முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவில் பகுதி நேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் நாட்டியக் கலைஞர் திருநங்கை நர்த்தகி நட்ராஜ். சுதந்திரத்துக்குப் பிந்தைய அரசியல் வரலாற்றில், மாநிலத் திட்டக் குழுவில் திருநங்கை ஒருவர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பு, மாற்றுப் பாலினத்தவர்களுக்கான திராவிட முன்னேற்றக் கழக அரசுகளின் முன்னெடுப்புகளில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
வாழ்க்கை வரலாறு:
நர்த்தகி நடராஜ், மதுரையில் உள்ள மாரியம்மன் தெப்பக்குளம் அருகே அமைந்துள்ள அனுப்பானடி பகுதியைச் சேர்ந்தவர். இளமையில் வைஜெயந்தி மாலாவின் நடனத்தால் ஈர்க்கப்பட்டார். பின்னர், கடின முயற்சியால் கிட்டப்பா பிள்ளையிடம் பரதக் கலையை முறையாக கற்றுக்கொள்ளத் தொடங்கினார். இவரை தன் சொந்த மகளாகவே பார்த்த கிட்டப்பா பிள்ளைதான், இவருக்கு 'நர்த்தகி' என்ற பெயரை சூட்டினார்.
திறமை, சாதனை, பெயர், புகழ் என்பதைத் தாண்டி, பரதம் என்பதை தன்னுள் புதைந்திருக்கும், தனக்கான, தன்னைப் பற்றிய அடையாளத்தை மீட்கும் ஒரு வாய்ப்பாகவே கருதினார். சிறு வயதிலேயே, தன்னுடைய பிறப்பால் அமைந்த பால் அடையாளத்தை மறுக்க தொடங்கினார். இதன் காரணமாகவே, அவர் வீட்டைவிட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
"பெண்மையை வெளிப்படுத்துவதற்கான ஊடகமாகப் பரதம் இருந்தது. பரதத்தில் ஊறித் திளைத்தபோது பெண்மை புதிதாகப் பிறந்தது. பரதத்தில் பெண்மையை வெளிப்படுத்தும் நொடி இருக்கிறதே, அது வார்த்தைகளில் சொல்ல முடியாத உணர்வு. நதியலையில் விழுந்த இலைபோல, காற்றில் பறக்கும் இறகுபோல, மனம் அதன்போக்கில் செல்லும். எல்லாக் கட்டுகளையும் உடைத்தெறிந்த நிம்மதி அந்த வினாடியில் கிடைக்கும். ஒருவகை ஆழ்ந்த மயக்கம். கனவுலகின் சஞ்சாரம். அந்த விநாடியில் உலகத்தையே மறந்து பறந்துகொண்டிருப்பேன்" என்கிறார் நர்த்தகி.
2007-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு இவருக்கு “கலைமாமணி” விருதினை அளித்தது. நர்த்தகி நடராஜ், இந்தியாவின் மிக உயரிய விருதான ’பத்ம ஸ்ரீ’ விருதைப் பெற்ற முதல் திருநங்கை ஆவார். 2019-ஆம் இந்திய அரசு இவருக்கு ’பத்ம ஸ்ரீ’ விருதினை அளித்தது. பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் இவரின் கலை பங்களிப்பை பாராட்டி, "மதிப்புறு முனைவர் பட்டம்" (Doctor Of Letters) வழங்கியது. 2011-ஆம் ஆண்டு இந்திய அரசின் இந்தியாவின் இசை,நடனம்,நாடகக் கலைகளுக்கான சங்கீத நாடக அகாடமி விருது இவருக்கு கிடைத்தது.
மாநில வளர்ச்சிக் கொள்கை குழுவில் நர்த்தகி :
'வளர்ச்சி' என்ற ஒற்றை அச்சாணியில் இன்றைய அரசியல் சொல்லாடல்கள் சுழன்று வருகிறது. இன்றைய உலகம் ஒட்டுமொத்த மனித உணர்வுகளையும், ‘வளர்ச்சி' என்ற ஒற்றைக் கட்டமைப்பில் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களின் ஆயுள் எதிர்பார்ப்பு, எழுத்தறிவு, வாழ்க்கைத்தரம், தனிநபர் வருமானம், ஆண்-பெண் உரிமைகள், போன்ற பல்வேறு அளவுகோல்களை வைத்து மனித வளர்ச்சி கணக்கிடப்படுகிறது.
பொருளாதார நடவடிக்கைகளில் பெண்களை( குறிப்பாக திருநங்கைகளை) ஈடுபத்துவதைத்தான் பாலின சமத்தும் என்று பொருள் கொள்ளப்படுகிறது. பெண்கள் வேலைக்குச் செல்வது குறைந்து வருவது கவலை அளிப்பதாக பொருளாதார ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. தொழிலாளர் சந்தைகளில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் சமஊதியம், சமவாய்ப்பு என்ற அளவில்தான் பாலின சமத்துவங்கள் கற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பொருளாதார ரீதியாக, அனைத்து வாதங்களும் முக்கியத்துவம் பொருந்தியது என்பதில் மறுப்பேதுமில்லை. இவை பெரும்பாலும், ஒரு ஆண்மையக் கோட்பாட்டின் மூலம் இயங்குகிறது.
குடும்ப கட்டுப்பாடு திட்டங்களில் ஆண்கள் பங்களிப்பு என்ன? மறு உற்பத்தியில் பெண்களின் முடிவெடுக்கும் விகிதம் என்ன? பாலியல் வன்முறைகள், குடும்ப வன்முறைகள் , வரதட்சனை கொடுமைகளுக்கான அடிப்படை வாதம்தான் என்ன? போன்ற எந்த அடிப்படை கேள்விகளுக்கும் பதில் தேடுவதாய் 'வளர்ச்சி' இருக்க வேண்டும்.
"மற்ற மானுடரைவிட எல்லாச் சோதனைகளையும் இரண்டு மடங்கு அனுபவித்திருக்கிறேன். வலிதான் நான் கொடுத்த விலை. அகிலனின் 'தாமரை நெஞ்சம்' கதைநாயகி துக்கம் பொங்கி வரும்போதெல்லாம் ஒரு சொம்புத் தண்ணீர் குடிப்பாள். நான் ஒரு நாட்டியம் ஆடி விடுவேன். அது என் துயரைத் தீர்க்கும்" என்று கூறிய நர்த்தகி நடராஜை மாநில வளர்ச்சிக் குழுவில் உறுப்பினராக்கியதன் மூலம், "பாலின சமநிலையை வெளிப்படுத்துவதற்கான ஊடகமாக வளர்ச்சி இருந்தது. பாலின சமநிலையில் ஊறித் திளைத்தபோது வளர்ச்சி புதிதாகப் பிறந்தது"என்ற வாசகம் தமிழ்நாட்டு அரசியலில் எழுதப்படட்டும்.