கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பான விமர்சனங்கள் அடுத்தடுத்து வரும் நிலையில், உளவுத்துறையின் தோல்வி என கடுமையான குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்நிலையில் உளவுத்துறை ஐ.ஜி.யாக இருந்த ஆசியம்மாள் இடமாற்றம் செய்யப்பட்டு அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக உளவுத்துறை ஐ.ஜி.யாக செந்தில் வேலனை நியமித்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசால் நியமிக்கப்பட்ட 7 மாதங்களில் உளவுத்துறையில் இருந்து அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார் ஆசியம்மாள். இதற்கு முக்கிய காரணமாக கள்ளக்குறிச்சி கலவரம்தான் சொல்லப்படுகிறது. கள்ளக்குறிச்சி கலவரத்தில் உளவுத்துறை போதுமான ஒத்துழைப்பு தரவில்லை என்று காவல்துறை சார்பில் குற்றசாட்டு எழுந்தது. இதே கருத்தையும் பெரும்பாலான ஊடங்களும் கருத்து தெரிவித்தது.
யார் இந்த ஆசியம்மாள்...?
கடந்த ஜனவரி 9 ம் தேதி தமிழக அரசால் காவல்துறையின் மிகவும் முக்கியமான பிரிவான உளவுத்துறையின் ஐ.ஜி.யாக ஆசியம்மாள் நியமிக்கப்பட்டார். தமிழக உளவுத்துறையின் முதல் பெண் ஐ.ஜி. என்ற சாதனையை ஆசியம்மாள் என்ற சாதனையும் படைத்தார். இதற்கு முன்பு, இதே உளவுத்துறையின் கூடுதல் எஸ்.பியாக இரண்டே முக்கால் வருடம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர் ஆசியம்மாள்.
தற்போது 56 வயதான ஆசியம்மாள் தூத்தக்குடி மாவட்டம் கொங்கராயக்குறிச்சி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் குரூப் 1 தேர்வு மூலமாக பணியில் சேர்ந்தார். படிப்பில் மிகவும் தேர்ந்தவரான ஆசியம்மாள் எம்.எஸ்.சி., எம்.டெக். எம்.பி.ஏ. பட்டங்களை பெற்றுள்ளார். குரூப் 1 தேர்வு மூலம் காவல்துறை பணியில் சேர்ந்த ஆசியம்மாள் வரதட்சணை கொடுமை தடுப்பு பிரிவின் டி.எஸ்.பி.யாக தனது காவல்பணி வாழ்க்கையைத் தொடங்கினார்.
மகாபலிபுரம் டி.எஸ்.பி., சென்னை திருவொற்றியூர் சட்டம் –ஒழுங்கு உதவி ஆணையர், சென்னை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு உதவி ஆணையர் போன்ற பொறுப்புகளில் பணிபுரிந்துள்ளார், சட்டம் – ஒழுங்கு, போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு, உளவுத்துறை எஸ்.பி.சி.ஐ.டி. பிரிவு, குடிமைப்பொருள் வழங்கல், குற்றப்புலனாய்வு பிரிவு ஆகிய பிரிவுகளில் நீண்ட அனுபவம் கொண்டவர். கடந்த 2018ம் ஆண்டு ஆசியம்மாளுக்கு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. பதவி உயர்வு பெற்ற பிறகு டி.ஐ.ஜி. ஆசியம்மாள் போலீஸ் பயிற்சி பள்ளி மற்றும் தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார்.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, கடந்த ஆண்டு மே மாதம் உளவுத்துறையின் டி.ஐ.ஜி.யாக ஆசியம்மாள் நியமனம் செய்யப்பட்டார். நீண்ட அனுபவம் கொண்ட ஆசியம்மாளுக்கு கடந்த ஜனவரி மாதம் தமிழக காவல்துறையின் உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார்.
நேர்மையான அதிகாரியாக அறியப்படும் இவர் ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறையில் திறம்பட பணியாற்றிய காரணத்தால், உளவுத்துறைக்கு மாற்றப்பட்டார். முன்னதாக, தமிழ்நாட்டின் முதல் பெண் உளவுத்துறை ஐ.ஜி. என்ற சாதனையைப் படைத்தார். மேலும், உளவுத்துறையின் முதல் பெண் டி.ஐ.ஜி.யும் ஆசியம்மாளே என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்