விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை வரவேற்று பேனர் கட்டும் பணியில் ஈடுபட்ட 8ம் வகுப்பு படிக்கும் சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுவனின் தாய் லக்ஷ்மி ஏகாம்பரம் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது .




அதில் ’’எனக்கு ஏகாம்பரம் என்பவருடன் திருமணம் ஆகி மூன்று பிள்ளைகள் உள்ளது. அதில் எனது இளைய மகன் தினேஷ் (வயது 13) தற்சமயம் பூந்தோட்டம் நகராட்சி பள்ளியில் எட்டாம்வகுப்பு படித்து வருகிறான். தற்சமயம் பள்ளி விடுமுறை என்பதால் இன்று (20.8.21) காலை வெளியே செல்வதாக சென்று இருந்தார். மதியம் சுமார் 2 மணியளவில் எனக்கு வெங்கடேசன் என்பவர் போன் செய்து மகனுக்கு மின்சாரம் தாக்கிவிட்டதாகவும் விழுப்புரம் பழைய அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து இருப்பதாகவும், உடனடியாக என்னை வரும்படி கூறினார். நான் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு பார்த்த போது அலுவலில் இருந்த மருத்துவர் எனது மகன் தினேஷ் சிகிச்சைபலன் அளிக்காமல் மதியம் சுமார் 2 மணியளவில் இறந்துவிட்டதாக கூறினார். பின்னர் விசாரிக்க விழுப்புரம் மாம்பழப்பட்டு ரோடு EB ஆபிஸ் எதிர்புறம் உள்ள சாலை ஓரத்தில் அங்கு வேலை செய்துக்கொண்டிருந்த நபர்களுடன் இரும்பு கம்பியை தனியா தூக்கும்போது சுமார் 13.45 மணிக்கு மேலே சென்ற மின்கம்பியில் பட்டு அதன் மூலம் மின்சாரம் தாக்கி கீழே விழந்தவனை வெங்கடேசன் என்பவர் அங்கு வந்து போக்கு ஆட்டோ மூலம் பழைய அரசு மருத்துமனைக்கு சிகிச்சை கொண்டு சேர்ந்ததாக கூறினார். மின்சாரம் தாக்கி இருந்த என் மகன் மீது எவ்வித சந்தேகம் இல்லை. நடவடிக்கை எடுக்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


முன்னதாக, விழுப்புரம் - மாம்பழப்பட்டு சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நெடுஞ்சாலை துறையில் பணியாற்றும் பொன்குமார் என்பவரது இல்ல திருமண விழா நடைப்பெற்றது. இதில் தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அவரை வரவேற்க தி.மு.க. சார்பில் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் இருந்து தி.மு.க. கட்சி கொடிகள் அலங்கார தோரணங்கள் நடவு செய்யும் பணிகளில் 10 க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு இருந்தனர்.


அதில் விழுப்புரம் ரஹீம் லே- அவுட் பகுதியை சேர்ந்த ஏகாம்பரம் என்பவரது இளைய மகனான விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் 13 வயதே ஆன தினேஷ் என்ற சிறுவனும் கொடி கம்பம் நடும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அச்சாலையில் மின் பகிர்மான கழகம் செயல்பட்டு வருவதால் அங்கு அதிக அளவிலான உயர் மின் அழுத்த கம்பிகள் செல்கின்றன. அப்போது பணியில் ஈடுபட்டு இருந்த சிறுவன் நடவு செய்த கொடி கம்பம், மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி சிறுவன் தினேஷ் தூக்கி வீசப்பட்டான்.




இந்த திடீர் விபத்தால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதில் சிறுவன் படுகாயம் அடைந்தான். சிறுவனை உடன் பணி புரிந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடனடியாக சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.


இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், உயிரின் மதிப்பு என்பது ஆட்சிக்கு ஆட்சி மாறுவதில்லை. சுபஸ்ரீ க்கு ஆதரவாக வாய் பேசியவர்கள் தற்போது எங்கே? குழந்தைகள் நல வாரியம் தலையிட்டு சம்பத்தப்பட்ட தி.மு.க.வினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.




பள்ளிகள் திறக்கப்படாததால்  பள்ளி செல்ல வேண்டிய வயதில் கூலி வேலைக்கு செல்லும் சிறுவர்களின் நிலை உயிரை பறிக்கும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளதற்கு அரசு பதிலளிக்க வேண்டும் எனவும், இது போன்ற பிரதான சாலைகளில் இது போன்ற வரவேற்பு பேனர், கொடி கம்பங்கள் நட மாவட்ட நிர்வாகம், காவல்துறை இனியும் அனுமதி வழஙகாமல் இருந்தால், இது போன்ற உயிரிழப்புகள் நடக்காமல் இருக்கும் என்றனர்.