கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் வளரிளம் பெண்களிடையே ரத்த சோகையை கண்டறிந்து குணப்படுத்தும் திட்டமான "உதிரம் உயர்த்துவோம்" திட்டத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் அரசு துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.15 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட வளரிளம் பெண் குழந்தைகளான 17,043 மாணவிகளில், 7716 பேரை மாதிரியாக வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கரூர் மாவட்டத்தில் 45 சதவீதம் பெண் குழந்தைகளுக்கு ரத்தசோகை குறைபாடு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.இந்த ரத்தசோகை குறைபாட்டை கண்டறிந்து குணப்படுத்த இந்தியாவிலேயே முதன் முறையாக கரூர் மாவட்டத்தில் "உதிரம் உயர்த்துவோம்" என்ற முன்னோடி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழக அரசின் அனுமதியுடன் திட்டம் குறித்த முழுமையான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, பெற்றோர்கள் ஒப்புதலுடன் தீவிர பிரச்சனையை சரிசெய்யும் இந்த திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
தேசிய அளவில் கரூர் மாவட்டத்தில் முதல் முறையாக உதிரம் உயர்த்துவோம் திட்டத்தின் கீழ் வளர் இளம் பெண்களுக்கு இரத்த சோகை கண்டறியும் ஆய்வுகள் நடத்தப்பட்டு தேவைப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தகவல்.கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் அவர்கள் உதிரம் உயர்த்துவோம் திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் உள்ள வளர் இளம் பெண்களிடையே ரத்த சோகையை கண்டறிந்து குணப்படுத்தும் திட்டம் செயல்படுத்துவது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அது குறித்த கையேட்டை வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, கரூர் மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவு படியும், மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் இந்தியாவிலே முதல்முறையாக கரூர் மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி செல்லும் வளர் இளம் பெண்களிடையே ரத்த சோகை நோயை கண்டறிந்து குணப்படுத்தும் உதிரம் உயர்த்துவோம் என்ற திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது கரூர் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் பெற்றோர்கள் உள்ளடக்கி கூட்டங்கள் மற்றும் பயிலரங்கங்கள் மூலம் விரிவான திட்டமிடலுக்குப் பிறகு இந்த திட்டம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு உள்ளது. கரூர் மாவட்டத்தில் பள்ளிகளில் படிக்கும் 17,740 மாணவிகளுக்கு அவர்களின் பெற்றோர்களின் ஒப்புதலோடு 175 பள்ளிகளில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 7 அரசு மருத்துவமனைகள், மற்றும் எட்டு சமூக சுகாதார மையங்களில் உள்ள 16 ஆய்வகங்கள் மூலம் மருத்துவ குழுக்கள் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பரிசோதனைகள் செய்யப்பட்டு முடிவுகள் அறியப்பட்டன. அதன்படி பரிசோதனை செய்யப்பட்டவர்களில் 45 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் உலக சுகாதார நிறுவன ஆலோசனைப்படி லேசான மற்றும் மிதமான ரத்த சோகை உள்ளவர்கள் மற்றும் தீவிரமான ரத்த சோகை உள்ளவர்கள் என்று வகைப்படுத்தப்பட்டு தீவிர பாதிப்புள்ள 3 சதவீதம் பேருக்கும், லேசான மற்றும் மிதமான பாதிக்கப்பட்ட 20.5 சதவீதம் பேருக்கும், லேசாக பாதிக்கப்பட்ட 21% பேருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. மிதமான பாதிப்பு உள்ளவர்களுக்கு நாள்தோறும் இரண்டு இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டு உள்ளது. தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு உள்ளதுடன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களுக்குள்ள பல்வேறு பிரச்சனைகள் கண்டறியப்பட்டுள்ளது.இத்திட்டம் தேசிய அளவில் முன்னெடுக்கப்பட்டுள்ள முன்னோடி திட்டம் ஆகும் நமது மாவட்டத்தில் செயல்படுத்தப்படுவதும் இத்திட்டம் பைலட் திட்டமாக கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பார்வைக்கும், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அவர்களுக்கும் இந்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு திட்டத்தைமாநில முழுவதும் இதை செயல்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும். வளரிளம் பருவப் பெண்களின் இளம் வயதிலேயே ரத்த சோகையை கண்டறிந்து சரி செய்தால் அவர்களின் வாழ்வில் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய தாக்கத்தை, கல்வியை மேம்படுத்துதல் அதன் மூலம் பெண்களுக்கு சமுதாயத்தில் உரிய அதிகாரத்தை அளிக்கும் மிக முக்கியமாக இது கர்ப்ப காலத்தில் இரத்த சோகையை தடுப்பதன் மூலம் தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ஆய்வு முடிவுகளின் படி கடுமையான ரத்த சோகையினால் பாதிக்கப்பட்ட மாணவிகள் அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் மருத்துவ பரிசோதனைக்காக கரூர் மருத்துவர் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு குழந்தைகள் சுகாதார நிறுவனங்களால் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் இந்த சோதனைக்கு பிறகு 520 மாணவியர்கள் பல்வேறு உடல்நல பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டு அதில் 121 மாணவிகளுக்கு உரிய சிகிச்சை அளித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் 9 மாணவிகளுக்கு ரத்த நாளங்கள் வழியாக அயன் செலுத்தப்பட்டு ரத்தம் ஏற்றப்பட்டு உள்ளது.மேலும் இரண்டாவது கட்டமாக ரத்த சோகையை கண்டறிய இரத்த நாளங்களில் இருந்து ரத்தங்களை எடுத்து பரிசோதிப்பது என்பது ஒன்று மற்றொன்று விரல் நுனியில் இருந்து ரத்தங்களை சேகரித்து நவீன கருவியில் பரிசோதனை செய்யும் மற்றொரு முறையாகும் இதில் பயன்படுத்தப்படும் பல்வேறு உபகரணங்களில் எந்த கருவி மிகவும் துல்லியமாக முடிவுகளை காட்டுகிறது என்பதையும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டு அதையும் மாநில அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பித்து உள்ளோம். உதிரம் உயர்த்துவோம் திட்டம் ஒருமுறை செயல்படுத்தும் திட்டமல்ல அது தொடர்ந்து செயல்படுத்தக்கூடிய ஒரு திட்டமாக உள்ளது. இத்திட்டத்திற்கு நாங்கள் ஒரு விதையை விதைத்துள்ளோம் என்று சொல்வது சரியாகும் மேலும் இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி ரத்தசோகை இல்லா கரூர் மாவட்டத்தை உருவாக்க அனைவரும் பாடுபடுவோம் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு உதவிய அனைத்து துறை அலுவலர்களுக்கும் எனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.