அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் நீண்ட நாட்களாக வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. சென்னையில் மறைமலை நகர் மற்றும் குஜராத்தின் சனந்த் பகுதிகளில் அந்நிறுவனத்தின் வாகனங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.



 

இந்த ஆலைகளில் வருடத்திற்கு நான்கு லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில், தற்போது 80,000 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் அந்நிறுவனத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இந்தியாவில் உள்ள இரு ஆலைகளையும் மூட ஃபோர்டு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. 

 

மறைமலைநகர் தொழிற்சாலை

 

தற்போது,  சென்னை அடுத்துள்ள மறைமலை நகரில் இருந்து ஃபோர்டு நிறுவனம் வெளியேறுவதால், நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் சுமார் 19 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது மறைமலைநகரில் உள்ள தொழிற்சாலையில், நிரந்தர பணியாளர்களாக 2650 நபர்கள் பணியாற்றி வருகிறார்கள். 400க்கும் மேற்பட்ட பயிற்சி தொழிலாளர்களும், 700 நிர்வாகப் பணியாளர்களும், அதேபோல் நேரடி ஒப்பந்த பணியாளர்களை இரண்டாயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.



 

இதுமட்டுமின்றி அந்த நிறுவனத்திற்கு உணவு, டீ, அடிப்படை வசதிகள் , ஓட்டுனர்கள் உள்ளிட்ட பணி செய்து தரும் மறைமுக பணியாளர்கள் 2500 க்கும் மேற்பட்ட நபர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிறுவனத்தின் மூலம் சுமார் 7 ஆயிரம் பணியாளர்களின் நேரடியாக பயன்பெற்று வருகின்றனர்.

 


 

மேலும் இந்த நிறுவனத்திற்கு உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் சுமார் 30 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் நிறுவனத்திற்கு மட்டும் பிரத்யேகமாக உதிரி பாகங்கள் தயாரிக்கும் மறைமுக ஊழியர்களாக, சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்பொழுது இந்நிறுவனம் மூடப்படும் என்பதால் மறைமுக பணியாளர்களாக பணிபுரிந்து வரும், 12000 நபர்களுக்கான வேலை இழப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது.  மொத்தம் சுமார் 19 ஆயிரம் பணியாளர்கள் நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. 

 

 ஊழியர்களின் எதிர்பார்ப்பு

 

இது ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வரும் தொழிற் சங்க உறுப்பினர் செல்வம் கூறுகையில், நேற்று திடீரென்று நிர்வாகம் சார்பில் தொழிற்சங்க உறுப்பினர்களை அழைத்து பேசினார்கள். அப்பொழுது நிறுவனம்  தொழிற்சாலை மூடப்படுவதாகவும், செட்டில்மெண்ட் உள்ளிட்டவற்றை வரும் திங்கட்கிழமை பேசிக்கொள்ளலாம் என தெரிவித்தனர். இந்த நிறுவனத்தை விற்கும் பொழுது,  எங்களுக்கும் வேலை உறுதி செய்யுங்கள் என கோரிக்கை வைத்துள்ளோம் என தெரிவித்தார். மேலும் திங்கட்கிழமை நடக்கும் ஆலோசனைக்கு பிறகு இறுதி முடிவு எட்டப்படும் தெரிவித்தார்.



 

இதுகுறித்து சிஐடியு மாநில துணைப்பொதுச்செயலாளர் கண்ணனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம்  முழு விவரங்களை தெரிவிக்காமல், தொழிற்சாலையை மூடுவதாக அறிவித்து இருப்பது மிக வருத்தமான செயல், இதுகுறித்து உடனடியாக ஊழியர்களிடம் தொழிற்சாலை நிர்வாகம் முழு விவரத்தை தெரிவிக்க வேண்டும். இதில் பணிபுரியும் ஊழியர்களின் எதிர்காலத்தை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.



 

அமைச்சர் விளக்கம்

 

இதுகுறித்து தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ அன்பரசனிடம் ABP NADU  தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, ஃபோர்டு   நிறுவனத்தை டாடா  வாங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும். அவ்வாறு ஒரு நிறுவனம் இன்னொரு நிறுவனத்திற்கு, கை மாறும் பொழுது அதில் இருக்கும் ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் தெரிவித்தார்.