பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகள், நீதிபோதனை, பாடவேளை, நூல்கள் வாசிப்பு கட்டாயம் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


தமிழகம் முழுவதும் 1 முதம் 9ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நாளை (ஜூன் 13) பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகள், நீதிபோதனை, பாடவேளை, நூல்கள் வாசிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 


கீழ்க்காணும்‌ நடைமுறைகளைப்‌ பின்பற்றுமாறு தலைமையாசிரியர்கள்‌ / அனைத்து வகை ஆசிரியர்கள்‌ அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.


1. உடற்கல்வி ஆசிரியர்கள்‌ பள்ளி வேலை நேரத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்பாகவே வருகை புரிதல்‌ வேண்டும்‌. உடற்கல்வி ஆசிரியர்கள்‌ மாணவர்களின்‌ வருகை, ஒழுக்கம்‌, சீருடை ஆகியவற்றை நெறிப்படுத்திட வேண்டும்‌. ஒவ்வொரு வகுப்பிற்கும்‌ வாரத்திற்கு இரண்டு பாடவேளைகள்‌ உடற்கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. உடற்கல்வி ஆசிரியர்கள்‌ குறிப்பிட்ட வகுப்பு மாணவர்கள்‌ அனைவரையும்‌ இப்பாட வேளைகளில்‌ விளையாட வைக்கவேண்டும்‌. 


வாரத்தில்‌ ஒரு நாளில்‌ பள்ளி நேரம்‌ முடிந்தவுடன்‌ அனைத்து மாணவர்களுக்கும்‌ கூட்டு உடற்பயிற்சி ஏற்பாடு செய்யவேண்டும்‌. மாணவர்கள்‌ எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளில்‌ 6 முதல்‌ 8 ஆம்‌ வகுப்பு வரை, 9 ஆம்‌ வகுப்பு மற்றும்‌ 10 ஆம்‌ வகுப்பு, 11 ஆம்‌ வகுப்பு மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கு தனித்தனியே கூட்டு உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்‌.


2. தலைமையாசிரியர்‌ / உதவி தலைமையாசிரியர்‌ முன்னிலையில்‌ காலை வணக்கக்‌ கூட்டம்‌ நடைபெறுதல்‌ வேண்டும்‌. காலை வணக்கக்‌ கூட்டத்தில்‌ மாணவர்களை தவறாமல்‌ கலந்துகொள்ளச்‌ செய்ய வேண்டும்‌.


3. மதிய உணவு இடைவேளை முடிந்த பின்பு 20 நிமிடம்‌ ஐந்தாம்‌ பாடவேளை ஆசிரியர்கள்‌ வாயிலாக மாணவர்கள்‌ சிறார்‌ பருவ இதழ்‌, செய்தித்தாள்‌, பள்ளி நூலகத்திலுள்ள நூல்கள்‌ போன்றவற்றை வாசிக்கச்‌ செய்ய வேண்டும்‌.


4. வாரத்திற்கு ஒரு நாள்‌ அனுபவப்‌ பகிர்வு / நீதிபோதனை பாடவேளைக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பாட வேளைக்கு சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர்‌ பொறுப்பேற்று மாணவர்களின்‌ மனநலன்‌ சார்ந்து தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும்‌.




5. வாரத்திற்கு ஒரு நாள்‌ நூலகச்‌ செயல்பாடுகளுக்கென நேரம்‌ ஒதுக்கப்பட்டுள்ளது. 


6. ஒவ்வொரு மாதமும்‌ கடைசி வெள்ளிக்‌ கிழமை பள்ளி மேலாண்மைக்‌ குழு கூட்டம்‌ நடத்த (பள்ளிகளுக்கு உகந்த வேறு தினம்‌ இருப்பின்‌ அந்த தினத்திலும்‌ நடத்திக்கொள்ள) ஏற்கெனவே அறிவுரைகள்‌ வழங்கப்பட்டுள்ளன. அதே நாளில்‌ பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்திற்கு முன்பு அந்தந்த வகுப்புகளில்‌ பெற்றோர்‌ கூட்டம்‌ நடத்தப்பெற வேண்டும்‌. 


இக்கூட்டத்தில்‌ ஆசிரியர்‌, பெற்றோரிடம்‌ அவர்தம்‌ குழந்தைகளின்‌ வருகை, கற்றல்நிலை, உடல்‌ நலம்‌, மன நலம்‌, கல்வி இணைச்‌ செயல்பாடுகள்‌, கல்விசாராச் செயல்பாடுகள்‌ என பள்ளியின்‌ அனைத்து நடவடிக்கைகளையும்‌ விவாதிப்பதுடன்‌, ஒவ்வொரு நாளும்‌ வீட்டில்‌ மாணவரின்‌ கற்றல்‌ சார்ந்து பெற்றோர்‌ செய்யவேண்டிய பணிகளையும்‌ எடுத்துக்கூற வேண்டும்‌. மேலும்‌, பள்ளியின்‌ கட்டமைப்பு வசதிகள்‌ குறித்தும்‌, அதனை மேம்படுத்த பள்ளி மேலாண்மைக்குழு எடுத்து வரும்‌ நடவடிக்கைகள்‌ குறித்தும்‌ தகவல்‌ தெரிவிக்கவேண்டும்‌.


இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண