திமுகவில் உள்ளாட்சி கவுன்சிலர் ஆகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கேபினெட் அமைச்சர் ஆகி அரசியல் பாதையில் கோலோச்சி வந்த நிலையில், தற்போது அமலாக்கத்துறை அவரைக் கைது செய்துள்ளது.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்து வந்த பாதையைக் காணலாம்.
கரூர் மாவட்டத்தில் ராமேஸ்வரப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்தவர் செந்தில் குமார். எண் கணிதம், ஜோதிடம், ராசி பலன்களில் மிகுந்த நம்பிக்கை கொண்ட காரணத்தால் தனது பெயரை செந்தில் பாலாஜி என மாற்றிக்கொண்டார். தனது ஆரம்பப் பள்ளியை ராமேஸ்வரப்பட்டி அரசுப் பள்ளியிலும் உயர் கல்வியை தனியார் பள்ளியிலும் படித்தார். தொடர்ந்து, கரூர் அரசு கலைக் கல்லூரியில், இளநிலை வணிகவியல் படிப்பில் சேர்ந்தார்.
அரசியல் மீது இருந்த ஆர்வம் காரணமாக தனது கல்லூரி படிப்பைப் பாதியில் நிறுத்திய செந்தில் பாலாஜி, 1994ஆம் ஆண்டு மதிமுகவில் இணைந்தார். அங்கிருந்து 1996-ல் திமுகவில் இணைந்தவர், அதே ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றி பெற்றார். திமுகவில் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கூறி, 2000-ல் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
ஏறுமுகத்தில் செந்தில் பாலாஜி
அதிமுகவில் சேர்ந்ததும் செந்தில் பாலாஜி சரசரவென அரசியல் பாதையில் உயர்ந்தார். கட்சியில் சேர்ந்ததும் செந்தில் பாலாஜிக்கு கரூர் மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அடுத்து கரூர் மாவட்ட மாணவரணிச் செயலாளர், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் என உயரம் தொட்டார் செந்தில் பாலாஜி.
இதனையடுத்து 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2007-ல் கரூர் அதிமுக மாவட்டச் செயலாளராகவும் ஆனார். 2011 பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றவரை, போக்குவரத்துத் துறைஅமைச்சர் ஆக்கி அழகு பார்த்தார் ஜெயலலிதா. இதற்குப் பின்னணியில் சசிகலா மற்றும் அவரின் குடும்பம் இருந்ததாகவும் சொல்லப்பட்டது.
அசர வைத்த அமைச்சர்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டபோது, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கோயில்களில் அங்கப் பிரதட்சணம் செய்தும், காவடி எடுத்தும் அசர வைத்தார்.
ஜெ.வின் செல்லப் பிள்ளையாக இருந்த செந்தில் பாலாஜிக்கு 2015-ல் இறங்கு முகம் தொடங்கியது. செந்தில் பாலாஜியின் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் பதவியைப் பறித்தார் ஜெயலலிதா. எனினும் அடுத்த ஆண்டு பேரவைத் தேர்தலில் போட்டியிட மீண்டும் அதிமுக சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
தேர்தலே நிறுத்தம்
எனினும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலின் போது செந்தில் பாலாஜி போட்டியிட்ட அரவக்குறிச்சி தொகுதியில் அதிகளவு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாகக் கூறி, அந்த தொகுதியில் மட்டும் தேர்தலே நிறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சி அமைந்த பிறகு, அங்கு நடைபெற்ற தேர்தலில் செந்தில் பாலாஜி வெற்றிபெற்றார். எனினும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. ஜெயலலிதா உயிரிழந்தபிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக சசிகலா அணியில் இருந்து செயல்பட்டார். அவர் சிறைக்குச் சென்றபிறகு, டிடிவி ஆதரவாளராக மாறினார். ஈபிஎஸ் ஆட்சிக்கு எதிராக செயல்பட்ட காரணத்தால், 2017ஆம் ஆண்டு சபாநாயகரால் எம்எல்ஏவால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
மீண்டும் திமுகவுக்குச் சென்ற செந்தில் பாலாஜி
இதனையடுத்து டிடிவி தினகரனோடு ஏற்பட்ட அதிருப்தியால் திமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி. 2018 இடைத் தேர்தலில் திமுக சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். திமுகவிலும் மாவட்ட செயலாளர் ஆனார்.
இதனையடுத்து கோவை உள்ளிட்ட கொங்கு பகுதிகளுக்கு திமுக சார்பில் தேர்தல் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமான நபராகவும் மாறினார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் கரூர் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவரும் சக ஊர்க்காரருமான அண்ணாமலையை எதிர்த்து வெற்றி பெற்ற அவருக்கு, மின்சாரத் துறை, மதுவிலக்கு உள்ளிட்ட முக்கிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
அமலாக்கத் துறையால் கைது
செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது 2014-ல் போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர், நடத்துநர், பொறியாளர்கள் பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு பணி நியமனம் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. எனினும் வழக்கு தொடர்ந்தவருடன் சமரசம் ஏற்பட்ட நிலையில், அமைச்சர் மீதான குற்றவியல் நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.
எனினும் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. சில நாட்களுக்கு முன்பு, அமைச்சரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்திய நிலையில், நேற்று 2014 முறைகேடு புகார் தொடர்பாக அமலாக்கத் துறை செந்தில் பாலாஜியின் வீட்டிலும் தலைமைச் செயலக அறையிலும் சோதனை செய்தது. இதனையடுத்து இன்று (ஜூன் 14) அதிகாலை அமலாக்கத் துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்.