பன்மொழிப் புலமையாளர், சொல்லாய்வில் ஒப்பாரும், மிக்காரும் இல்லாத அளவில் திகழ்ந்தவர். தமிழின் விடுதலைக்காகவும், வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர். மொழியியற் சிந்தனையாளர், உலகத் தமிழ்க் கழகம் கண்டவர். மொழி ஞாயிறு என்று போற்றப்படும் தேவநேயப் பாவாணரின், அண்ணன் வழி பேத்தியான ரேச்சல் ஜன்னி , வறுமையில் சிக்கி தவித்து வருகிறார் .
தேவநேய பாவாணரின் அண்ணனான குருபாதம் அவர்களின் பேத்தி ரேச்சல் ஜன்னி என்பவர் தற்பொழுது பெரும்பாக்கம் அடுத்த செம்மஞ்சேரி பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். தமிழக அரசால் தாம்பரத்தில் 2010-ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்ட, வீட்டில் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த தொடர்ந்து , தற்போது வறுமை நிலையில் அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத்தை வைத்து வாழ்ந்து வருகிறார்.
இதுகுறித்து அடுத்து ஏபிபி நாடு சார்பில் ரேச்சல் ஜன்னியை தொடர்பு கொண்டு பேசினோம், எனது தாத்தா ஞாயிறு திங்கள் என்று அனைவராலும் போற்றப்படும் தேவநேயபாவாணர் ஆவர். தற்பொழுது வயது மூப்பின் காரணமாக எந்த வேலையும் செய்ய முடியாத காரணத்தினால் வறுமையில் சிக்கி தவித்து வருவதாக தெரிவித்தார்.
மேலும் அரசு தரும் முதியோர் உதவி தொகை 1,000 ரூபாய் வைத்து மட்டுமே என்னுடைய வாழ்க்கையை நடத்தி வருவதாகவும், மற்றும் வீட்டிற்கான வாடகை தொகையை தேவாலயத்தைச் சேர்ந்த பாஸ்டர் கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தன்னுடைய மகன் கடவுள் பணி மேற்கொள்ள சென்று விட்ட காரணத்தினால், அவரிடம் இருந்தும் எந்தவித உதவியும் கிடைக்கவில்லை என ஆதங்கப்பட்டார்.
மேலும் பேசுகையில் தற்பொழுது வண்டலூரில் தன்னுடைய தாத்தாவிற்கு கட்டப்பட்டு வரும் மணிமண்டபத்தில், தனக்கு ஏதாவது எழுத்து வேலை கொடுத்தால் தன்னுடைய வறுமையைப் போக்க உதவும் என தெரிவித்தார். மேலும் தன்னுடைய வயதின் காரணமாக வேறு எந்தவித பணிகளையும் செய்ய முடியவில்லை என தெரிவித்தார். தமிழக அரசு தனக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை.
இதுகுறித்து தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு நிச்சயம் தேவநேய பாவாணரின் பேத்தி அவர்களுக்கு உதவி செய்யப்படும் என சமூக வலைதளம் மூலம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவு செய்துள்ள பதிவில் , பாவாணரின் இரண்டாவது அண்ணன் அவர்களது பேத்தி திருவாட்டி. ரச்சேல் ஜெமிம்மா அவர்களது தற்போதைய நிலை குறித்தும், அவருக்கு உதவிட வலியுறுத்தியும் காலை முதல் பல்வேறு தமிழறிஞர்களும், ஆர்வலர்களும் எனது கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.
அவரைத் தொடர்பு கொண்டு நாளை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து வரும் பணி நடைபெற்று வருகின்றது.மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கருணைப் பார்வையுடன் உரிய உதவிகள் செய்யப்படும் என்பதை அன்புள்ளம் கொண்டுள்ள நண்பர்கள் அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகின்றேன் என பதிவு செய்துள்ளார்.