மலையாள திரைப்பட நடிகரான சுரேஷ் கோபி தமிழில் சமஸ்தானம், தீனா, ஐ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது பாஜகவைச் சேர்ந்த மாநிலங்களவை எம்பியாக உள்ளார். இவர் நேற்று முன்தினம் திரிச்சூர் மாவட்டம் புத்தூர் கிராமத்தில் உள்ள பழங்குடியின கிராமத்தில் புயல் பாதிப்பு பற்றி ஆய்வு செய்யச் சென்றிருந்தார். ஜீப்பில் சென்றபோது ஒல்லூர் காவல் துணை ஆய்வாளரைப் பார்த்து தனக்கு சல்யூட் அடிக்கச் சொல்லியுள்ளார். சுரேஷ் கோபி ஜீப்பில் இருந்து கொண்டே சல்யூட் அடிக்கச் சொன்னது தான் சர்ச்சையாகி உள்ளது.
இந்நிலையில் காவல்துறையினர் யாரு யாருக்கு சல்யூட் அடிக்க வேண்டும் என்பது தெரியுமா? குறிப்பாக தமிழ்நாடு காவல்துறை யார் யாருக்கு சல்யூட் அடிக்க வேண்டும்?
காவல்துறை என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் மாநில பட்டியலின் கீழ் வருகிறது. இதனால் காவல்துறையினருக்கான நெறிமுறைகளை அந்தந்த மாநிலங்கள் தீர்மானித்து கொள்ளலாம். ஆனால் ஐபிஎஸ் பணியில் உள்ள காவல்துறையினர் மத்திய சிவில் சர்வீஸ் ஒழுங்கு நடைமுறை விதிகளை பின்பற்றி நடக்க வேண்டும். அத்துடன் அவர்கள் அந்தந்த மாநிலங்களின் விதிகளுக்கும் ஏற்றவாறு நடக்க வேண்டும். இதன்படி தமிழ்நாட்டிலுள்ள காவல்துறையின் நெறிமுறைகள் தொடர்பாக காவல்துறையின் நிலை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதில் காவல்துறையினர் யாரு யாருக்கு சல்யூட் அடித்து மாரியாத செய்ய வேண்டும் என்று தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அதன்படி காவல்துறையினர்
- குடியரசுத் தலைவர்
- பிரதமர்
- ஆளுநர்
- முதலமைச்சர்
- நீதிபதிகள்
- கேபினட் அமைச்சர்கள்
- தலைமை செயலாளர்
- உள்துறை செயலாளர்
- மாவட்ட ஆட்சித் தலைவர்
- காவல்துறை உயர் அதிகாரிகள்
ஆகியோருக்கு இவர்கள் சல்யூட் அடிக்க வேண்டியது கட்டாயமாகும்.
இவர்கள் தவிர வேறு யாருக்கும் காவல்துறையினர் சல்யூட் அடிக்க வேண்டியது கட்டாயம் இல்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட யாருக்கும் காவல்துறையினர் கட்டாயம் சல்யூட் அடிக்க தேவையில்லை என்று காவல்துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை அதிகாரிகள் போக்குவரத்தை சரி செய்து வேலை பார்த்து கொண்டிருக்கும் போது யாருக்கும் சல்யூட் அடிப்பது கட்டாயம் இல்லை என்று கூறப்படுகிறது. இவ்வாறு காவல்துறை நிலை ஆணை விதிகள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க: தாறுமாறு சம்பவங்கள் செய்த தாடிக்காரரின் பிறந்தநாள்..! பெரியார், ஏன் எப்போதும் பெரியார்?