செம்பரம்பாக்கம் : கடந்த மூன்று நாட்களாக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் கன மழை பெய்து வருகிறது. அதே போன்று செம்பரம்பாக்கம் ஏரி பகுதியிலும் கன மழை பெய்ததின் எதிரொலியாக ஏரிக்கு கடந்த இரண்டு நாட்களாக நீர் வரத்து அதிகரித்து வந்தது. நேற்று செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1400 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. நேற்று மாலை முதலே செம்பரம்பாக்கம் பகுதியில் மழை குறைந்த காரணத்தினால் ஏரிக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. தற்பொழுது ஏரிக்கு நீர்வரத்து 548 கன அடியாக உள்ளது. ஏரியின் கொள்ளளவு இருபத்தாண்டு அடியில் தற்பொழுது 19.83 அடி எட்டியுள்ளது. நேற்று இப்பகுதியில் பெய்த மழையின் அளவு 8 மில்லி மீட்டர் மட்டுமே. நீர் 178 கன அடி வெளியே சென்று கொண்டிருக்கிறது. ஆனால் தொடர் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் தொடர்ந்து ஏரியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்


மழை எப்படி இருக்கும்?


தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் நல்ல மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


21.06.2023: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,  தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


22.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


23.06.2023 மற்றும் 24.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


இரவு முழுவதும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24  மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு: (மில்லிமீட்டரில்)


புதுச்சேரி விமான நிலையம்  34.0, கொடைக்கானல் (திண்டுக்கல்) 28.0, திருச்சிராப்பள்ளி விமான நிலையம் 13.0, கோயம்புத்தூர் விமான நிலையம் 0.7, சென்னை நுங்கம்பாக்கம் 3.9,  சென்னை விமான நிலையம் 0.8, வேலூர் 12.0, குன்னூர் (நீலகிரி) 11.0, உதகமண்டலம் (நீலகிரி) 11.0, திருத்தணி (திருவள்ளூர்) 10.0, திருப்பத்தூர் 3.0, வால்பாறை (கோவை) 1.0, எண்ணூர் துறைமுகம் (சென்னை) 27.0, மாதவரம் (சென்னை) 8.0, கோவில்பட்டி (தூத்துக்குடி) 7.5, பெரியகுளம் (தேனி) 6.5, திருப்பதிசாரம் (கன்னியாகுமரி) 0.5, அருப்புக்கோட்டை (விருதுநகர்) 5.5 மிமீ அள மழை பதிவாகியுள்ளது. இதனால் மீனவர்களுக்கும் வரும் 24 ஆம் தேதி வரை வங்கக்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜூன் மாத தொடக்கத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து மக்களை வாட்டிய நிலையில் கடந்த மூன்று நாட்களாக பெய்யும் இந்த மழையின் காரணமாக மகிழ்ச்சியடைந்துள்ளனர்.