தமிழ்நாட்டை மூன்று மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்னரே திரியை கொளுத்தி போட்டு இருக்கிறார்.
நீண்ட நெடிய காத்திருப்பு ; சிறியவையே சிறப்பானவை என்ற தலைப்பில் தனது முகநூலில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தமிழ்நாட்டை விட சற்று கூடுதலாக, அதாவது 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்திலும், இன்னும் கொஞ்சம் குறைவாக உள்ள அசாமிலும் ஏன் பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகின்றன? என கேள்வி எழுப்பியுள்ள ராமதாஸ், அங்கு தலைதூக்கியிருக்கும் தீவிரவாதமும் அமைதியின்மையும்தான் அதற்கு காரணம் என அதற்கான பதிலையும் தனது பதிவிலேயே கொடுத்திருக்கிறார். அதோடு தீவிரவாதத்திற்கும், அமைதியின்மைக்கும் காரணம் வளர்ச்சியின்மையும், பரந்து விரிந்துள்ள நிலப்பரப்பை முறையாக நிர்வகிக்க முடியாததும்தான் என சொல்லி, மேற்கு வங்கத்தை மூன்றாக பிரித்து கூர்க்காலாந்து, காம்தாப்பூர், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களை உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்கப்பட்டால்தான் அங்கு வளர்ச்சி என்பது சாத்தியமாகும் என தனது பதிவில் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தை ஒரே முதல்வர் நிர்வகித்தால் எப்படி வளர்ச்சி என்பது அங்கு சாத்தியமாகும் என கேட்டு, அம்மாநிலத்தையும் 5-ஆக பிரிக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுவருதாகவும் பதிவிட்டுள்ளார். மகாராஷ்ட்ராவை 5-ஆக பிரிக்க வேண்டும். குஜராத், அசாம், பீகார், மத்தியபிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கும் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளதாக தெரிவித்துள்ள ராமதாஸ், புதிய மாநிலங்கள் பிரிக்கப்படுவது நிச்சயம் நல்லதுதான் என்றும், அதற்கு எடுத்துக்காட்டாக கடந்த 2000-வது ஆண்டில் பீஹார், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களைப் பிரித்து ஜார்க்கண்ட், உத்தரகாண்ட், சத்தீஸ்கர் ஆகிய 3 புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன என்றும், புதிதாக பிரிக்கப்பட்ட 3 மாநிலங்களும் அவற்றின் தாய் மாநிலங்களை விட அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், 2014-ஆம் ஆண்டில் பிரிக்கப்பட்ட ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களும் கூட போட்டிப்போட்டுக் கொண்டு வளர்ச்சியடைந்து வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
ஆகவே மாநிலங்கள் பிரிக்கப்படுவது மிகவும் நல்லதுதான் என்றும் அது வளர்ச்சிக்கு நிச்சயமாக வழி வகுக்கும் எனவும் கூறியுள்ளதோடு, தமிழ்நாட்டையும் மூன்றாக பிரிக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் இருப்பது நினைவுக் கூறத்தக்கது என குறிப்பிட்டிருக்கிறார்.
