ஹெட் ஆஃப் தி போலீஸ் போர்ஸ் என்ற தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு தலைமை பொறுப்பான டிஜிபி பதவிக்கு அடுத்து யார் வரப்போகிறார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தற்போதைய தமிழ்நாட்டின் டிஜிபியான சைலேந்திரபாபு இந்த மாத இறுதியோடு ஓய்வு பெறவுள்ள நிலையில், அவருக்கு அடுத்து இந்த முக்கியமான பொறுப்பில் அமரப்போவது யார் என்ற கேள்வி காவல்துறை வட்டாரம் மட்டுமின்றி அரசியல் கட்சியினர் மத்தியிலும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.


திமுக ஆட்சி அமைந்தபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் யாரை காவல்துறை தலைமை இயக்குநர் பொறுப்பில் நியமனம் செய்ய விரும்புகிறார் என்ற ஆர்வம் அத்தனை பேர் மத்தியிலும் எழுந்த நிலையில், அவரது சாய்ஸ்சாக இருந்தவர் சைலேந்திரபாபு ஐபிஎஸ். 



கடந்த அதிமுக ஆட்சியில் தீயணைப்பு துறை, ரயில்வே உள்ளிட்ட துறைகளில் மட்டுமே பொறுப்பில் அமர்த்தப்பட்டிருந்த சைலேந்திரபாபுவிற்குதான் பதவியேற்றதும் காவல் துறை தலைமை இயக்குநர் பொறுப்பை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த பரிச்சயம், மாணவர்களுக்கான தன்னம்பிக்கை பேச்சாளர் என்ற அறிமுகம் அவரது நியமனத்திற்கு மிக முக்கியமான காரணமாக இருந்ததாக பேசப்பட்டது.


இந்நிலையில், சைலேந்திரபாபு ஓய்வு பெறவுள்ள நிலையில் தற்போதைய தமிழ்நாட்டின் அரசியல் சூழலை கருத்தில் கொண்டு அடுத்த டிஜிபியாக யாரை நியமிக்க ஸ்டாலின் முடிவு எடுத்திருக்கிறார் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். வரும் 22ஆம் தேதி தமிழ்நாட்டின் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளாக இருப்பவர்களின் பட்டியலை எடுத்துக்கொண்டு தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ், தலைமைச் செயலாளர் இறையன்பு, தற்போதைய டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு செல்லவுள்ளனர். 


அதில் , பணி மூப்பு, தகுதி, திறமை அடிப்படையில் முதல் 3 பேரை மத்திய பணியாளர் தேர்வாணைய அதிகாரிகளும் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளும் தேர்வு செய்து தமிழக அரசிடம் வழங்குவர். அதில் இருந்து ஒருவரை தமிழ்நாட்டின் டிஜிபியாக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நியமித்துக்கொள்ளலாம்.


அந்த பட்டியலில் ஊர் காவல் படை தலைவராக உள்ள பி.கே.ரவி, சென்னை காவல் ஆணையராக உள்ள ஷங்கர் ஜிவால், காவலர் வீட்டு வசதி வாரிய தலைவராக உள்ள ஏ.கே.விஸ்வநாதன், டெல்லி காவல் ஆணையராக உள்ள சஞ்சய் அரோரா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். 


பாலியல் புகார் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் சிறப்பு டிஜிபியும் மூத்த ஐபிஎஸ் அதிகாரியுமான ராஜேஸ்தாஸ் பெயர் நீக்கப்பட்டுள்ள நிலையில், மேலே குறிப்பிட்டுள்ள பெயர்களில் யாரேனும் ஒருவர் தமிழகத்தின் டிஜிபியாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.