புதியதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி ரவி, ஆணையரகத்தின் முழு கட்டமைப்புகளை உருவாக்கும் பணியில் பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் தாம்பரம் காவல் ஆணையரகத்தின் கீழ் காவல் நிலையங்கள் ஒதுக்கப்பட்டு செயல்படத் துவங்கியுள்ளன. இந்நிலையில் தாம்பரம் காவல் ஆணையர் ரவி, கட்டுப்பாட்டில் செயல்படும் காவல் நிலையங்களில் காவலர்கள் முறையாக பணி செய்யாததை கண்டித்து வாக்கி டாக்கி மூலம் காவலர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குறிப்பாக பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் கணவரால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் நான்கு முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததை குறிப்பிட்டு, சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் உள்ள காவல் நிலைய எழுத்தர் முதல் ஆய்வாளர் வரை அனைவரும் கூண்டோடு கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் இடமாற்றம் செய்யப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார். பெண் ஒருவர் பாதிக்கப்பட்டு நான்கு முறை தலைமையகத்திற்கு வந்து புகார் அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பிய அவர், காவலர்கள் பொது மக்கள் சேவகர்கள் எனத் தெரிவித்துவிட்டு துன்புறுத்துவதற்காக பணிபுரிகிறார்களா, என எச்சரித்துள்ளார்.
மேலும் தன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சைபர் குற்றங்கள் தொடர்பாக புகார் அளிக்க வந்தால் உடனடியாக புகாரைப் பெற்று, சிஎஸ்ஆர் கொடுக்கவேண்டும் என தெரிவித்தார். சைபர் குற்றங்கள் தொடர்பாக குறையோடு வரும் பொதுமக்களின் புகார்களை பெற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பாக செயல்களில் ஈடுபடுங்கள் என தெரிவித்துள்ளார். அதை விடுத்து புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் தாம்பரம் காவல் ஆணையர் தலைமை இடத்திற்கு சென்று புகார் அளிக்குமாறு அலைக்கழிக்க கூடாது என உத்தரவிட்டுள்ளார். அலைக்கழித்தால் பொது மக்கள் என்ன செய்வார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தன்னைப் பொறுத்த வரையில் காவலர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும், சிறப்பாக செயல்படுவதை மட்டுமே தான் எதிர்பார்க்கிறேன். கடமையைச் செய்யத் தவறினால் கூண்டோடு இடமாற்றம் செய்ய நேரிடும் என தன் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து காவல் நிலையங்களுக்கும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்