சென்னை, கோவை ஆகியவற்றுக்கு இணையாக மதுரையில் தொழிற்சாலைகள் இல்லை என்பதால் தென் மாவட்டங்களை தனியாக பிரிக்க வேண்டும் என்று அங்குள்ளவர்களும், கொங்கு நாடு என்ற புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்று கொங்கு மண்டலத்தில் உள்ளவர்களும் வலியுறுத்தி வருகின்றனர் என தனது பதில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்
ராமதாஸ் சொல்வதுபோல தமிழ்நாட்டை மூன்றாக பிரித்தால் வளர்ச்சி ஏற்படுமா ? தமிழ்நாட்டை மூன்றாக பிரிக்க சொல்லும் கோரிக்கை சரியானதுதானா என்ற கேள்வியை அரசியல் கட்சி மற்றும் இயக்க தலைவர்களிடம் முன் வைத்தோம் :-
- தங்கம் தென்னரசு, முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், திமுக
தமிழ்நாட்டை பிரிக்கவேண்டும் என்ற பாமக நிறுவனர் ராமதாசின் கருத்து தமிழ்நாட்டை துண்டாடும் முயற்சி, இதற்கு யாரும் பலியாகிவிடக் கூடாது. இந்த கோரிக்கை என்பது முழுக்க முழுக்க அரசியல் சுயலாபத்திற்கானது, இதனால் வளர்ச்சி தமிழ்நாட்டிற்கு அல்ல; ஒருவேளை அவருக்கும் அவர் சார்ந்தவர்களுக்குமாக இருக்கலாம். அவரது இந்த சுயநலம் தமிழ்நாட்டில் பலிக்காது. அவர் சொல்வது மாதிரி பிரிந்த மாநிலங்களில் என்ன பெரிய வளர்ச்சி ஏற்பட்டுவிட்டது? அவரால் அவற்றை குறிப்பிட்டு சொல்ல முடியுமா? தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது தனி மாநிலங்களாக பிரித்தால்தான் வரும் என்பது கிடையாது. மதுரை உள்ளிட்ட தென் தமிழ்நாட்டு மக்கள் மீதான நலனில் அக்கறை கொண்டு ராமதாஸ் இப்படி கோரவில்லை, அவரது சுயலாபத்திற்காகவே இந்த கோரிக்கையை முன் வைத்திருக்கிறார். இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது ; இது அனைவராலும் நிராகரிக்கப்படவேண்டிய ஒன்று.
- செம்மலை, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர், அதிமுக
மாநிலத்தை பிரிப்பதில் நல்லதும் இருக்கிறது, அல்லாததும் இருக்கிறது. மாநிலத்தை பிரிப்பது என்பது மக்களின் விருப்பமாகதான் இருக்கவேண்டுமே தவிர, அரசின் நோக்கமாகவோ அல்லது அரசியல் கட்சிகளின் எண்ணமாகவோ இருக்கக்கூடாது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இதுவரை அப்படிப்பட்ட கோரிக்கை பொதுமக்களிடமிருந்து எழவில்லை. மாநிலத்தை பிரித்து தனி மாநிலமாக உருவாக்கிதான் ஒரு பகுதியில் வளர்ச்சியை எட்டவேண்டும் என்பது இல்லை. அதேபோல், ஒரு மாநிலத்தை பிரிப்பது என்பது மாநில அரசின் கையில் கிடையாது. அதனை முடிவுசெய்ய வேண்டியது மத்திய அரசுதான். தமிழ்நாட்டை மூன்றாக பிரிக்க வேண்டும் என்று சொல்வது ராமதாசின் சொந்த விருப்பம் என்றுதான் நான் கருதுகிறேன்.
- அண்ணாமலை, மாநில துணைத்தலைவர், பாஜக
தமிழகத்தை பிரிக்கவேண்டிய தேவை இல்லை என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட கருத்தும் பாஜகவின் கருத்தும். அதேநேரத்தில் எல்லா பகுதிகளும் சமமாக வளர்ச்சி பெற வேண்டும். தெலுங்கானா மாநிலம் ஆந்திராவோடு போட்டிப்போட்டுக்கொண்டு வளர்கிறது என்பது லாஜிக்காக சரியாக இல்லை. தமிழ்நாட்டை பிற மாநிலங்களோடு ஒப்பிடக்கூடாது என்பதோடு தமிழகத்தை ஆர்.எஸ்.எஸ். பிரிக்க பார்க்கிறது என்பது ஒரு பொய்யான கூற்று ஒன்று இருக்கிறது ; அதை ஏற்றுக்கொள்ள முடியாது.
