளிக்கு புறப்படும் போது அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்து மாவை சிறிதளவு வாங்கி அதை ஒரு பேப்பரில் மடித்துக்கொண்டு பள்ளி வளாகத்தில் வைத்து சாப்பிட்டதாகவும், அந்த சத்து மாவை சக மாணவர்களுக்கு கொடுக்க விருப்பமில்லாமல் அவர்களை வெறுப்பேற்றும் விதமாகவும், பயமுறுத்தும் விதமாகவும் விஷம் சாப்பிட்டதாக கூறினேன், இதை உண்மையென நம்பிய அவர்கள், என்னை மருத்தவமனைக்கு அழைத்து வந்து விட்டதாக கூறினார்.




இதனை டாக்டர்களிடம் கூறிவிட்டு அவசர சிகிச்சை பிரிவில் இருந்து அம்மாணவர் வெளியே ஓட்டம் பிடித்தார். பின்னர் மருத்துவமனை  வளாகத்தில் காத்திருந்த சக மாணவர்களிடம் இதுபற்றி அவர் கூறி, உங்களிடம் விளையாட்டாக சொல்லியதாக கூறினார். அதன் பிறகு அம்மாணவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனையில் இருந்து சக நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு கோலியனூர் பள்ளிக்கு வந்தார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் மோகன், அப்பள்ளி ஆசிரியர் ஒருவர் மூலமாக அம்மாணவரை செல்போனில்  தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அம்மாணவரிடம், விளையாட்டாக சொன்ன ஒரு பொய்யினால் சக மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர், ஆசிரியர்களும் பதற்றமடைந்து விட்டனர். இனி இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் படிப்பில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வாழ்க்கையில் முன்னேற்ற பாதைக்கு செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். பள்ளியில் விஷம் குடித்ததாக நாடகமாடிய மாணவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.