தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு அகில இந்திய காங்கிராஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 


செந்தில்பாலாஜி கைது 


நேற்று காலை முதல் தமிழ்நாடு அரசின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். சென்னை, கரூரில் உள்ள செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. மேலும்  தலைமைச்செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனைக்கு தேசிய, மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தனர். 


தொடர்ந்து கிட்டதட்ட 17 மணி நேரமாக அமலாக்கத்துறையினர்  சோதனை நடத்திய நிலையில், செந்தில் பாலாஜியை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால்  சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக மருத்துவமனை வளாகம் முழுவதும் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர், மாநில போலீசார் கட்டுப்பாட்டில் வந்தது. 


மருத்துவமனைக்கு திமுக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பொன்முடி, சேகர்பாபு, ரகுபதி, உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஸ், கே.என்.நேரு, எம்.பி. என்.ஆர். இளங்கோ உள்ளிட்ட பலரும் சென்று செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். அதேசமயம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட வல்லுநர்களுடனும், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்வை சட்டப்படி எதிர்கொள்ள உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.


மல்லிகார்ஜூன் கார்கே கண்டனம்


இந்நிலையில் செந்தில் பாலாஜி  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு அகில இந்திய காங்கிராஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், ‘இது ஒரு அரசியல் துன்புறுத்தல் மற்றும் மோடி அரசாங்கத்தின் பழிவாங்கும் நடவடிக்கை’ என விமர்சித்துள்ளார். மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளால் எதிர்கட்சியான நாங்கள் யாரும் பயப்பட மாட்டோம்’ என தெரிவித்துள்ளார். இதேபோல், “இது முற்றிலும் தவறானது. அமலாக்கத்துறை எப்படியெல்லாம் எப்படி தவறாக பயன்படுத்தப்படுகிறது” என திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சவுகதா ராய் கண்டனம் தெரிவித்துள்ளார். 


இதேபோல் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.