- பெ.மணியரசன், தலைவர், தமிழ் தேசிய பேரியக்கம்
தமிழ்நாட்டை மூன்றாக பிரிக்க வேண்டும் என்ற ராமதாசின் கோரிக்கை, தமிழ் இன தாயகம் தமிழ்நாடு என்பதை சிதைத்துவிடும். மொழிவழி, இன வழி மாநிலங்கள் இருக்கக்கூடாது, மத்தியில் ஒரு அரசு இருக்கும்போது பின்னர் ஏன் மாநிலங்களுக்கு தனியாக அரசு?, நிலப்பரப்பை நிர்வாக வசதிக்காக பல்வேறு மொழிபேசும் மக்களை இணைத்து, ”ஜன்பத்” என்ற நிலக்கூறுகளாக பிரித்துக்கொள்ளலாம் என்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அஜெண்டா. அதைதான் ராமதாஸ் வழிமொழிகிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்தோடு உடன்பாடு இல்லாவிட்டாலும், அவர் முதலமைச்சராகவேண்டும் என்ற கனவில் இந்த கோரிக்கையை அவர் முன் வைத்திருக்கிறார் என்று தான் நான் நினைக்கிறேன். ஏன் ராமதாஸ் மாநிலத்தை துண்டாடி, மூன்றாக பிரித்து அதில் ஒன்றில் முதல்வராக ஆக ஆசைப்படவேண்டும் ? அதற்கு பதிலாக அவர் ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கான கொள்கைகளை பேசி, தமிழ் இனத்தின் நம்பிக்கையை பெற்று, ஒட்டு மொத்த தமிழ்நாட்டுக்கே முதல் மந்திரியா வரலாமே ? அப்படி ஒரு பொதுத்தலைவராக அவர் விரும்பவில்லை, அது முடியாது என நினைக்கிறார். அதனால்தான் மாநிலங்களை பிரிக்க நினைக்கிறார்.
ஜார்க்கண்ட் மாநிலம் எல்லாம் பல்வேறு போராட்டங்கள், உயிரிழப்புகளுக்கு பின்னர் இனவழி மாநிலமாக பிரிந்தது. தமிழ்நாடும் இன வழி மாநிலம், அதன் எல்லையை தொல்காப்பியத்தில் ”வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகு” என்றும், சிலப்பதிகாரத்தில் ”இமிழ்கடல் வேலியை தமிழ்நாடாக்கின” எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த வாசகங்கள் மூலம் தமிழ்நாடு என்ற பரப்பு புவியியில் ரீதியாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளதை அறியலாம். அப்பேர்பட்ட தமிழ்நாட்டை ராமதாஸ் துண்டாட நினைப்பது சரியல்ல. மொழி, இனம், தாயகம் இவை மூன்றும் இயற்கையின் படைப்பு. நாமாக இதை உருவாக்க முடியாது. அப்படி உருவாக்க நினைப்பதும் அறிவுடமையாகாது.
- ஆழி.செந்தில்நாதன், தன்னாட்சி தமிழகம்
முதலில் தென்னிந்தியாவையும் வட இந்தியாவையும் ராமதாஸ் ஒப்பிடுவதே தவறு. வடக்கே மொழி வழி மாநிலம் என்ற அமைப்பே கிடையாது என்பதை ராமதாஸ் அறிந்திருக்கிறாரா ? ஆனால், தெற்கே இருப்பது மொழி வழி மாநிலங்கள். ஆந்திரா – தெலுங்கான இரண்டாக பிரிந்த பின்னர், மத்திய அரசிடமிருந்து நிதிகளையும், திட்டங்களையும் வலியுறுத்தி வாங்கும் திறனும், வளர்ச்சி விகிதம் அந்த மாநிலங்களுக்கு குறைந்துபோயிருக்கிறதே தவிர ராமதாஸ் சொல்வதுபோல் அதிகரிக்கவில்லை. தமிழகத்தை மூன்றாக பிரிப்பது என்பது மிகமிக ஆபத்தான வாதம். அது சாதியரீதியாக உருவாகக்கூடிய எண்ணமே தவிர, வளர்ச்சியை மையமாக வைத்ததில்லை. ராமதாஸ் சொல்லும் வடகிழக்கு மாநிலங்கள் எல்லாம் சிறியவைதான் அங்கு என்ன வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது ? அதிகாரங்கள் கிடைத்திருக்கிறது ?
