டிஎன்பிஎஸ்சி பொறுப்புத் தலைவராக ஏற்கெனவே டிஎன்பிஎஸ்சி உறுப்பினராக இருந்தவரும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான சி.முனியநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


தமிழ்நாட்டில் பெரும்பாலான அரசுத் துறைகளுக்கான வேலைவாய்ப்புகள் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. 


டிஎன்பிஎஸ்சி பணிவாய்ப்பு


குரூப் 1, குரூப் 2 ,  2 ஏ, குரூப் 4 , விஏஓ, குரூப் 3 என குரூப் 8 வரை தமிழகத்தில் பல்வேறு படிநிலைகளில் உள்ள அரசுப் பணிகளுக்குத் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் மூலம் நிரப்பப்படுகின்றன. இதற்காகத் தேர்வாணையம் மூலம் அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. இதைத் தொடர்ந்து,  தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிப்பர். அவர்களுக்குப் போட்டித் தேர்வுகள், நேர்முகத் தேர்வு அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது. இந்தப் பணிகளை கவனிக்க, ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்து வருகிறார். 


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இருந்த பாலச்சந்திரன் கடந்த 9-ம் தேதி பணி ஓய்வு பெற்றார். தஞ்சாவூரைச் சேர்ந்த பாலச்சந்திரன் கடந்த 2020ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டார்.


இதையடுத்து புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை, ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி உறுப்பினராக இருந்து வரும் சி.முனியநாதன் பொறுப்புத் தலைவராகச் செயல்படுவார் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம், முனியநாதன், பேராசிரியர் ஜோதி சிவஞானம், அருள்மதி, ராஜ்மரிய சூசை ஆகியோர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தனர்.


 





யார் இந்த முனியநாதன்?


சென்னையைச் சேர்ந்த சி.முனியநாதன் 2003 பேட்ச் அதிகாரி ஆவார். மாநில அரசுப் பொறுப்பில் இருந்து பதவி உயர்வு மூலம் ஐஏஎஸ் ஆக பொறுப்பேற்றார். 


இவர் 2009ஆம் ஆண்டு முதல் 2012 பிப்ரவரி மாதம் வரை நாகை மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பு வகித்துள்ளார். மீன்வளத் துறை துணைச் செயலராகப் பணியாற்றி உள்ளார். 


கணக்குகள் மற்றும் கருவூலங்கள் துறையில் பணியாற்றியுள்ள முனியநாதன், வேளாண் துறை சிறப்புச் செயலராகவும் இருந்துள்ளார். அதேபோல ஆதி திராவிடர் நலத்துறை ஆணையர், தொழிலாளர் நலத்துறை ஆணையர், கைத்தறித் துறை இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்துள்ளார். ஓய்வுபெற்ற பிறகு, அவர் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார்.


இந்த நிலையில் தற்போது சி.முனியநாதன் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்புத் தலைவராக ஜூன் 10ஆம் தேதி அன்று நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை இவர் பொறுப்புத் தலைவராகச் செயல்படுவார் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண