தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை குடியரசுத் தலைவர் அறிவித்தார். இந்த அறிவிப்பு, தமிழக அரசியலில் பேசும்பொருளாகி உள்ளது.முன்னதாக, இதுகுறித்து கருத்து தெரவித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், "உளவுத்துறையில் பணியாற்றவரை ஆளுநராக நியமித்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 'மொழி உணர்வை முளையிலேயே கிள்ளி எறிய நினைப்பவர்’ : தமிழ்நாட்டிற்கு நியமிக்கப்பட்டிருக்கும் புதிய ஆளுநரை திரும்ப பெற வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தார். மறுபுறம், புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை நியமித்ததற்கு வலதுசாரி சிந்தனையாளர்கள்  மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர். 


மாநில ஆளுநரின் அதிகாரம் என்ன? 


பதவிக்காலம், ஆட்சி அதிகாரம், பதவிக்கான வரைமுறைகள், சிறப்பு சலுகைகள் என அனைத்திலும் குடியரசுத் தலைவரின் பதவிக்கு ஒப்பானதாக ஆளுநர் பதவி உள்ளது. எனினும், இரண்டு முக்கிய விஷயங்களில் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஆளுநர் மாறுபடுகிறது. முதலாவாதாக, குடியரசுத் தலைவர் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆளுநர், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். எனவே, ஆளுநர் இயல்பாகவே பிரதிநிதித்துவ நம்பகத்தன்மையைக் கொண்டிருக்கவில்லை. 


இரண்டாவதாக, ஆளுநர்,  குடியரசுத் தலைவர் விரும்பும்வரைதான் பதவியில் இருப்பார் (Pleasure of the President). அதாவது, எந்த காரணமும் அளிக்காமல் ஆளுநரை பதிவியில் இருந்து அகற்றும் உரிமை குடியரசுத் தலைவருக்கு உண்டு. 


ஏன் ஆளுநர் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை: ஆளுநரின் உண்மையான ஆட்சி அதிகாரம் குறித்து இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தில் பல்வேறு விவாதங்கள்  எழுப்பப்பட்டன. சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமையிலான மாகாண அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழு, மாநில அளவில் வெகுஜன மக்கள் நேரடித் தேர்தல் மூலம் ஆளுநர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. பி.என். ராவ் போன்ற அரசியலமைப்பு நிபுணர்கள் மறைமுகத் தேர்தல் (குடியரசுத் தலைவர்) மூலம் ஆளுநர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.   



 


ஆனால், அம்பேத்கர் தலைமையிலான  சட்டவரைவுக் குழு இந்த இரண்டு பரிந்துரைகளும் முற்றிலுமாக புறக்கணித்தது. இறுதியில், நீண்ட நெடிய விவாதத்திற்குப் பிறகு, ஒரு மாநிலத்தின் ஆளுநர் குடியரசுத் தலைவரால் பணியமர்த்தப்படுவார் என்ற 155வது சட்டப்பிரிவு  இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது. இந்திய அரசயலமைப்பின் சிற்பிகள், ஒரு மாநிலத்தின் ஆளுநரை எப்படி கற்பனை செய்திருந்தனர் என்பதை புரிந்து கொண்டால் மட்டுமே தற்போதைய கேள்விகளுக்கு நம்மால் பதில் தேட முடியும். 


முதலாவதாக, இங்கிலாந்தைப்போல் நாடாளுமன்ற ஜனநாயக முறையை இந்தியா பின்பற்றி வருகிறது. இதில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்/ முதல்வர் தான் உண்மையான ஆட்சி அதிகாரத்தைக் கொண்டுள்ளனர். மாநிலத்தின் ஆட்சி அதிகாரம் ஆளுநரிடம் உற்றமைந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தாலும், முதல் அமைச்சரவைத் தலைவராகக் கொண்ட  அமைச்சரவையின் அறிவுரையின் பெயரிலே ஆளுநர் செயல்பட வேண்டும் என்பதுதான் நாடாளுமன்ற ஜனநாயகமாக உள்ளது. எனவே, ஆளுநரின் அதிகாரம் மிகவும் பரந்துபட்டவை ஆயினும், பொதுவாக இவர் உள்ளூர் அரசியலில் தலையிடுவதாக அமையக்கூடாது என்ற கருத்தைத்தான் இந்திய அரசியலமைப்பு வலியுறுத்திகிறது.    


மிகவும் அதிகாரதத்துவம் வாய்ந்த ஆளுநரை தலைவர்கள் விரும்பாதற்கு வேறு சில காரணங்களும் உண்டு. பொதுவாக,  தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுநர் அமைந்தால், மாநில அளவில் பிரிவினைவாதம் தீவிரமடையும் என்று கருத்து ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்களிடம் இருந்து வந்தது. குறிப்பாக, தேர்தல் மூலம் ஆளுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியா என்ற சிந்தனையே அது சிதைத்து விடும் என்று நேரு கருதினார். தேசிய ஒற்றுமையை உறுதி செய்யும் நபராகத் தான் ஆளுநர் கற்பனை செய்யப்பட்டார். 


இந்தியாவின் மாபெரும் முரண்பாடு?  நாடாளுமன்ற ஜனநாயாக முறையை இந்தியா பின்பற்றினாலும், பல்வேறு முரண்பாடுகளை இந்திய அரசியலமைப்பு கொண்டுள்ளது. உதாரணமாக, 1967-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு  சட்டப்பேரவையில், காங்கிரஸ் இல்லாத கட்சிகள் பெரும்பான்மை இழந்த நேரத்தில் ஆளுநர் சட்டப்பேரவை கலைத்து விடுவது வாடிக்கையாக இருந்தது. இங்கிலாந்து, போன்ற மேற்கத்திய நாடுகளில் பெரும்பான்மை என்பது நாடாளுமன்ற வளாகத்துக்குள் எடுக்கப்படும். ஆனால், இந்தியாவில் ஆளுநர் உறுப்பினர்களின் தலையை எண்ணித்தான் பெரும்பான்மையை உறுதி செய்கிறார்.



   


மேலும், சட்டப்பிரிவு 356-இல் குறிப்பிடப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் ஆட்சி என்பது இங்கிலாந்து,கனடா, ஆஸ்திரேலியா போன்ற கூட்டசி நாடுகளில் கற்பனை செய்ய முடியாத வகையில் உள்ளது. இச்சட்டப்பிரிவின் கீழ், அரசமைப்பின் வகையங்களுக்கு இணங்க மாநில அரசாங்கத்தை  நடத்திச் செல்ல இயலாத ஒரு நிலைமை எழுந்துள்ளது என்று ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அறிக்கைத் தந்தால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும்.


அவ்வாறு, அமல்படுத்தப்பட்டால், மாநில அரசாங்கத்தின் ஒட்டுமொத்த செயற்பணிகள் அனைத்தையும் மாநில ஆளுநர் ஆளுநர் மேற்கொள்ளலாம். ஆளுநர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைந்து பணியாற்றத் தொடங்கிவிடுவார். கிட்டத்தட்ட 120-க்கும் மேல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் இங்கு நினைவில் கொள்ளவேண்டும். நெருக்கடி காலங்களில் ஒன்றிய அரசுக்கு வலுசேர்க்கும் பிரிவுகளும் மற்ற நேரங்களில் உண்மையான கூட்டாட்சியாகவும் செயல்படுகிறது. சக்திவாய்ந்த ஒன்றிய அமைப்புடன் கூடிய கூட்டாட்சி முறையை  (A federation with strong centralizing tendency) இந்திய அரசியலமைப்பு வடிவமைக்கப்படுள்ளது.  எனவே, ஆளுநரை அதிக சந்தேகக் கண்கொண்டு மாநில அரசியல் தலைவர்கள் காண்கின்றனர்.    


மேலும், வாசிக்க: 


தோவலின் தோழன்.. மோடியின் நம்பிக்கை.. யார் இந்த ஆர்.என்.ரவி?


Thirumavalavan | புதிய ஆளுநரை திரும்ப பெற வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்