தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில் வளிமண்டலத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஜூலை.20) முதல் ஜூலை 22ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடி மின்னலுடன் மழை
இந்நிலையில், சென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முன்னதாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, வேலூர் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் நாள்களில் வானிலை
மேலும், நாளை ஜூலை 21 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை,சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூலை 22 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருப்பத்தூர்,வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.