தன்னுடைய அரசியல் தேவைகளுக்காக மாநிலத்தை பிரிக்க வேண்டும் என்கிறார். மொழிவாரி மாநிலங்கள் எல்லாம் தேசிய இனங்கள் அந்த மாநிலத்திற்குள் அதிகாரங்களை பகிர்ந்து தரனுமே தவிர மாநிலத்தை உடைக்க கூடாது. இதே வாதத்தை இந்தியாவிற்கு ராமதாசால் வைக்கமுடியுமா? ஏன் இவ்வளவு பெரிய நாடாக இருக்கிறது? பத்து துண்டாக உடையுங்கள் என்று அவரால் சொல்லமுடியுமா? அப்படி சொன்னால் தேச விரோதி என்று சொல்லிவிடமாட்டார்களா? தாயகங்களையும் தேசிய இனங்களையும் உடைக்க கூடாது. அதற்கு மாறாக அதற்குள் அதிகார மண்டலங்களை வேண்டுமானால் உருவாக்கிக்கொள்ளலாம். வளர்ச்சியை காரணம் காட்டி ஒரு மொழிவாரி மாநிலத்தை பிரிப்பது என்பது பலவீனத்தை ஏற்படுத்துமே தவிர, பலத்தை தராது. தமிழ்நாடு, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களுக்கெல்லாம் இன்னும் கொஞ்சமாவது பலம் இருக்கிறதென்றால் அது ஒரே மாநிலமாக இருப்பதால்தான். எல்லாம் உடைக்கப்பட்டுவிட்டதென்றால் புதுச்சேரிக்கும், மேகலாயாவுக்கும் கோவாவுக்கும் உள்ள அதிகாரங்கள்தான் நமக்கு கிடைக்கும். 30 எம்.பி, 40 எம்.பி இருந்தால்தான் கொஞ்சமாவது ஒன்றிய அரசிடம் திட்டங்களை கோரிக்கைகளை கேட்டுப்பெற முடியும். 3 எம்.பி, 4 எம்.பி என கொண்டுபோய் விட்டால் நமது கோரிக்கைகளை யார் கண்டுகொள்வார்கள் ?
கொஞ்சமாவது ராமதாஸை புள்ளிவிவரங்களோடு பேசச்சொல்லுங்கள். இந்தியாவில் வளர்ச்சியடைந்த மாநிலங்களில் பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள் என இரண்டாக பிரிப்பார்கள். பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்ட்ரா போன்றவைகளும், சிறிய மாநிலங்களில் இமாச்சல பிரதேசம், டெல்லி, கோவா, புதுச்சேரி இப்படி வரும் இந்த இரண்டிலும் வளர்ச்சி அடைந்த மாநிலங்களும் உண்டு, வளர்ச்சி அடையாத மாநிலங்களும் உண்டு. ஒரு மாநிலத்தை பிரித்து சிறியதாக ஆக்கினாலே வளர்ச்சி வந்துவிடும் என்று ராமதாஸ் சொல்வது நகைப்பைதான் ஏற்படுத்துகிறது. வளர்ச்சி பெறுவதும் பெறாததும் மாநிலத்தின் பொருளாதார நடவடிக்கைகளால்தான், அளவுகளினால் அல்ல. ராமதாசின் நோக்கமே வேறு. ஒட்டுமொத்த தமிழகத்தில் தன் கட்சியை வளர்க்க முடியவில்லை. தன் மகனை முதல்வராக்க முடியவில்லை. அதனால் இப்படி மாநிலத்தை உடைத்து சாதி பெரும்பான்மை அடிப்படையில் முதல்வராக முடியுமா என ஆசைப்படுகிறார். சுய நலத்திற்காக தன்னுடைய மாநிலத்தையே, இனத்தையே துண்டாட நினைக்கிறார் ராமதாஸ். இந்தியாவில் இருக்கும் மொழிவாரி மாநிலங்களை ஒழித்துகட்டும் பாஜகவின் இன்னும் சரியாக சொல்லவேண்டுமென்றால் ஆர்.எஸ்.எஸ்-சின் குரலாக்தான் ராமதாஸ் ஒலிக்கிறார். பாஜக பெரிய மாநிலங்களை உடைத்து சிறிய மாநிலங்களை உருவாக்க நினைக்கவில்லை. அவர்கள் யூனியன் பிரதேசங்களை உருவாக்க திட்டமிடுகின்றனர். அதன்பிறகு அம்மாநிலத்தில் முதல்வர் ஆனாலும் எந்த அதிகாரமும் இருக்காது. அப்படி தமிழகம் ஆக வேண்டும் என்று ராதமாஸ் ஆசைப்படுகிறாரா ? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக மூத்த தலைவர் செம்மலை சொன்னதுபோல், மாநிலத்தை பிரிக்க வேண்டும் என்பதை அரசியல் கட்சியோ, அரசோ முடிவு செய்யக்கூடாது ; அதனை முடிவு செய்யவேண்டியது அம்மாநிலத்தின் மக்கள் !