விழுப்புரத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை வரவேற்று பேனர் கட்டும் பணியில் ஈடுபட்ட 8ஆம் வகுப்பு படிக்கும்  13 வயது தினேஷ் சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


பேனர் வைக்கும்போது ஏற்பட்ட மரணங்கள், சாலையில் வைக்கப்பட்ட பேனரால் ஏற்படும் விபத்தில் மரணங்கள் என்பது தமிழ்நாட்டில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. இத்தனைக்கும் சாலைகளில் பேனர் வைப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்த உள்ள நிலையிலும், இது தொடர்ந்துகொண்டே இருப்பதுதான் இன்னும் பெரும் சோகமாக உள்ளது. எந்த கட்சியின் ஆட்சியின் நடைபெற்றாலும் பேனர் வைப்பது தடுக்கப்படவில்லை என்பதே, விழுப்புரத்தில் நேற்று சிறுவன் ஒருவன் பேனர் வைக்கும்போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவமே சாட்சி.




சாலையில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்க தமிழ்நாடு முழுவதும் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2018 டிசம்பர் 19ஆம் தேதி உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவை மீறியே பலர் செயல்பட்டு வருகிறனர்.


கடந்த 2018 டிசம்பர் 16 ஆம் தேதி நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் சென்னை வந்தனர். அவர்களை வரவேற்கும் வகையில் சென்னை மாநகரில் பெரும்பாலான இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.


இதனைத் தொடர்ந்து, விதிகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டதாகவும், இதற்கு அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளதாகவும் கூறி அண்மையில் உயிரிழந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பேனர்கள் அகற்றப்பட்டு விட்டதாகவும், யார் மீதும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றும், மாநகராட்சி மற்றும் காவல்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் சத்திய நாராயணன், ராஜ மாணிக்கம், 2016ஆம் ஆண்டு முதல் பேனர் வழக்கில் பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டும் அதனை பின்பற்ற மாநகராட்சி அதிகாரிகள் தவறி வருவதாக கூறினர். மேலும், இந்த நிலை தொடர்ந்து கொண்டே இருப்பதை தவிர சிறு முன்னேற்றமும் இல்லை எனவும் வருத்தம் தெரிவித்தனர். அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் இனி பேனர்கள் வைக்க அனுமதிக்கப்படாது என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சட்டவிரோதமாக அனுமதியின்றி சாலைகளில் பேனர் வைக்க நீதிபதிகள் தடை விதித்தனர்.




ஆனால், நீதிமன்றத்தின் எந்த உத்தரவையும் செயல்படுத்தாமலே தற்போது வரை, சாலைகளில் விதிகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக அரசியல் கட்சித் தலைவர்களுக்காக வைக்கப்படும் பேனர்களே சாலைகளில் அதிகம் காணப்படுகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில், சென்னை பள்ளிக்கரணையில், சாலையில் வைக்கப்பட்ட அதிமுக பேனரால் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த சம்பவத்துக்கு அதிமுகவுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், திமுகவின் சார்பில் சட்டத்தை மீறி அனுமதி இல்லாமல் பேனர்கள் எங்கும் வைக்கமட்டோம் என உயர்நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், அதிமுக, திமுக சார்பில் தொண்டர்கள் யாரும் பேனர் வைக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டது.




ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, அனுமதியின்றி பேனர்கள் வைப்போர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், அதனையும் மீறி பேனர்கள் வைக்கப்படுகிறது. ஆனால், நடவடிக்கைகள் எடுத்தார்கள் என்பது கேள்விகுறியாகவே உள்ளது.


தற்போது, திமுக கட்சிக்காக பேனர் வைக்கப்போய் பள்ளி சிறுவன் உயிரிழந்துள்ளான். இதற்காக திமுக என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று தெரியவில்லை. பேனரால் எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும், நீதிமன்றங்கள் எவ்வளவு உத்தரவு பிறப்பிதாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்ற சில நாட்களுக்கு அதுபற்றி பேசப்பட்டு, அதன்பிறகு பழையபடி தொடர்ந்து வருவது வேதனையாகவும், சோதனையாகவும் உள்ளது.


அமைச்சர் வருகைக்காக கொடி கட்டிய சிறுவன் பலி..! சந்தேக மரணம் என வழக்குப் பதிவு