தந்தை பெரியார் பிறந்தநாள் விழா சமூக நீதி நாளாக கொண்டாட தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் அரசின் சார்பிலும் அரசியல் கட்சிகள் சார்பிலும் பெரியார் சிலைக்கு மாலை அணிவிட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருவதுடன், மாவட்ட ஆட்சியர்கள் முன்னிலையில் சமூகநீதி குறித்த உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. இந்த நிலையில் சேலத்தில் பெரியார் பிறந்தநாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபனின் அலுவலகம் முன் 40 அடி உயர கட் அவுட்டிற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தாரை தப்பட்டை, மயிலாட்டம், காவடி , கரகாட்டம் என தமிழர் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் சமூக நீதி நாள் உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டது. இதனிடையே, சட்டக்கல்லூரி படிக்கும் மாணவர்கள் சிலர் பெரியார் கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்தனர்.  



இது குறித்து பேசிய சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், பெரியாரின் கொள்கைக்கு அப்பாற்பட்டு பாலபிஷேகம் செய்தது தவறாக இருந்தாலும், சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு பெரியாரை ஹீரோவாக பார்ப்பதால் தான் பாலாபிஷேகம் செய்தனர். அனைத்து தரப்பு வயதினரையும் ஹீரோ பெரியார் என்று புகழ்ந்தார். மாணவர்கள் இந்த செயல்பாடு மகிழ்ச்சி அளிப்பதாகவும், பகுத்தறிவு தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி தினமாக அறிவித்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியை சமர்ப்பிக்கின்றோம் என்று கூறினார்.



சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்த நாளையொட்டி மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, பெரியாரின் உருவப்படத்திற்கு சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாவட்ட வருவாய்  அலுவலர் ஆலின் சுனேஜா, மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர் இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் கார்மேகம் சமூகநீதிநாள் உறுதிமொழி  வாசிக்க அனைத்து துறை அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றனர். இதனையடுத்து, தந்தை பெரியார் ஈ.வே.ராமசாமி வாழ்க்கைச் சித்திரங்கள் என்ற தலைப்பில் புகைப்படங்கள் கண்காட்சியை ஆட்சியர் பார்வையிட்டார். இதில் தந்தை பெரியாரின் அரிய புகைப்படங்கள் காட்சிபடுத்தப்பட்டிருந்தது. 



மேலும், நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சமூக நீதி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. தந்தை பெரியாரின் வாழ்க்கையில் நிகழ்ந்த பல நிகழ்வுகளை நினைவு கூர்ந்தனர். மேலும், தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.