CM Stalin : பாஜகவுக்கு கூஜா தூக்கியவர் எடப்பாடி பழனிசாமி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
"சேலத்தில் மாபெரும் வெற்றி பெற வேண்டும்”
சேலம் மாவட்டத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அப்போது இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது, ”நாளை நமதே நாற்பதும் நமதே என்பதை உரக்க சொல்ல சேலம் வந்துள்ளேன். ஒவ்வொரு ஊர்களிலும் திமுக கொடி கம்பங்களை புதுப்பிக்க வேண்டும். திமுக சார்ந்த குடும்பங்களை சார்ந்த குழந்தைகளுக்கு படிப்பிற்கு உதவ வேண்டும். நலதிட்டங்களை வழங்க வேண்டும். வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்வதற்கு அச்சாணியாக இருக்கின்ற செயல்வீரர்கள் கூட்டம் தற்பொழுது நடைபெற்றது.
உறுதியாக சேலம் மாவட்டத்தில் மாபெரும் வெற்றியே பெற வேண்டும். சேலத்தில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய உழைப்பீர்கள் என்று நம்பிக்கை உள்ளது. கடந்த பத்தாண்டு காலமாக தமிழகத்தை பாழ்படுத்திக் கொண்டிருந்த அதிமுகவை ஆட்சியிலிருந்து இறக்கிவிட்டு மக்கள் நம்மிடம் வழங்கி உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக திமுகவின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது.
"பாஜகவின் செல்வாக்கு சரிந்து கொண்டே வருகிறது”
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இரண்டு ஆண்டுகளில் மந்தம் வந்துவிடும். ஆனால் அந்த மந்தம் நம்முடைய கட்சியில் வந்து விடக்கூடாது என்று தான் நாம் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். உலகத்திலே திமுக போன்று கட்டமைப்பு கொண்ட கட்சி எங்கும் கிடையாது. எந்த சக்தியாலும் திமுக கட்சியை வீழ்த்த முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ”மாநில வளர்ச்சி, கட்சியின் வளர்ச்சி இரண்டு கண்களாக கொண்டு பணியாற்றி வருகிறோம். நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் அலட்சியமாக செயல்படக்கூடாது. நாளுக்கு நாள் பாஜகவின் செல்வாக்கு சரிந்து கொண்டே வருகிறது. அதற்காக அவர்களை எதை வேண்டுமானால் செய்வார்கள். கர்நாடக நிலை தொடர்ந்தால் முன்கூட்டியே தேர்தலை நடத்த வாய்ப்புள்ளது. எதற்கும் தயாராக இருக்க வேண்டும்" என்றார் ஸ்டாலின்.
”பாஜகவுக்கு கூஜா தூக்கினார் இபிஎஸ்"
தொடர்ந்து பேசிய அவர், ”கொத்தடிமைக் கூட்டமான அதிமுகவை நம்பி பாஜக வருகிறது. ஜெயலலிதாவிற்கு பிறகு தோல்வியை மட்டுமே பெற்ற கட்சி அதிமுக. ஆட்சியில் இருந்த போது உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி, சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி. தோல்வி மேல் தோல்வி அதிமுகவிற்கு கிடைத்துள்ளது. பாஜகவுக்கு கூஜா தூக்கி தன்னுடைய ஆட்சியை காப்பாற்றிக் கொண்டவர் எடப்பாடி பழனிச்சாமி. மக்கள் வெள்ளத்தில் அதிமுக பாஜக இருவரும் அடித்து செல்லப்படுவது உறுதி என்று முதலமைச்சர் ஸ்டாலின் சரமாரியாக விமர்சித்தார்.
மேலும் படிக்க
இது வீடா..கப்பலா..? கடலூரில் கப்பல் வீடு...மனைவியின் ஆசையை நிறைவேற்றிய கணவர்