அது ஒரு கருப்புக்காலம்.. வெள்ளையர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது இந்திய துணைக் கண்டம்.. ஆனால் வெள்ளையர்களின் கொடுமைகளை விட ஆதிக்க வர்க்கத்தினரின் சாதிக்கொடுமை அடித்தட்டு மக்களை வாட்டி வதைத்தது.. தீண்டாமை, இரட்டைக்குவளை முறை, காலணி அணிய தடை, மேட்டுக்குடிகளில் நடக்க தடை, பெண்கள் மேலாடை அணிய தடை என ஆதிக்க சாதியினரால் சொல்ல முடியாத துன்புறுத்தலுக்கு உள்ளாகினர் அக்கால அடித்தட்டு மக்கள்...
தங்களுக்கென ஒரு தலைவன் பிறக்க மாட்டானா? அவன் பிறந்து நம்மை காப்பாற்ற மாட்டானா? என ஏங்கிக்கொண்டிருந்தனர் அடித்தட்டு மக்கள்...
அவர்களின் ஏக்கங்களுக்கு 1879 ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி விடிவு கிடைத்தது...
ஆம், ஈரோடு வெங்கடசாமி நாயக்கர், சின்னத்தாய் அம்மையாருக்கு மகனாக பிறந்தார் ஈ.வெ.ராமசாமி என்னும் அந்த தலைவர். பெரியார் என மக்களால் மரியாதையோடு அழைக்கப்பட்ட அவர், 5-ஆம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை நிறுத்தினார். 19-வது வயதில், நாகம்மையாரை மணந்துகொண்ட அவர், சிறு வயதிலேயே சாதி, மத ஏற்றத்தாழ்வுகளை வெறுத்தார். இதனால் அவருடைய தந்தைக்கும், அவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதை அடுத்து காசிக்கு துறவு மேற்கொண்டு சென்றார்.
அங்கு பிராமணர் அல்லாதவர் என்பதால் பெரியாருக்கு உணவு மறுக்கப்பட்டு பல்வேறு கொடுமைகளை சந்தித்தார். மனம் நொந்து மீண்டும் காசியிலிருந்து தமிழகம் திரும்பிய பெரியாரின் செய்த செய்கைகள் வரலாற்றையே புரட்டிப்போட்டது. ஆரியர்களின் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடி திராவிடர்களை வலுப்பெற செய்தார். 1925-ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்த பெரியார் மூடநம்பிக்கைகள், வர்ணாசிரம தத்துவம், சாதி கொடுமைகள், குழந்தை திருமணம், தேவதாசி முறை, உடன் கட்டை ஏறுதல் என சமூகத்தில் ஊடுருவி இருந்த அனைத்து கொடுமைகளுக்கும் எதிராக போராடி மக்களை பகுத்தறிவுவாதிகளாக மாற்றினார்.
1938-ஆம் ஆண்டில் நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பெரியார் பின்னர், 1944-ஆம் ஆண்டில் அதற்கு திராவிடர் கழகம் என பெயர் மாற்றினார். பிறப்பால் ஏற்றத்தாழ்வு கருதுவது தவறு என்ற அவரது கொள்கை தமிழர்களிடையே புத்துயிரை பாய்ச்சியது. பல நூறு ஆண்டுகளாக மக்களிடையே ஊடுருவியிருந்த மூடநம்பிக்கைகளை அரை நூற்றாண்டில் அடியோடு அழித்து காட்டினார் பெரியார்.
90 வயதிலும் சிறுநீர் பையுடன். மேடையேறி சாதி ஒழிப்பையும், பெண் உரிமையையும் பேசினார் பெரியார். அவரது சீடரான அண்ணாவால் உருவாக்கப்பட்டதுதான் திராவிட முன்னேற்றக் கழகம். இன்று மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நிறைவேற்றி வரும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம், தமிழ் மொழியில் அர்ச்சனை, இடஒதுக்கீடு என அனைத்துமே பெரியார் மேடைகளில் கர்ஜித்தவைதான்.
முதன்முதலில் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தில் இடஒதுக்கீடு இல்லாதபோது அதற்கு எதிராக குரல் கொடுத்தார் பெரியார். அரசியலமைப்பை காரணம் காட்டி அப்போதைய சென்னை மாகாணத்தில் இருந்த கம்யூனல் ஜி.ஓ. என்று அழைக்கப்பட்ட பிராமணரல்லாதவர்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ரத்து செய்தபோது போராட்டத்தில் பெரியார் போராட்டத்தில் குதித்தார். இடஒதுக்கீடு இல்லாவிட்டால் மெட்ராஸ் மாகாணத்தை இந்தியாவிலிருந்து பிரித்து “திராவிட நாடு” கேட்போம் என பெரியார் பேசியது நேரு தலைமையிலான இந்திய அரசை அதிர வைத்தது. அந்த அழுத்தம்தான் இடஒதுக்கீட்டுக்காக அரசியலமைப்பின் முதல் சட்டத்திருத்துக்கு பாதை அமைத்து தந்தது.
