தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளும், தமிழ் தேசிய இயக்கங்களும் ஆழமாக வேர் ஊன்றி ஆலமரமென விரித்து பகுத்தறிவையும், தமிழ் உணர்வையும் பரப்பிக்கொண்டிருந்தாலும் இன்னமும் கூட சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழ் நுழையமுடியாமல் இருப்பது, தமிழ் குடிகளுக்கு நித்தமும் நிகழ்ந்துக்கொண்டிருக்கும் அவமானம்.
தமிழ் மரபில் உதித்த சோழ பேரரசர்களால் கட்டப்பட்ட தில்லை நடராஜர் கோயில் நிர்வாகம் தமிழ்நாடு அரசு வசம் இல்லாமல் தீட்சதர்களிடம் இருப்பதும், அவர்கள் தமிழை நீச மொழி இன இகழ்ந்து இழிவுப்படுத்திவருவதும் வாடிக்கையாக நடந்துக்கொண்டிருக்கும் வரலாறு. தாங்கள் கட்டாத ஒரு கோயிலுக்கு அதுவும் தமிழர்கள் கட்டிய வரலாற்று சிறப்பு மிக்க ஆலயத்துக்கு சம்பந்தமே இல்லாத தீட்சதர்கள் உரிமை கொண்டாடிவருவதும் அதனை கண்டும் ஒன்றும் செய்யமுடியாமல் இதுநாள் வரை அரசும் மவுனம் காத்து வருவதும் உண்மையிலேயே வருந்தத்தக்கது.
’தீட்சதர்’ என்ற சொல்லே தமிழ் சொல் அல்லாதபோது, தமிழர்கள் கட்டிய கோயிலுக்கு அவர்கள் எப்படி உரிமைக்கொண்டாட முடியும் ? சைவ சமய குறவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் உள்ளிட்ட யாரும் தங்களது பாடல்களிலோ பதிகங்களிலோ ‘தீட்சதர்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியதில்லை. அப்படி இருக்கும்போது தீட்சதர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள், தீடிரென முளைத்து வந்து சிதம்பரம் கோயிலை கைப்பற்றிக்கொண்டு கோயில் எங்களுக்குதான் பாத்தியப்பட்டது என்று சொல்வதை தமிழர்கள் எப்படி ஏற்பார்கள் ?
தீட்சதர்களுக்கு முன்னர் சிதம்பரத்தில் இருந்தவர்கள் ‘தில்லை வாழ் அந்தணர்கள்’ பெரியபுராணம் உள்ளிட்ட சைவ இலக்கியங்கள் அனைத்தும் தில்லை வாழ் அந்தணர்கள் குறித்து பேசுகின்றதே தவிர ; தீட்சதர்கள் பற்றி எங்கும் குறிப்பிடவில்லை. எனவே, தில்லை வாழ் அந்தனர்கள் வேறு – தீட்சதர்கள் வேறு.
இப்படி எங்கோ இருந்து வந்து சைவ சமயத்தின் மணிமகுடமாக விளக்கும் தில்லை நடராஜர் கோயிலை உரிமைக்கொண்டாடும் இவர்கள், கோயில் சொத்துகளையெல்லாம் முறைகேடாக விற்று வீங்கிப்போயிருப்பது நீதிமன்ற தீர்ப்புகளிலேயே அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. நடராஜர் பெயரில் இருந்த தில்லை கோயில் தீட்சதர் ஒருவர் தன்னுடைய பெயரை பயன்படுத்தி கோயில் சொத்துக்களை விற்ற ஆவணங்களை சரிபார்த்த பிறகே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பானுமதி தீட்சதர்களுக்கு எதிராக தீர்ப்பளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோயில் நிர்வாகத்தை தமிழ்நாடு அரசிடம் கொடுக்கக் கூடாது என்பதுமட்டுமில்லாமல், கோயிலில் தமிழ் மொழியே நுழைந்துவிடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்த தீட்சதர்களை மீறி, தில்லையம்பதி சிற்றம்பல மேடைக்கு சென்று தேவாரம் பாடிவிடவேண்டும் என்று தீவிரமாக இயங்கியவர் பெரியவர் ஆறுமுகசாமி.
