தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் தலைமைச் செயலராக டாக்டர் பி.செந்தில்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே இவர் அதே துறையில் சிறப்புச் செயலராகப் பணியாற்றி வந்தார்.
37 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். எனினும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் மாற்றம் செய்யப்படவில்லை.
இந்த நிலையில் 37 ஐஏஎஸ் அதிகாரிகளைத் தமிழக அரசு இன்று அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்தது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மைச் செயலாளராக மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சுகாதாரத் துறை செயலாளராக டாக்டர். பி.செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கூட்டுறவுத்துறை செயலாளராக இருந்த முகமது நசீமுதீன், தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலராக மாற்றப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆணையராக தாரேஷ் அகமது நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
போக்குவரத்துத் துறை ஆணையராக எல்.நிர்மல் குமாரும், வணிக வரிகள் துறை ஆணையராக தீரஜ் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மண்ணியல் மற்றும் சுங்கத்துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த சுகாதாரத்துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் குமார் யார் என்று கேள்வி எழுந்துள்ளது.
யார் இந்த செந்தில் குமார் ஐஏஎஸ்?
1968ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பிறந்தவர் செந்தில் குமார், பி.எஸ்சி., வேளாண் படிப்பை முடித்த இவர், இதே துறையில் முதுகலைப் படிப்பை முடித்தார். பூச்சியியல் துறையில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். டென்மார்க், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பொது நிர்வாகத்தில் பயிற்சி பெற்றுள்ளார்.
இவர் 1995 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். விழுப்புரம் கூடுதல் ஆட்சியர், திண்டுக்கல் ஆட்சியர், அரியலூர் ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை செந்தில் குமார் வகித்துள்ளார்.
முன்னதாக 2017ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு முதன்மைச் செயலாலராக / 3ஆவது செயலராக பி.செந்தில் குமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார். அதேபோல மக்கள் மற்றும் மறுவாழ்வு நலத்துறை பொறுப்பு தலைமைச் செயலாளராகவும் செந்தில் குமார் இருந்தார்.
சிறப்புச் செயலர்
அதைத்தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் சிறப்புச் செயலராக டாக்டர் பி.செந்தில்குமார் நியமிக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு மே மாதம் இந்த நியமனம் நடைபெற்றது. ஓராண்டுக்கு அல்லது தேவை இருக்கும் வரை இந்தப் பதவிக் காலம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. புதிதாக இந்தப் பதவி உருவாக்கப்பட்டது விவாதங்களைக் கிளப்பியது. முன்னதாக நிதித்துறை (செலவு) செயலராக செந்தில் குமார் இருந்தார்.
அதற்கும் முன்பாக நகராட்சி நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டுக் கழக இயக்குநர், போக்குவரத்துத் துறை இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை பி.செந்தில் குமார் ஐ.ஏ.எஸ் வகித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்