இந்தியாவின் அரசியலமைப்பின் சில பகுதிகள் சாதியை ஆதரிக்கும் வகையில் இருப்பதாக கூறி அதை எரித்து போராடினார் பெரியார். சுதந்திரத்துக்கு பிந்தைய இந்திய வரலாற்றில் நடைபெற்ற முதல் அரசியலமைப்பு எரிப்பு போராட்டம் அது. இன்று இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையினர்கள் கல்லூரிகள், அரசு வேலைகளில் இருப்பதற்கு முக்கிய காரணம் தந்தை பெரியார். அவரை தமிழ்நாடு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவில் ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுமே தலைவராக பார்க்கின்றனர் என்பதற்கு டெல்லி சி.ஏ.ஏ., போராட்டத்தில் வட இந்தியர்கள் பெரியாரின் படத்தை தூக்கிப்பிடித்ததே ஒரு நல்ல உதாரணம்.
இன்று பெரியாரை எதிர்த்து, அவர் பேசியதைத் திரித்து, தமிழுக்கு எதிரானவர் சில அரசியல்வாதிகள் பேசி வருகின்றனர். ஆனால், பெரியார் தமிழுக்கு ஆற்றிய பங்கும் அபரிமிதமானது. படித்தவர்களுக்கு மட்டுமே புரியும் வகையில் இருந்த தமிழை எளிமைபடுத்தினார். தனது குடிஅரசு, விடுதலை இதழ் மூலம் எளிய முறையில் தமிழை எழுதி திராவிட பகுத்தறிவு கொள்கைகளை அனைவருக்கும் கொண்டு சேர்த்தார். அவர் கொண்டு வந்த எழுத்துச் சீர்த்தமே இன்று அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வளவு ஏன், அவரை தமிழ் விரோதி என்று சாடுபவரும் அவர் கொண்டு வந்த சீர்திருத்தம் செய்யப்பட்ட தமிழிலிலேயே எழுதுகிறார்கள். “நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்ற மொழி தமிழைவிட மேலான ஒரு மொழி இந்நாட்டிலில்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத அதிசயங்களை விளைவிக்கக் கூடியது என்பதற்காக அல்ல” என்றார் பெரியார்.
அதே போன்று அவரை கடவுள் மறுப்பாளராக மட்டுமே சித்தரித்து மத நம்பிக்கை கொண்ட சாமானிய மக்கள் மனதில் தவறான புரிதலை ஏற்படுத்தி வருகிறார்கள். பெரியார் மத நம்பிக்கைக்கு எதிரானவர்தான். ஆனால் அதை எதிர்த்ததற்கு முக்கிய காரணம், அது வர்ணாசிரம தத்துவத்தின் அடிப்படையில் சாதிவாரியாக மக்களிடம் ஏற்றத்தாழ்வை உண்டாக்கியதற்காகவே... அவரது பிரதான கொள்கை சாதி ஒழிப்புதான். அதனால்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் எனப் பேசினார்.
பிற மாநில மக்கள் தங்கள் சாதியின் பெயரை பின்னால் சேர்த்துக்கொள்ளும்போது தமிழக மக்கள் தங்கள் சாதி அடையாளத்தையே வெளிப்படுத்த தயங்குகின்றனர் என்றால் அதற்கு முக்கிய காரணம் தந்தை பெரியார். மநுநீதியை உடைத்து சமூக நீதி காத்த தந்தை பெரியார் 1974-ஆம் ஆண்டு டிசம்பர் 24 தேதி தனது 94 வது வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
அந்த கருப்புக்காலத்தை வெளிச்சமாக்கி நாட்டு மக்களின் அறிவுக்கண்களை திறந்த கருஞ்சட்டை பெரியாரின் உடல், இம்மண்ணில் புதைக்கப்பட்டாலும் அவரது, பகுத்தறிவு கொள்கைகள், இன்றும் சமூக நீதியை தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறது. அவர் மறைந்து சுமார் 50 ஆண்டுகள் நெருங்கிவிட்ட நிலையிலும் சாதி, மத வெறியர்களுக்கு பெரியாரின் பெயரை கேட்டாலே குலை நடுங்குகிறது என்றால், அவர் 94 ஆண்டுகாலம் செய்த சம்பவங்கள் அப்படி.