சிதம்பரம் நடராஜர் கோயில் அர்த்தமண்டபத்தில் நுழைந்து தேவாரம் பாட முயன்ற ஆறுமுகசாமியை அவமானப்படுத்தியது மட்டுமில்லாமல் அவர் கைகள் முறியும் அளவுக்கு அடித்து துவைத்தனர் தீட்சதர்கள். கைகள் முறிந்தாலும் தன் உயிரே போனாலும் பரவாயில்லை, சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடாமல் விடமாட்டேன் என பீனிக்ஸ் பறவையைபோல சிலிர்த்தெழுந்தார் அவர். தமிழை அர்த்தமண்டபத்தில் ஏற்ற களப்போராட்டம், சட்டப்போராட்டம் என தள்ளாத வயதிலும் தமிழுக்காக களமாடிய ஆறுமுகசாமிக்கு, கடந்த 2008ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடலாம் என்று அனுமதி வழங்கி ஆணையிட்டது. இதனையடுத்து, அவரை யானை மீது ஏற்றி அர்த்தமண்டபம் அழைத்து வந்தபோது, கோயில் வாசலில் வரிசைக்கட்டி நின்ற தீட்சதர்கள் தமிழ் பாட வரும் தமிழர்களை தடுக்க முயன்றனர். போலீசார் உதவியுடன் சிற்றம்பல மேடைக்கு சென்று ‘நால்வர் மடத்தை’ சேர்ந்த ஆறுமுகசாமி, சத்தியவேல் முருகன் உள்ளிட்டோர் தேவாரம் பாடி, அறுபது ஆண்டுகளுக்கு பின்னர் தமிழை தில்லைக்குள் அழைத்துச் சென்றனர்.
அதன்பிறகு, கடந்த 2009ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பில் இருந்த கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தீட்சதர்கள் தொடர்ந்த வழக்கில் 2009 பிப்ரவரி 2ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற ஒரு நீதிபதி அமர்வு தீர்ப்பளித்தது.
அதன்படி, சிதம்பரம் நடராஜர் கோயிலை நிர்வகிக்க இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல் அதிகாரியை நியமித்த தமிழக அரசின் உத்தரவு சரிதான் என்று கூறி, தீட்சதர்களின் மனுவை தள்ளுபடி செய்தது.
சென்னை உயர்நீதிமன்ற ஒரு நபர் நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சுப்பிரமணியன்சுவாமியும் சில தீட்சதர்களும் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த, உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது. அதில் ‘தீட்சதர்களோ, அவர்களது மூதாதையர்களோ சிதம்பரம் கோயிலை கட்டவில்லை, அதனால் கோயிலின் மீது தீட்சதர்களுக்கு உரிமைக் கொண்டாட முகாந்திரம் இல்லை என கூறி, கோயில் சொத்துக்களை பாதுகாக்கவும், நிர்வகிக்கவும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கோயிலுக்கு செயல் அதிகாரியை நியமித்த உத்தரவு செல்லும்’ எனவும் கடந்த 2009ஆம் ஆண்டு செப்டெம்பர் 15ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், இதனையும் ஏற்றுக்கொள்ளமுடியாத தீட்சதர்களும், சுப்பிரமணியன்சுவாமியும் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த சமயம் தமிழ்நாட்டிலும் திமுக ஆட்சி மாறி, ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி பொறுப்பேற்றிருந்தது.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளான பி.எஸ்.சவுகான், எஸ்.ஏ.பாப்டே அடங்கிய அமர்வு, கோயில் நிர்வாகத்தை அறநிலையத்துறையால் நியமிக்கப்பட்ட அதிகாரி மேற்கொள்ளலாம் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, கோயிலின் நிர்வாகத்தை மீண்டும் தீட்சதர்கள் வசமே ஒப்படைப்பதாக கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தீர்ப்பு வழங்கியது.
போதுமான ஆதாரங்களும், தீட்சதர்களுக்கு கோயில் சொந்தமில்லை என்ற ஆவணங்களும் தமிழக அரசிடம் இருந்தபோதும் சரியான வாதங்களை தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் எடுத்து வைக்கத் தவறியாதால் தீர்ப்பு தீட்சதர்களுக்கு சாதகமாக மாறியது.
இப்போது, மீண்டும் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்திருக்கும் நிலையில் பிராமணர் அல்லாதவர்களை அர்ச்சராக நியமித்தது அதிலும் பெண்களை ஓதுவார்களாக ஆக்கியது, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் ‘தமிழில்’ வழிபாடு நடத்த உத்தரவிட்டது, கோயிலுக்கு சொந்தமான நிலங்களை வைத்திருக்கும் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து அவற்றை மீட்பது, கோயில் சொத்துக்கள் அடங்கிய விவரங்களை இணையதளங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டது என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருவது பொதுமக்களிடையே பெருவாரியான பாராட்டை பெற்றிருக்கிறது.
இதனைப்போன்றே, தமிழர்களுக்கு சொந்தமான, தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சதர்களிடமிருந்து மீட்டு, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர சட்டமன்றத்தில் தனிச் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்றும், தமிழை மீண்டும் தில்லையம்பலத்தில் ஒலிக்கச் செய்ய உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தமிழர்களுக்கு சாதமான தீர்ப்பை பெற வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்