புதுச்சேரி அடுத்த மண்ணாடிப்பட்டு பெரியபேட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் முழு உருவ வெங்கல சிலையை திறந்து வைத்த சிதம்பரம் மக்களவை தொகுதி உறுப்பினரும் விசிக தலைவருமான திருமாவளவன், நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, புதுச்சேரி மாநில ஆட்சி நிர்வாகத்தில் பாஜகவின் தலையீடு வெளிப்படையாக தெரிகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட என்.ஆர்.காங்கிரஸ் அரசு சுதந்திரமாக இயங்கிவில்லை என்றும் தெரிகிறது. ஏற்கனவே கிரண்பேடி ஆளுநராக இருந்த போது காங்கிரஸ் அரசுக்கு எத்தகைய நெருக்கடிகளை கொடுத்தனரோ அதேபோல தற்போது என்.ஆர்.காங்கிரஸ் அரசுக்கும் ஆளுநர் மூலம் கடுமையான நெருக்கடிகள் தந்து கொண்டிருக்கிறார்கள்.



விரைவில் புதுச்சேரியில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்துவதற்கும் ஆளுநர் மூலம் மத்திய பாஜக அரசு சதித்திட்டம் தீட்டி வருவதாகவும் தகவல் வெளியாகின்றன. இந்த போக்கு மிகவும் ஆபத்தானது. இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. முன்னாள் முதல்வர் நாராயணசாமியை போல தற்போதைய முதல்வர் ரங்கசாமி வெளிப்படையாக எதிர்க்காமல் அமைதி காப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. அவர் சுதந்திரமாக ஆட்சி செய்ய வேண்டும். மத்திய அரசின் தலையீடு தவிர்க்கப்பட வேண்டும். தமிழகம், புதுச்சேரி ஜனநாயக சக்திகள் இப்பிரச்சினையில் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று விசிக கேட்டுக் கொள்கிறது.




மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டம் பயிலும் மாணவர்கள் கியூட் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். தேசிய கல்விக் கொள்கையில் இதுவும் ஒன்று. மருத்துவக் கல்விக்கு நீட் நுழைவு தேர்வு போன்று, பட்டப் படிப்புக்கும் நுழைவுத் தேர்வு என்பது உள்நோக்கத்துடன் கூடிய தொலைநோக்குத் திட்டமாக தெரிகிறது. தேசிய கல்விக்கொள்கை கைவிடப்பட வேண்டும். கியூட் நுழைவுத் தேர்வு முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இவ்வளவு விமர்சனங்கள், நெருக்கடியான சூழலிலும் சட்டப் பேரவையில் 2 முறை நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு தமிழக ஆளுநர் அனுப்பி வைக்கவில்லை. ஆளுநரை மாற்ற வேண்டும் என்பதல்ல எங்களது கோரிக்கை, ஆளுநரே கூடாது என்பது தான். எந்த மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் ஆளுநர் பதவி கூடாது. அதற்கு மம்தா பானர்ஜி முதல்வராக இருக்கும் மேற்கு வங்க அரசு சான்றாக இருக்கிறது.ஆளுநர் உடனே நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொட


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண